RSS

Monthly Archives: மார்ச் 2012

எங்கேயோ தொலைந்த சிரிப்பு ..!

யாரோ போல் பார்த்த பார்வை …
எங்கேயோ தொலைந்த சிரிப்பு ..!
பிறை புன்னகையில் கிரகணம் ;
கண்கள் பார்த்து பேசும் சொற்கள்
விளம்பர ஹோர்டிங்
பார்த்தபடி செல் போனில் பேசும் பாவனையில்

மிச்சமிருக்கிறதா
நெஞ்சில் என் நகத் தழும்பு ?

முயற்சித்து இருக்கிறாய்
உன் மனைவிக்கு நாம் தேர்ந்தெடுத்த
மோதிரத்தை அணிவிக்க
சுண்டு விரலிலும் சதை பிதுங்க….

நிகோடின் படிந்த உதடுகள்
கடை விழியில் உதிரக் கோடுகள்
நிறைய குடிக்கிறாய் போல…

உன்னையும் சேர்த்து
புதைத்திருக்கிறேன்
மார்பிரண்டும் பிரமிடுகளாக

அச்சம் யாதெனில்
சுரக்கும் பாலில் செத்த காதல் கலந்து
என்னையும்
பூதனை ஆக்கி விடுமோ என்பதே…..

இனியேனும் உன் மனைவியை
புணர்கையில் என்னை நினைக்காதே
உன் மகளுக்கு எப்படியோ விழுந்திருக்கிறது
எனது
சாயல்…!

– நேசமித்ரன் மித்ரா

 
9 பின்னூட்டங்கள்

Posted by மேல் மார்ச் 29, 2012 in கவிதைகள்

 

குறிச்சொற்கள்:

நாற்பது இப்போ முப்பது ஆச்சு

கடந்த சில ஆண்டுகளில் சமூக நடைமுறைகள் மற்றும் பாலியல் விதிமுறைகளில் ஏகப்பட்ட மாறுதல்கள் நடந்துள்ளன. அசூயையாகக் கருதப்பட்டவை அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

செக்ஸில் தாராளவாத வெள்ளம் பாய்ந்துவிட்டது. திருமணம் வரை செக்ஸுக்காகக் காத்திருப்பது எல்லாம் கடந்தகால நடைமுறைகள். செக்ஸ் கிடைப்பது அத்தனை சிரமமானதல்ல. எளிமையாகவும், கட்டுப்பாடற்றும் கிடைக்கும் வஸ்துவாக மாறிவிட்டது.

ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் திருப்தியை விரும்புகின்றனர். பள்ளிப் பைகளில் ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகளைக் காணமுடிகிறது. பெருநகரங்களில் மட்டுமல்ல, சிறுநகரங்கள், கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் கட்டற்ற காமம் பரவிவருகிறது.

இது வெறுமனே சூழ்நிலையின் ஒரு கோணத்தைத்தான் காண்பிக்கிறது. இதன் பின்விளைவுகள் மிகவும் பாதகமானவை. பாலுறவின் ஆயுள் அபாயத்தில் உள்ளது. முன்பெல்லாம் 40 வயதில் ஒருவருக்கு பாலியல் ஆரோக்கியம் குறையுமானால், தற்போது 30 வயதிலேயே அந்நிலை ஏற்படுகிறது. பணிரீதியான அழுத்தமும் கடுமையான ஆற்றலைக் கோரும் வாழ்க்கையும் செக்ஸைப் பின்தள்ளிவிட்டன. தம்பதிகளில் இருவரும் பணிக்குச் செல்லும்போது நிலைமை இன்னும் மோசமடைந்து விடுகிறது.

அடிக்கடி மாறுதல்கள், வேலைத்திறன் சார்ந்த மதிப்பிடுதலின் அழுத்தங்கள், மனஅழுத்தம், பொருளாதாரப் பாதுகாப்பின்மையால் ஏற்படும் கவலைகள் சமூகவெளிகள் இல்லாமல் ஆவது, நெருங்கிய உறவுகளிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகமாக இருப்பது ஆகியவற்றின் தாக்கம் படுக்கை அறையிலும் பிரதிபலிக்கிறது.
அமித் கௌரி தம்பதியினரை எடுத்துக்கொள்வோம். இருவரும் ஊடகத்தில் பணிபுரிகிறார்கள். இவர்களுக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த மூன்று மாதங்களாக அமித் காலை ஷிப்டில் வேலைக்குப் போகிறார். கௌரி தனது செய்தித்தாள் பணியிலிருந்து அதிகாலை ஒரு மணிக்கு வீடு திரும்புவார். அவர் வீட்டுக்கு வரும்போது அமித் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார். அவர் வேலைக்குக் கிளம்பும்போது கௌரி உறங்கிக்கொண்டிருப்பார். நாங்கள் எப்போதாவது உடலுறவு கொண்டாலும் அவசரமாகவும் அசிங்கமாகவும் இருக்கும். முழுமையான உடலுறவு இன்பத்தை அனுபவிக்க ஒரு நாள் விடுமுறை தேவையாக உள்ளது’ என்கிறார் கௌரி.

அகமதாபாத்தைச் சேர்ந்த டிஎம் மனநல மையத்தின் முன்னாள் மருத்துவ உளவியலாளரான சுரேஷ் மஜும்தார், “கடுமையான பணிச் சூழ்நிலைகள் மிக அதிகமாகப் பாதிக்கின்றன. மொபைல் தொலைபேசிகளும், கணிப்பொறிகளும் வாழ்க்கையை மாற்றிவிட்டன. நமது வாழ்க்கையை எளிமையாக அவை ஆக்கும் அதேநேரத்தில், கூடுதலான பிரச்னைகளையும் ஏற்படுத்தியுள்ளன. ஒரு நாளைக்கு 17 முதல் 18 மணிநேரம் வேலை செய்யவேண்டிய சூழ்நிலை உள்ளது. யாரும் தமக்காக ஒதுக்குவதற்கு நேரம் இல்லாமல் அவதிப் படுகின்றனர்.

இதனால் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் களைப்படைந்து விடுகின்றனர். இவை அனைத்துமே ஒருவரின் பாலியல் வாழ்க்கையைப் பாதிக்கும். இதனால் நிறையப்பேர் மதுவை நாடும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால் இது பிரச்னையை அதிகரிக்கவே செய்கின்றது” என்கிறார்.

பாலுறவுக்கான உந்துதல் இளம்வயதிலேயே தொடங்கிவிடுகிறது. சீக்கிரமாக பாலுறவு ஆரம்பிப்பதும் அதன் துரித முடிவுக்கு வழிவகுக்கிறது.  பாலியல்ரீதியான குறைபாடு எதுவும் இல்லாவிட்டால் எல்லோரும் எந்த வயதிலும் செக்ஸை அனுபவிக்கலாம். ஒருவருக்கு சிறுவயதிலேயே பாலுறவு உந்துதல் தொடங்கிவிட்டால் சீக்கிரமே அந்த உந்துதல் மங்கவும் தொடங்குகிறது’ என்கிறார் கோலாரைச் சேர்ந்த மருத்துவர் அம்ரேஷ்குமார் சிங்.

ஆரோக்கியமான பாலுறவு வாழ்வுக்கு ஆரோக்கியமான உடலும், அமைதியான மனமும் அவசியம். வாழ்க்கை முறை சார்ந்த நோய்கள்தான் பாலுறவு இச்சையை மங்கவைக்கிறது என்கிறார் புதுடெல்லியில் உள்ள ஹார்ட்கேர் பவுண்டேஷனைச் சேர்ந்த மருத்துவர் கே.கே. அகர்வால். ஒருவர் தன் ஆரோக்கியம் பற்றி கவனிப்பே இல்லாமல் இருப்பது மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும். இளைஞர்களை நீரிழிவும் இதயநோய்களும் தாக்கிவருவது அதிகரித்துள்ளது. இந்நோய்கள் ஒருவரது பாலியல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்” என்கிறார்.

சந்தோஷம் மற்றும் திருப்தியான வாழ்க்கையை வாழ தீயை அணையாமல் காப்பற்றவேண்டியது அவசியமானது.

விமலேந்து குமார் சிங்

 

 
1 பின்னூட்டம்

Posted by மேல் மார்ச் 21, 2012 in கட்டுரை

 

குறிச்சொற்கள்: ,

கதவைத் தட்டும் காமம்

இருபது வயதில் காமம் ஏற்படுத்தும் வலியை விடவும் ஐம்பது வயதில் காமம் ஏற்படுத்தும் வலி உக்கிரமானது. முறிந்த கிளை ஒன்று மரத்திலே தொக்கிக்கொண்டு நிற்பதுபோல வயோகத்தின் காமம் விடுபடமுடியாமலும், அதே நேரம் சுகிக்கச் சாத்தியமற்றும் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

இந்தியக் குடும்பங்களில் ஆணோ, பெண்ணோ ஐம்பது வயதைத் தொடத்துவங்கியதுமே, புலன் இச்சையிலிருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டு வாழவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

குறுந்தொகையில், மிளைபெருங்கந்தன் என்ற கவிஞரின் பாடல் ஒன்று காமத்தைப்பற்றிப் பாடுகையில், ‘முற்றிவளராத இளம் புல்லைக் கடித்துத் தின்ன முடியாமல், முதிய பசு தன் நாவால் தடவிக்கொடுத்து மகிழ்வதைப் போன்றதே  காமம்’ என்கிறார். இந்த நிலைதான் வயதேறியவர்களின் இச்சை.

சில வருடங்களுக்கு முன்பு, புனலூர் அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு ஒரு வைத்தியரைக் காணப்போயிருந்தேன். அவரோடு உரையாடிக் கொண்டிருக்கும்போது பேச்சு காமத்தைச் சுற்றத் துவங்கியது.

வயதானவனுக்கு பெண்ணோட நெருக்கம் மட்டும்தான் தேவைப்படுது. உடம்பில்லே! அந்த நெருக்கம் வார்த்தைகளாக இருந்தாக்கூட போதும். குழந்தைகள் உறங்கிட்டு இருக்கும்போது நடு ராத்திரியில் அப்பவோ அம்மாவோ எழுந்து குழந்தைக்குப் போர்வையை நல்லா இழுத்துப் போர்த்தி விடுவாங்களே, அதில் ஒரு நெருக்கமும் அக்கறையும் இருக்கு போருங்க, அவ்வளவு கிடைச்சா போதும் என்றார்.

ஒவ்வொரு வீட்டிலும் கண்ணுக்குத்தெரியாத பல திரைகள் தொங்குகின்றன. இந்தத் திரைகளுக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்று வீட்டில் இருப்பவர்களே ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்வதில்லை.

கடவுளும் குழந்தைகளும் இல்லாமல் போயிருந்தால் பெரும்பான்மைக் குடும்பங்களிலிருந்து பெண்கள் வெளியேறிப் போயிருப்பார்கள். இந்த அரண்டின் மீதுள்ள நம்பிக்கையால் மட்டுமே பெண் தன் சொந்த துயரங்களை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

அடிநிலை மக்களின் வாழ்க்கைப்பாடுகள் குறித்தும், பெண்கள் மீது சுமத்தப்படும் கலாச்சார ஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும் தன் எழுத்தின் வழியே தீவிர எதிர்வினைகள் தந்தவர் தமிழின் மூத்த படைப்பாளி ஜெயகாந்தன்.

அவரது ‘மௌனம் ஒரு பாஷை’ தமிழ்ச் சிறுகதைகளில் ஒரு தனித்துவமானதாகும்.

இக்கதை, தற்கொலை செய்ய முயன்ற அம்மாவைக் காண்பதற்காக வரும் மகனிடமிருந்து துவங்குகிறது. மருத்துவம் படித்து பட்டணத்தில் பணியாற்றும் ரவி, தன்னோடு பணிபுரியும் ஒரு ஐரோப்பிய பெண்ணைக் காதலித்து அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகின்றான். இது ஆசாரமான அந்தக் குடும்பத்தில் எதிர்ப்புக்கு உள்ளாகிறது.

ஆனால், ரவி தான் விரும்பிய ஐரோப்பிய பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். அன்றிலிருந்து அவன் தன் பிள்ளையே இல்லை என்று ஒதுக்கி வைத்துவிடுகிறார் சிங்காரம்பிள்ளை. இது நடந்து ஐந்து வருடமாகிறது. இடையில் ரவியின் தம்பிகளான முத்துவுக்கும்  சோமுவுக்கும் திருமணம் நடக்கிறது. ரவிக்கு அழைப்பு இல்லை.

இரண்டு மாதங்களுக்கு முன், சிங்காரம்பிள்ளைக்கு சஷடியப்த பூர்த்தி விழா நடந்தது. அப்போதாவது ரவியை அழைக்கலாம் என்று, அம்மா விரும்புகின்றாள். சிங்காரம்பிள்ளை அதையும் மறுத்து விடுகிறார்.

இப்போது ஐம்பது வயதைக்கூட நெருங்காத அம்மா, திடீரென அரளிவிதையை அரைத்துக் குடித்துவிடவே, எதற்காக இப்படி நடந்துகொண்டாள் என்று தெரியாமல் வீடே திகைக்கிறது. அவளைப் பரிசோதித்த வைத்தியர், பல்வேறு காரணங்களை ஆராய்ந்து எதுவும் இல்லை என்றதும், ஒருவேளை ரவியைப் பார்க்காமல் இருக்கும் ஏக்கத்தில்தான் இப்படிச் செய்திருக்க வேண்டும், அவனை வரவழையுங்கள் என்கிறார்.

அம்மா தற்கொலை செய்தி கேட்டு, அவளைப் பார்ப்பதற்காக மகளும் மருமகன்களும் வந்து சேர்கிறார்கள். ஆனால் அவர்களைப் பார்த்ததும் அம்மா, ‘எதற்காக இப்படி என் மானத்தை வாங்குகிறீர்கள்?’ என்று தன் கணவனிடம் கோபித்துக்கொள்கிறாள்.

ரவி நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருப்பதால், அவன் தன் தம்பிகளின் மனைவிகளிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான். எல்லாரும் அவரவர் குறையை அவனிடம் கொட்டித் தீர்க்கிறார்கள். அவனும்ஆறுதல் சொல்கிறான்.

ஆனால் ரவி வந்த நிமிஷத்திலிருந்து அம்மா வெளியே வராமல் குமுறி அழுதபடியே படுக்கையில் புரள்வதை அவர்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

ரவி அம்மாவை பரிசோதனை செய்து பார்க்கிறான். அம்மா கர்பமாக இருப்பது தெரியவருகிறது. அம்மா, ‘என் மானத்தைக் காப்பாத்துடா ரவி. இதை யாரிடமும் சொல்லிவிடாதே’ என்று கதறுகிறாள். ரவியோ, இதில் என்னம்மா தவறு இருக்கிறது? குழந்தைப்பேறு என்பது பெருமைக்குரிய ஒன்று.நீங்கள் நிம்மதியாக ஓய்வு எடுங்கள்’ என்று சமாதானம் செய்துவிட்டு, வீட்டில் உள்ளவர்களிடம் இந்தச் செய்தியைச் சொல்கிறான்.

இதைக்கேட்ட வீட்டு மாப்பிள்ளைகள், ‘அம்மாவுக்கும் பெண்ணுக்கும் ஒன்றாக வளைகாப்பு நடத்திவிடலாம்’ என்று கேலி செய்கிறார்கள். அதன்பிறகு, வீட்டில் நீண்ட மௌனம் படர்கிறது. வேறு வழியில்லாமல் ரவி அப்பாவிடம் பேசுகிறான்.

‘அப்பா! நம்ம ஜனங்கள் இன்னும் வளரலை. தாய்மையை மதிக்கக்கூடத் தெரியாத நிலையில் இருக்காங்க. பெத்த தாயை கேலி செய்யும் கீழ்த்தரம் தான் இங்கே இருக்கு. அதனால, அம்மா என்னோட வந்து இருக்கட்டும். நான் அவங்களைப் பாத்துக்கறேன்’ என்று அனுமதி கேட்கிறான். அவரும் சம்மதிக்கிறார்.

ஊருக்குப் பறப்படும் நாளில், கனத்த இதயத்தோடு, பேச வார்த்தைகள் இன்றி, அவர்கள் வண்டி தெரு முனையைக் கடக்கும் வரை பார்த்துக்கொண்டு இருக்கிறார் சிங்காரம்பிள்ளை.

சமூகத்தில் உள்ள வன்முறைக்கு எவ்விதத்திலும் குறைவானதில்லை குடும்பத்தில் உள்ள வன்முறை. ரத்தம் சிந்தாத இந்த வன்முறைக்கு ஆயுதம் சொற்கள்தான். கூர் தீட்டப்பட்ட கத்திகளைப்போல சொற்கள் நம் உடலில் ஆழமாகப் பாய்கின்றன. அதன் வலி மிக அந்தரங்கமானது. ஆறாத ரணமுடையது.

கதவுகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால், குடும்ப யுத்தத்தின் கூப்பாடு நம் தெருக்கள், நகரங்கள் முழுவதும் எதிரொலிக்ககூடும். வீடுகளுக்கு கதவுகளையும் ஜன்னல்களையும் கண்டுபிடித்தவன் ஒரு குடும்பஸ்தனாகத்தான் இருக்கக்கூடும். நம் வீட்டுக் கதவுகள் வெளியிலிருந்து எதுவும் உள்ளே நுழையாமல் பாதுகாப்பதைவிடவும் உள்ளிருந்து எதுவும் வெளியே செல்லாமல் இருக்கத்தான் அதிகம் உதவுகின்றன. சரி, கதவு எங்கு இருக்கிறது? வீட்டுக்கு உள்ளேயா? வெளியிலா?

— எஸ்.ராமகிருஷ்ணன் – கதாவிலாசத்தில்

 
6 பின்னூட்டங்கள்

Posted by மேல் மார்ச் 10, 2012 in கட்டுரை

 

குறிச்சொற்கள்: , ,