RSS

Monthly Archives: மார்ச் 2011

வெறி

“டாகடர், நான் ரகு பேசுகிறேன்…நீங்க இப்பவே என் வீட்டுக்கு வரமுடியுமா? அவசரம், ப்ளீஸ்!’

‘என்ன ரகு ஏதாவது எமர்ஜென்சியா? உனக்கு உடம்புக்கு ஒண்ணும் இல்லையே?!’

‘எனக்கு ஒண்ணும் இல்லை டாக்டர்! ஆனா நான் சொன்னா நம்ப மாட்டேன்னீங்களே, அந்த செக்ஸ் வெறி பிடிச்சவ, இப்போ எவன் கூடவோ சல்லாபம் பண்ணிட்டு இருக்கா. இப்படி ஒரு கொடுமை என் எதிரிக்குக்கூட ஏற்படக்கீடாது டாக்டர். நான் போன மாசமே உங்ககிட்ட சொன்னேன்… ரேகா ஒரு நிம்போமேனியாக்கா, செக்ஸ் வெறி பிடிச்சவளா மாறிட்டு வர்றாள்னு. நீங்கதான் நம்பாம, எனக்கு ஏதோ மனப்பிராந்தி அது இதுன்னீங்க. இப்ப நீங்களே நேர்ல வந்து, உங்க கண்ணால அந்த அசிங்கத்தப் பாருங்க, உண்மை புரியும்!’’

‘டென்ஷன் ஆகாதே! என்ன நடந்தது, பொறுமையா சொல்லு ரகு!’

‘நான் வழக்கமா ஏழு மணிக்குதான் ஆபீஸ்லேர்ந்து வருவேன், டாக்டர். ரேகாவும் ஏறக்குறைய அதே நேரத்துலதான் அவ ஆபீஸ்லேர்ந்து வருவா. எங்க ரெண்டு பேர் கிட்டயும் வீட்டுச்சாவி தனித்தனியா இருக்கு. இன்னிக்கு தலைவலின்னு மத்தியானம் லீவு போட்டுட்டு வீட்டுக்கி வந்தேன். வாசல்ல ரேகாவோட ஸ்கூட்டி நின்னுட்டு இருக்கு. இவ இந்த நேரத்துல இங்க வந்து என்ன பண்றானு, பின் பக்கமா போய் ஜன்னலை லேசாகத் திறந்து பார்த்தேன். எங்க பெட்ரூம்ல, ரேகா யாரையோ கட்டிப்பிடிச்சுட்டுக் கிடக்கா டாக்டர்!’

மனோதத்துவ நிபுனர் டாக்டர் சேதுவுக்கு குட்டிக்கொண்டு வந்தது. ‘என்ன மனிதன் இவன்! தன் மனைவி சோரம் போவதை இப்படியா அடுத்தவரைக் கூப்பிட்டுக் காண்பிப்பான்!’

ஆனால், இப்படி ஒரு அதிர்ச்சியான விஷயத்தை தனியே எதிர்கொள்ள நேரும் எவனும், அடுத்து என்ன செய்வான் என்று சொல்ல முடியாது. விபரீதமாக ஏதாவது செய்து தொலைப்பதற்குள், தான் அங்கே போய்த்தான் ஆக வேண்டும்!

‘இதோ உடனே கிளம்பி வர்றேன்!’

ரகுவுக்கு ஆபீஸில் வேலைப்பளு அதிகம். எக்கச்சக்கமான டென்ஷன். அதனால் மன அழுத்தம் ஏற்பட்டு, அதன் விளைவாக தாம்பத்தியத்தில் ஈடுபடமுடியாமல் போய்விட்டது. கூடவே குழப்பம் மற்றும் சந்தேக எண்ணங்கள் தலைதூக்கி விட்டன.

அது அவனுக்கே தெரிந்துதான் வாரம் ஒரு முறை சைக்கோதெரபிக்காக சேதுவிடம் வருகிறான். அவர் அவனுடைய டாக்டர் மட்டுமல்ல, நெடுநாளைய குடும்ப நண்பரும் கூட!

‘ஒரு வேளை, தனது கணவனிடமிருந்து இல்லறசுகம் கிடைக்காமல்தான், ரேகா வேறு வழியைத் தேடிக்கொண்டாளோ?’ என்று ஒரு யோசனை சேதுவின் மனதுக்குள் ஓடியது.

டாக்டரின் காரைப் பார்த்ததுமே, தெருமுனையில் இருந்த காபிக்கடையில் இருந்து ரகு ஓடி வந்து வழி மறித்தான்.

‘காரை இங்கேயே நிறுத்திட்டு, நடந்து போயிடலாம், டாக்டர்!’

ஒரு தர்மசங்கடமான மௌனத்தில், இருவரும் ரகுவின் வீட்டை நோக்கி நடந்தார்கள். வசல் கேட்டின் கொக்கியை ஓசைப்படாமல் நீக்கி, பூனையைப் போல் மெதுவாக நடந்து, பின்பக்கம் சென்று, படுக்கையறை ஜன்னலை அடைந்தார்கள். லேசாகத் திறந்திருந்த ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார் சேது.

ரகு சொன்னது சரிதான்!

‘அது உன் மனைவி ரேகாதான்னு எப்படிச் சொல்றே?’

‘என்ன டாக்டர் என் மனைவியை எனக்குத் தெரியாதா? அவ கட்டியிருக்கிற புடவை, இந்தமுறை தீபாவளிக்கு நான் வாங்கிக்கொடுத்தது!’

காதல் காட்சியின் கிளைமாக்ஸ் அரங்கேறும் முன் சேது, ரகுவை இழுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தார்.

‘பார்த்தீங்களா டாக்டர், அவ நிம்போமேனியாதானே? செக்ஸ் வெறி பிடிச்ச மிருகம்

தானே? நான் இப்போ என்ன செய்யட்டும் டாக்டர்? தடால்னு கதவைத் திறந்து உள்ளே போய், அந்த ரெண்டு பேரையும் வெட்டிக் கொன்னுட்டு, நானும் தற்கொலை செஞ்சுக்கட்டுமா?…’ மேலே பேசமுடியாமல் வெடித்து அழுதான் ரகு.

அவன் தோளில் தட்டிச் சமாதானப்படுத்தி தெருமுனை காபிக்கடைக்கு அழைத்து வந்தார் சேது.

‘பொறுமையா இரு ரகு. எமோஷனலாகாதே! அது சரி, ரேகாகூட இருக்கிறது யாருனு தெரியுமா?!’

‘தெரியலையே டாக்டர்! அவளோட ஒண்ணா வேலை பார்க்கிறவன் எவனாவதுதான் இருக்கணும். நான் அந்த ஆளை குறை சொல்ல மாட்டேன். இவதான் சரியில்லே. கொஞ்சம் பார்க்க ஸ்மார்ட்டான ஆம்பளையா இருந்தா ஓவரா இழையறா, வெளியே பார்ட்டிகள்ல அழகான இளைஞர்களைப் பார்த்தா ரொம்பவே வழியறா. நான் நிச்சயமா சொல்றேன், அவ நிம்போமேனியாதான்!’

சேது விரக்தியாகச் சிரித்தார்

‘சும்மா திருபித் திருப்பி அதையே சொல்லாதே ரகு! ‘நிம்போமேனியா’ங்கிற வார்த்தையையே மனோதத்துவ அகராதியிலிருந்து எடுத்துட்டாங்க, தெரியுமா உனக்கு? மஞ்சள் பத்திரிகை படிக்கிறவங்களும், ப்ளூ ஃபில்ம் பார்க்கிறவங்களும்தான் அந்த வார்த்தையை அடிக்கடி உபயோகிக்கிறாங்க, மத்தபடி மனவியல் நிபுணர்கள் அப்படி ஒரு மனநோய் இருக்கிறதாகவே நினைக்கறதில்ல!’’

‘என்ன டாக்டர் சொல்றீங்க?!’

‘ஆமாம் ரகு. அதிகமான செக்ஸ் ஆசை உள்ள பொம்பளைங்கள ‘நிம்ப்’னு சொல்ல்லாம்னா, முதல்ல எது அளவான செக்ஸ் ஆசை, எது அதிகமான செக்ஸ் ஆசைனு வரையறுக்கணமில்லையா? உண்மையில் செக்ஸ் உணர்வை அப்படி வரையறுக்கவே முடியாதுன்னு மனவியல் சாஸ்திரம் சொல்லுது!’

‘அப்போ, நாம இங்கே பார்த்த காட்சிக்கு என்ன அர்த்தம்?’

‘ரகு, நிஜத்தை எதிர்நோக்கக் கத்துக்கணும். உன்னால் அவளுக்கு தாம்பத்திய சுகம் கொடுக்க முடியலை. அவளும் பாவம், எத்தனை நாளைக்குத்தான் காத்திருப்பா! ஏதோ, தன் வழியில் சுகத்தைத் தேடிக்கிட்டா. அவ்வளவுதான்! ரேகா ஒரு சூழ்நிலைக் கைதி புரிஞ்சுக்க!’

‘ இருந்தாலும், இது அவ எனக்குச் செய்யுற துரோகம் இல்லையா டாக்டர்?!’

‘ரேகா செஞ்சது சரின்னு நான் சொல்ல வரல!’ சந்தர்ப்பவசத்துல சாதாரணமா நடக்கிற தப்புதான்னு சொல்றேன். ராத்திரி, நேரிடையா ரேகாகிட்ட இதப் பத்திப் பேசு. ‘உன்னை மன்னிச்சுட்டேன். நடந்தது நடந்ததா இருக்கட்டும். இனிமே இது மாதிரி பண்ணாதே!’ சொல்லு. அல்லது நீயா முன்வந்து அவளுக்கு விவாகரத்து கொடு. அவளை அவ வழியில போக விடு. உனக்கு இன்னும் அறு மாசத்துல ட்ரீட்மெண்ட் முடிஞ்சதும், நீ திரும்பவும் தாம்பத்தியத்துல ஈடுபடலாம்கிற நிலைமை வந்ததும், நீ வேற ஒரு பெண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்க. உனக்கு இப்ப முப்பத்து நாலு வயசுதானே ஆகுது.

டாக்டர் சேது போன பின்பு, ரகு கால் போன போக்கில் நடந்து போய், அருகில் இருந்த ஒரு பார்க் பெஞ்சில் உட்கார்ந்து, நெடுநேரம் யோசித்தான். மனம் கொஞ்சம் தெளிவானது.

முதல் கட்டமாக, ரேகாவை மனதார மன்னித்தான். மனம் லேசானது. வீட்டுக்கு கிளம்பினான். வீட்டில் மதுமிதாவும் அவள் கணவனும் அவனது வருகைக்காக் காத்துக்கொண்டு இருந்தனர்.

மதுமிதா ரேகாவின் தங்கை.

‘என்ன ரகு, மதுவையும் கிரியையும் விருந்துக்கு கூப்பிட்டதை மறந்துட்டீங்களா? கிரி நாளைக்கு துபாய் கிளம்பறார். காலைல அஞ்சு மணிக்கு ஃப்ளைட்! ரெண்டு பேரும் ரொம்ப நேரமா உங்களுக்காக காத்துகிட்டிருக்காங்க. உங்க ஆபீஸுக்கு போன் பண்ணிப்பார்த்தேன். அப்பவே கிளம்பிட்டதாகச் சொன்னாங்க. எங்கே போயிருந்தீங்க ரகு?’

வெறுப்பு வழியும் ஒரு சிரிப்பை ரேகாவின் கேள்விக்கு பதிலாக்கிவிட்டு, வந்தவர்களை சம்பிரதாயமாக வரவேற்றான் ரகு. ரேகா ஏற்பாடு செய்திருந்த தடபுடல் விருந்திலோ, அவள் அந்தப் புதுமனைத் தம்பதிகளை அடித்த கிண்டலிலோ அவன் மட்டும் சிறிதும் ஒட்டவில்லை. அவர்கள் போன பின்பு, ரேகாவிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்பதிலேயே அவன் மனம் குறியாக இருந்தது.

மதுமிதா ரேகாவிடம் விடைபெறும் போது, ரகு வாசற்கதவுக்கு அருகில் நின்று கொண்டிருந்தான்.

மது கண்கள் கசிய, ரேகாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நெகிழ்ச்சியாகப் பேசினாள்…. ‘ரொம்ப தேங்க்ஸ் அக்கா! நீ செஞ்ச உதவியை நான் என்னிக்கும் மறக்க மாட்டேன்!’

ஒரு சாதாரண விருந்துக்கு எதற்காக இப்படிக் கண்ணீரும் கம்பலையுமாக அவள் நன்றி சொல்ல வேண்டும்? ரகுவுக்குப் புரியவில்லை.

அவர்கள் போனதும், ரேகாவிடம் தன் சந்தேகத்தைக் கேட்டான்.

‘அதை விடுங்க ரகு, பெரிசா ஒண்ணுமில்ல!’

‘முடியாது. என்னன்னு சொல்லு!’

‘ஐயே, அதெல்லாம் பொம்பளைங்க சமாசாரம். உங்களுக்கு எதுக்கு?’

‘இல்லை. எனக்கு அது என்னன்னு இப்பவே தெரிஞ்சாகணும். நீ எதையோ என்கிட்டேர்ந்து மறைக்கப் பார்க்கிறே!’

‘ஐயே, விடமாட்டீங்களே! கிரிக்கும் மதுவுக்கும் கல்யாணமாகி பதினஞ்சு நாள்தானே ஆகுது! கிரி நாளை காலைல துபாய் போறாரு. அப்புறம் ஒரு வருஷம் கழிச்சுதான் பார்க்க முடியும். இப்படி கல்யாணமான புதுசுலேயே அவங்க பிரியறது கொடுமை இல்லியா? அதைவிடக் கொடுமை என்னன்னா, மதுவோட மாமியார் வீட்டுல நிறைய உறவுக்காருங்க டேரா அடிச்சிருக்கிறதால, புருஷனும் பொண்டாட்டியும் தனியா இருக்கச் சந்தர்ப்பமே கிடைக்கலியாம். மது என்கிட்ட போன்ல சொல்லி அழுதா.

நான் அவங்களை நம்ம வீட்டுல வந்து இருக்கச் சொன்னேன். நாங்க ரெண்டு பேரும் சாயந்திரம் ஆறு மணிக்கு மேலதான் ஆபீஸ்லேர்ந்து வருவோம். அதுவரைக்கும் நீங்க அங்கே போய் இருந்துக்குங்க. இப்ப உடனே கிளம்பி நேரே என் ஆபீஸுக்கு வந்தா, வீட்டுச் சாவி தர்றேன்’னு சொன்னேன். ‘வேணாம்டி! உன் ஹஸ்பெண்ட் ஏதாவது தப்பா நினைச்சுக்கப் போறார்!’னு தயங்கினா. சேச்சே! என் ரகு மாதிரி ஒரு ‘ஜெம்’மை இந்த உலகத்துலேயே பார்க்க முடியாது. இதைக்கேள்விப்பட்டார்னா, நல்ல காரியம் பண்ணினேனு என்னை பாராட்டத்தான் செய்வார்’னு சொல்லி, வற்புறுத்தி அவகிட்ட சாவியைக் கொடுத்தேன். அவங்க காலையிலேயே வீட்டுக்கு வந்துட்டாங்க. ஏழு மணிக்கு நான் வர்ற வரைக்கும் இங்கே அவங்க ராஜ்ஜியம்தான். ஏன் ரகு, உங்களுக்கு இதுல ஒண்ணும் கோபமில்லையே?!

ரகுவிற்கு படபடவென்று வந்தது. இது இருக்கட்டும் ரேகா, நீ ஆபீஸ்லேர்ந்து ஸ்கூட்டிலதானே வந்தே?’

‘இல்ல ரகு! கிரியும், மதுவும் என்னை ஆபீஸ்ல வந்து பார்த்தபோது, அவங்க்கிட்ட ஸ்கூட்டியைக் கொடுத்து அனுப்பிட்டேன். நான் ஆட்டோவிலதான் வந்தேன்.’

‘மது இங்கே வந்து உன் புடவைல எதையாவது எடுத்து கட்டிக்கிட்டாளா?’

‘இருக்கலாம். மதுவும், கிரியும் காலைல ஏதோ கல்யாணத்துக்குப் போயிருந்தாங்க போல. மது என் ஆபீஸுக்கு வரும்போது பட்டுப்புடவைல இருந்தா. அதனால வீட்டுக்கு வந்ததும் என் புடவை ஏதாவது எடுத்து கட்டிகிட்டு இருப்பா. ஏன் இப்படித் துருவித்துருவி கேட்கிறீங்க? உங்களைக் கேட்காம அவளுக்கு இங்கே இடம் கொடுத்தது உங்களுக்குப் பிடிக்கலையா? தாபத்துல தவிக்கிற தம்பதிக்கு ஹெல்ப் பண்ணினா, அவங்க மனசார வாழ்த்தறதுலேயே உங்க குறை சீக்கிரம் குணமாகிடும்ல? அதனால, அவங்களுக்கு ஹெல்ப் பண்ணினதுல என் சுயநலமும் கலந்திருக்கு ரகு!’

‘ரேகா, ரேகா… என்னை மன்னிச்சிரு ரேகா!’ என்றபடி தன் மார்பில் சாய்ந்து விம்மி அழுத கணவனைத் தேற்றத் தெரியாமல் நின்றிருந்தாள் ரேகா!.

—- வரலொட்டி ரெங்கசாமி

நன்றி : ஆ.வி.

(மறக்காம ஓட்டு போட்டு ஆதரவு கொடுங்க!)

 
8 பின்னூட்டங்கள்

Posted by மேல் மார்ச் 25, 2011 in சிறுகதை

 

குறிச்சொற்கள்: ,

தீராக்காதல்

கடவுள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும், ஒரு மகா அற்புதமான தருணத்தை எங்கேனும் ஒளித்துவைத்திருப்பார். எனக்கு முப்பத்தெட்டு வயதில், கொடைக்கானலில் வைத்திருந்தார்.

ஏரிக்கு எதிரேயிருந்த ஓட்டலிலிருந்து காலை ஆறரை மணிக்கு நான் வெளியே வந்தேன். குளிருக்கு இதமாக ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு, பனிப்புகையினூடே நடக்க ஆரம்பித்தேன்.

ஏரியைக்கடந்து அப்சர்வேட்டரி ரோடுக்குச் செல்லும் மேட்டில் ஏறினேன். மரங்கள் சாலையை நோக்கி வளைந்து ஒரு குடை போல் மூடியிருந்தன. ஈரத்தரையெங்கும் மஞ்சள் பூக்கள்.

மெலிதான சாரலில் நனைந்தபடி, உற்சாகமாக நடந்தேன். கோல்ஃப் கிளப்பை நெருங்கியபோதுதான் அந்தப்பெண்ணை கவனித்தேன். மழைச்சாரலுக்கு மறைப்பாக தலையை புடவைத்தலைப்பால் மூடிக்கொண்டு, சிதறியிருந்த பூக்களை சிறு குழந்தைபோல் பொறுக்கிக் கொண்டிருந்தாள்.

எனது ஷூ சத்தம் கேட்டு, அவள் திரும்பிப் பார்க்க… நான் ஆச்சர்யத்தில் உறைந்து போனேன். அவள் மீரா! கல்லூரி காலத்தில் ஒரு தலையாக நான் உருகி உருகிக் காதலித்த தேவதை!

பதினேழு வருடங்களுக்கு முன்பு, என் அடிமனதில் புதைந்து போன ஒரு வீணையின் ஒற்றைத்தந்தி மீட்டப்பட்டது. அந்தக்குளிரிலும் எனக்கு வியர்த்தது.

மீராவின் முகத்தில், கண்களுக்குக் கீழ் காலம் வரைந்த கருவளையங்களைத் தவிர, வேறு எந்த மாற்றமும் இல்லை. கற்பூரத்தட்டை முகத்துக்கு நேரே நீட்டியது போன்ற அதே பொன்மஞ்சள் நிறம். பளபளக்கும் அகன்ற கண்கள். பூமியைத் தழுவத் துடிப்பது போன்று நீண்டு வளர்ந்த கூந்தல். எதுவுமே மாறவில்லை.

எதிர்பாராத இன்ப அதிர்ச்சியில் நான் பேச்சு வராமல் நிற்க, மீராதான் உற்சாகத்துடன், ‘நீ…நீ…சிவாதானே…? இது கனவா, நிஜமானு தெரியலையே. மைகாட்…!’ என்றாள் ஆச்சர்யமாக.

‘என்னைத் தெரியுதா?’ என்றாள்.

‘தெரியும்? உன்னை இத்தனை வருஷம் கழிச்சப்பார்த்த சந்தோஷத்தில், என்ன பேசறதுன்னே தெரியல’ என்றேன்.

‘நம்பவே முடியலை சிவா! இவ்வளவு நாள் கழிச்சு, இந்த மழைல, குளிர்ல… காதோரம் நரைச்சு, கண்ணாடி போட்டுகிட்டு உன்னை இங்க… வாட் எ சர்ப்ரைஸ்?’ என்று அழகாகச் சரித்தாள்.

‘பாலச்சந்திரன் சுள்ளிக்காடு கேள்விப்பட்டிருக்கியா?’

‘யெஸ்… மலையாள பொயட்!’

‘அவர் சொல்லியிருக்காரு… வாழ்க்கை, ஒரு போதும் எதிர்பாராத ஏதோ ஒன்றை உங்களுக்காகப் பொத்திவைத்துக் காத்திருக்கிறது’ன்னு. அதை இப்பத்தான் அனுபவப்பூர்வமா உணர்றேன்!’

‘சுள்ளிக்காடு இருக்கட்டும்… நீ இப்ப எங்கே இருக்க?’

‘ஜெர்மனி. டுஸில்டார்ஃப்!’

‘அய்யோடா! அங்கே எப்ப போனே!’

‘அது ஆச்சு, பதானஞ்சு வருஷம்!’

‘அங்கே என்ன பண்றே சிவா?’ என்றபடி நடக்க ஆரம்பித்தாள் மீரா

‘இரு கம்பெனியில டி.ஜி.எம். ப்ராடக்ட் சப்போர்ட்!’

‘ம்… பெரிய ஆளாயிட்ட!’

‘இல்ல மீரா, உள்ளுக்குள்ள இன்னும் ராயல் டாக்கீஸ்ல ‘முதல் மரியாதை’ பார்த்த அதே சிவாதான். அதான் வருஷத்துக்கு ஒரு முறை கட்டாயம் இந்தியா வந்திடுவேன்!’

ஃபேமிலி…?

‘அழைச்சிகிட்டு வரலை. வொய்ஃப் ஜெர்மனியிலேயே பொறந்து வளர்ந்த தமிழ்ப்பொண்ணு. ரெண்டு பசங்க, யாருக்கும் இந்தியா மேல எந்த இன்ட்ரஸ்ட்டும் கிடையாது. கூப்பிட்டாலும் வரமாட்டாங்க. ஸோ… ஒவ்வொரு முறையும் தனியாதான் கிளம்பி வந்து போறது. அது சரி நீ எங்க இருக்க?’

‘சென்னைல. ஒரு கம்பெனில மெயின்டனன்ஸ் இன்ஜினியர். இங்கே ஒரு செமினார். நேத்துதான் வந்தேன்’.

‘ஹஸ்பெண்ட்… குழந்தைங்க…?’

‘ஹஸ்பெண்ட்டுக்கு பிஸினஸ். ஒரே ஒரு பொண்ணு. ப்ளஸ் ஒன் படிக்கிறா!’ என்ற மீரா, ஸ்… அப்பா…! எப்படிக் குளிருது?’ என்று பற்கள் வெடவெடக்க, கைகளைக் கட்டிக்கொண்டாள்.

ஏராளமான வெள்ளைப் பூக்கள் பூத்திருந்த ஒரு மரத்தடியில் நின்றோம்.

‘எங்கே தங்கியிருக்கே?’ என்றேன்.

‘கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்ல. இதே ரோட்லதான் இருக்கு. நீ எங்கே தங்கியிருக்கே சிவா?’

‘ஓட்டல்ல… என்று நான் கூறிக்கொண்டிருக்கும்போதே, மீரா ஒரு தாழ்வான கிளையைப் பிடித்து அசைக்க, மழைத்துளிகளும், வெள்ளைப் பூக்களும் சிலுசிலுவென மேலே விழுந்தன. ‘இப்பவும் கவிதைல்லாம் எழுதறியா?’ என்று தலையை சாய்த்து மீரா கேட்ட அழகுக்கே ஆயிரம் கவிதைகள் எழுதலாம்.

‘ம்… அதுதான் என்னை இன்னும் என்னை உயிர்ப்போட நடமாட வெச்சிட்டு இருக்கு!’

கையில் கட்டியிருந்த வாட்சை பார்த்தபடி, நிறைய பேசனும் சிவா. டயமாயிடுச்சு. பத்து மணிக்கு செமினார் போகணும். ஈவ்னிங் பார்க்கலாமா?’ என்றாள் மீரா.

‘ம்… எங்கே?’

‘லேக் பாலத்துக்கிட்டே ஒரு டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் இருக்கு, தெரியுமா? அங்கே ஷார்ப்பா அஞ்சு மணிக்கு வந்துடு. ரெண்டு பேரும் குறிஞ்சி ஆண்டவர் கோயில் போகலாம்’ என்று விடை பெற்றாள். அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, தலை மறைந்ததும் பெருமூச்சுடன் திரும்பி நடந்தேன்.

நானும் மீராவும் ஒரே பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள், மெக்கானிகல் இன்ஜினியரிங். ஒரே வகுப்பு. தெர்மல் டைனமிக்ஸ் அலுத்துப்போகும் சமயங்களில், வகுப்பறையில் மீராவின் அழகை ரசிக்க ஆரம்பித்தேன்.

ஒருமுறை கல்லூரி கலை விழாவில் நான் கவிதை ஒன்றை வாசிக்க, ‘நீங்க கவிதைல்லாம் எழுதுவீங்களா?’ என்று தனது நீண்ட கூந்தல் முனையைத் திருகிக்கொண்டே மீரா கேட்ட பொழுதில், ஒரு இனிய நட்பு வேரிட்டது.

இருவருக்கும் ஒரே ரசனை, இருவரும் ஹாஸ்டலில் தங்கி இருந்தோம். அடிக்கடி சந்திப்புகள், பேச்சு என்று தொடர, சீக்கிரமே அவளை மனசுக்குள் காதலிக்கத் தொடங்கிவிட்டேன். என்றாலும், கடைசி வரை அதை அவளிடத்தில் கூறவே இல்லை.

எத்தனையோ தனிமையான சந்தர்ப்பங்கள்… ‘சிவந்திருக்கா’ அவள் தன் மருதாணி விரல்களை நீட்டிய காலைப்பொழுதில் சொல்லியிருக்கலாம். சந்தன சோப்பு வாசனை சுகமாக பரவ, நெருக்கமாக நின்ற மாலை வேளையில் கூறியிருக்கலாம்.

ஆனால் சொல்லவேயில்லை. கடைசி நாள் வரையிலும் சொல்ல முயற்சித்து, சொல்லாமலே சிறகு ஒடிந்த காதல் அது. இந்தியாவில் சொல்லித் தோற்ற காதல்களைவிட சொல்லாமலே தோற்ற காதல்கள்தான் அதிகமாக இருக்கும்!.

ஓட்டலை அடைந்து, என் அறையினுள் நுழைந்து, ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு, அக்கடாவென்று சோபாவில் சாய்ந்தபோது, அந்த விபரீத எண்ணம் தோன்றியது. ‘அப்போது கூறாததை இப்போது அவளிடம் கூறினால் என்ன?’

அடுத்த கனமே ‘சேச்சே! உனக்கு என்ன பைத்தியமா?’ என்றை மனசுக்குள் என்னை நானே திட்டிக்கொண்டு, குளிப்பதற்காக எழுந்தேன்.

மாலை நானும், மீராவும் குறிஞ்சி ஆண்டவர் கோயிலை நோக்கி நடந்தோம். மஞ்சள் சால்வையைப் போர்த்தியபடி அருகில் நடந்து வந்த மீராவின் முகம் என்னை ஏதோ செய்தது. இந்த நடுத்தர வந்து, பெண்களுக்கு ஒரு தனி அழகைக் கொண்டு வந்துவிடுகிறது. கனவுகள், பரபரப்புகள் எல்லாம் ஓய்ந்து, தெளிந்த ஓடை போல முகம் அமைதியாகிவிடுகிறது.

‘என்ன பார்க்கிறே?’ என்றாள் மீரா. ஒண்ணுமில்ல…’ என்றபடி குளிருக்கு இதமாக கைகளை இறுகக்கட்டிக் கொண்டு, அப்புறம் மீரா, ஹௌ இஸ் லைஃப்?’ என்றேன்.

தெரியல!’

‘தெரியலன்னா?’

‘எது லைஃபுன்னே தெரியல, சிவா! காலைல ஆறு மணிக்கு எழுந்திருச்சு, அரக்கப்பரக்க வேலையை முடிச்சிட்டு ஓடுறேன். ஆபீஸ், மீட்டிங், ஃபேக்டரி விசிட், எம்.டியிடம் திட்டு… எல்லாம் முடிஞ்சு, அசந்து போய் வீட்டுக்கு வந்தா யாரும் இருக்கமாட்டாங்க. பொண்ணு டியூஷன் போழிருப்பா. அவர் வர 12 மணி ஆகிடும். வசதிக்கு குறைச்சல் இல்லை. அடையார்ல ஒரு வீடு, குரோம்பேட்டைல ஒரு வீடு. பெருங்குடில ஒரு கிரௌண்ட் இடம் வாங்கிப் போட்டிருக்கோம். ஆனாலும் மனசு பூராவும் வெறுமையானது மாதிரி ஒரு ஃபீலிங்!’

‘ம்… அப்படித்தான் ஆயிடுது மீரா! வாழ்க்கைக்காக பணம் தேட ஆரம்பிக்கிறோம். அப்புறம், பணம் தேடுறதுலேயே வாழ்க்கையைத் தொலைச்சிடுறோம்!’

‘புரியுது சிவா, ஆனா விட முடியலையே?’

‘முடியாதுதான், புலி வாலைப்பிடிச்ச மாதிரி!’

மேற்கொண்டு ஒன்றும் பேசாமல், கோஹினூர் பங்களாவைக் கடந்து, செட்டியார் பார்க்கைத் தாண்டி, கோயிலினுள் நுழைந்தோம்.

சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்ததும், ‘எவ்வளவு அழகான ஊரு! பேசாம எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு இங்கேயே வந்து தங்கிடலாம்னு தோணுது, எதுக்கு அழறான்னே தெரியாத புதுப்பொண்டாட்டி மாதிரி திடீர் திடீர்னு கண்ணீர் சிந்துற வானம்… யூனிஃபார்ம் ஸ்வெட்டர் போட்டுகிட்டு, கும்பல் கும்பலா கலர் கலர் குடைகளைப் பிடிச்சிகிட்டு போற அழகான குழந்தைகள்…’ என்று பேசிக்கொண்டு இருந்த என் கண்களையே மீரா உற்றுப் பார்க்க, ‘என்ன மீரா?’ என்றேன்.

நீ பேசறதை கேட்கிறப்ப, தினம் உன்கூட பேசிகிட்டே இருக்கணும் போலத் தோணுது, சிவா!’ என்றாள்.

பேசினோம். மெல்லிய சாரலில் நனைந்தபடி… ஏரிக்கரையோரம் நடந்தபடி… உயரமான மரங்களைப் பார்த்தபடி… தினமும் பேசினோம்.

ஒரு வார காலம் ஓடியதே தெரியவில்லை. அன்று பரந்து விரிந்திருந்த பேரிஜம் ஏரிக்கரையில், ஆளரவமற்று அமர்ந்திருந்த மாலை நேரத்தில், ‘எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்கு சிவா’ என்றாள் மீரா.

‘ஏன்?’

‘நாளையோடு செமினார் முடியுது. நாளை சாயங்காலம் கிளம்பறேன்!’

நான் வேதனையுடன் கீழே இருந்த புற்களை பிடுங்க ஆரம்பித்தேன்.

‘சொல்லிவிடலாமா?’

தயக்கத்துடன், தொண்டையைச் செருமிக்கொண்டு, “ஒரு விஷயம்” என்று ஆரம்பித்தேன்.

‘என்ன?’ என்று என் கண்களைப் பார்த்தாள் மீரா.

‘ஒண்ணுமில்ல…’ என்று எழுந்து நடக்க ஆரம்பித்தேன்.

‘நாளைக்கு ஈவ்னிங் அஞ்சு மணிக்கு கம்பெனி கார் வருது. சென்ட் ஆஃப் பண்ண, கெஸ்ட் ஹவுஸூக்கு வர்ரியா?’

‘கண்டிப்பா’ என்ற நான் மேற்கொண்டு எதுவும் நான் பேசவில்லை. மீராவும் என் மௌனத்தைக் கலைக்க விருப்பமின்றி, அமைதியாக நடந்து வந்தாள்.

மறுதாள், மாலை ஐந்து மணி, மீராவின் கெஸ்ட் ஹவுஸூக்கு நான் சென்றிருக்க வேண்டும். ஆனால் செல்லவில்லை. மீராவின் பிரிவை தாங்க முடியாமல், ஓட்டல் அறையிலேயே குடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

இரண்டு ரவுண்டுகளை முடித்துவிட்டு, மூன்றாவது ரவுண்டை துவங்கிதபோது, அறைக்கதவு தட்டப்பட்டது. மெலிதான போதையுடன் எழுந்து போய்க் கதவைத் திறந்தால்… வெளியே மீரா!

‘என்ன சிவா, அஞ்சு மணிக்கு வரேன்னு சொல்லிவிட்டு…’ என்றபடியே உள்ளே நுழைந்தவள், டீப்பாயில் விஸ்கி பாட்டிலைப் பார்த்ததும், என்ன சிவா இதெல்லாம்ழ’ என்றாள்.

‘அது… கொஞ்சம்… மனசு சரியில்ல. நீ உட்காரு!

‘என்ன மனசு சரியில்ல? நீ என்னை வழியனுப்ப வருவேன்னு எவ்வளவு ஆசையா காத்துகிட்டிருந்தேன் தெரியுமா? பத்து நிமிஷம் வெயிட் பண்ணி பார்த்துட்டு, நீ வரலேன்னதும் நானே கிளம்பி வந்துட்டேன். நீ என்னடான்னா இங்கே குடிச்சிட்டு உட்கார்ந்திருக்கே! ஏன் சிவா?’

சாய்வாகச் சுவரில் சாய்ந்த நான், பொங்கி வந்த அழுகையை உள்கன்னத்தில் நுனிநாக்கால் அழுத்தி அடக்கியபடி, ‘ஏன்னா… என்ன சொல்லு?’ என்று என் முகத்தைப் பார்க்க, அந்தப் பிரியமான பார்வையில் நெகிழ்ந்து போய், உன்னைப் பிரியறதை என்னால் தாங்க முடியல மீரா!’ என்றேன்.

‘ஏன்?’’ என்று மீரா மீண்டும் கேட்க, பீறிட்டுக் கிளம்பிய ஆவேசத்துடன், ‘ஏன்னா… ஏன்னா… ஐ லவ் யூ!’ என்றபடி, அவளது தோள்களில் என் கையை வைத்தேன்.

சற்றும் எதிர்பாராத என் வார்த்தைகளிலும் செய்கையிலும் அதிர்ந்து போன மீரா, என் கைகளை விலக்காமல் பிரமிப்புடன் நின்றாள்.

‘என்ன சொல்ற சிவா?!’

‘ஆமாம் மீரா! இப்பவும் சொல்லலைன்னா, அப்புறம் சாகிற வரைக்கும் சொல்ல முடியாமலே போயிடும். காலேஜ்ல கடைசி நாள் வரைக்கும் சொல்ல முயற்சி பண்ணி… ஏதோ ஒரு தயக்கம். நீ என்னை நிராகரிச்சிடுவியோன்னு ஒரு பயம். அப்படியும், கடைசி நாள் சொல்லிடறதுன்னு ஒரு முடிவோட கிளம்பி, உன் ஹாஸ்டலுக்கு வந்தேன். நீ ஒன்பது மணி பஸ்ஸூக்கு கிளம்பிப் போயிட்டதா சொன்னாங்க. நான் ஒன்பது மணி ட்ரெயினுக்கு ரிசர்வ் பண்ணியிருந்தேன். நான் ஊருக்குப் போகலேன்னாலும் பரவாயில்லன்னு பஸ் ஸ்டாண்டுக்கு வந்து பத்து மணி வரைக்கும் அங்கேயே சுத்திகிட்டிருந்தேன். ப்ச்… உன்னை பார்க்க முடியலே! வெறுத்துப் போய் ஊருக்குப் போயிட்டேன். அப்புறம், உங்க வீட்டுக்கு வரலாம், லெட்டர் போடலாம்னு கூட நினைச்சேன். ஆனா தைரியம் இல்லாம விட்டுட்டேன்’ என்று நான் சொல்லச் சொல்ல, மீராவின் கண்கள் ஓரம் கடகடவென்று நீர் கசிந்தது.

‘நீ பஸ் ஸ்டாண்ட்ல என்னைத் தேடிக்கிட்டிருந்தப்ப, நான் எங்கே இருந்தேன் தெரியுமா?’ என்றாள்.

‘எங்கே?’

‘ரயில்வே ஸ்டேஷன்ல! நீ ட்ரெயின்ல போறேன்னு கேள்விப்பட்டு உன்னைப் பார்க்கலாம்னு வந்தேன்’.

‘எதுக்கு?’

‘எதுக்கா?’ ராஸ்கல்… நீ எதைச் சொல்றதுக்காக என்னைத் தேடி அலைஞ்சிட்டிருந்தியோ, அதைச் சொல்றதுக்குத்தாண்டா பாவி!’ என்ற மீரா, கதறியபடி என் தோளில் சாய்ந்து கொண்டாள்.

சந்தோஷத்தில் என் கால்கள் நடுங்கின. ‘மீரா…’ என்று ஆவேசத்துடன் அவளை இறுகத்தழுவிக் கொண்டேன். ‘சிவா…’ என்ற படி மீராவும் என்னை இறுக அணைத்துக்கொண்டாள். உலக இயக்கங்கள் எல்லாம் நின்று போய், நாங்கள் மட்டுமே உலகில் தனித்திருப்பது போல் ஒரு பிரமை.

மல்லிகைப்பூ, பவுடர் என எல்லாம் கலந்து வீசிய மீராவின் பின் கழுத்து வாசனை, என்னை வேறொரு உலகத்திற்கு இட்டுச்சென்றது.

எனது செவியில் அழுத்தமாக தனது உதடுகளைப் பதித்த மீரா, இது போதும் சிவா, இது போதும்’ என்றாள்.

நான் மீராவை மேலும் இறுக்கமாக அணைத்தபடி, ‘ஆளைப்பொசுக்குற வெயில்ல நடந்துகிட்டிருக்கிறப்ப, ஒரு மரத்தடி நிழல் கிடைச்ச மாதிரி, ஒரு சின்ன இளைப்பாறல்’ என்றேன்.

‘ஆமாம், ஆனா மரத்தடியிலேயே இருந்துட முடியாது. பயணத்தைத் தொடர்ந்துதான் ஆகணும். ஆனா இந்த இளைப்பாறலை சாகிறவரைக்கும் மறக்க மாட்டேன் சிவா’ என்ற மீரா, சட்டென்று என்னிடமிருந்து விலகிக் கொண்டாள்.

‘ஓ.கே. சிவா! நான் கிளம்பறேன். வெளியே கார் வெயிட் பண்ணுது. டேக் கேர்!’ என்றவள் பொங்கி வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வேகமாக திரும்பி நடந்தாள்.

ஒரு ஜீவனுள்ள காதலை உரியவளிடத்தில் சேர்ப்பித்துவிட்ட திருப்தியுடன், மீரா சென்ற திசையையே பார்த்துக்கொண்டு நின்றேன்.

– ஜி ஆர் சுரேந்திரநாத்                                 நன்றி : ஆ.வி.

 
3 பின்னூட்டங்கள்

Posted by மேல் மார்ச் 23, 2011 in சிறுகதை

 

குறிச்சொற்கள்: ,

உணர்வுகள்

சராசரி மனிதனாய்

உலவுவதைக் காட்டிலும்…

தேவையில்லா அசிங்கங்களைப்

புணர்வதைக் காட்டிலும்…

உள்ளத் துணர்வை

எடுத்துரைப்பதைக் காட்டிலும்…

எதையோ நினைத்து

வருத்தமடைவதைக் காட்டிலும்…

நிஜங்களோடு மோதி

களைப்புறுவதைக் காட்டிலும்…

போலியான முகப் புன்னகை

அணிவதைக் காட்டிலும்…

பணத்தை மதித்து

ஓடுவதைக் காட்டிலும்…

உணர்வுகளைக் கொச்சைப்படுத்திச்

சிரிப்பதைக் காட்டிலும்…

சமூக அவலங்களைக் கண்டு

விலகுவதைக் காட்டிலும்…

நம்பிக்கைத் துரோகம்

செய்வதைக் காட்டிலும்…

கொல்லாமல் கொல்லும்

காதலைக் காட்டிலும்…

அரசியல் நேர்மையை

உணர்வதைக் காட்டிலும்…

சாதி அழுக்கோடு

புரள்வதைக் காட்டிலும்… நான்…

இங்கேயே இருந்து விடுகிறேன்!

சிரித்தபடி…

நானிருக்குமிடம்

மனநலகாப்பகம்.

(மனநலத்தோடு ஜி. தீபா. கோவை)

ஆ.வி.யில் 1000 ரூபாய் பரிசு பெற்ற கவிதை இது

 
2 பின்னூட்டங்கள்

Posted by மேல் மார்ச் 19, 2011 in கவிதைகள்

 

குறிச்சொற்கள்: