RSS

Monthly Archives: நவம்பர் 2011

பிரிவு – காதலின் ஆறாத துயரம்!

நோபல் பரிசு பெற்ற சிலி நாட்டு கவிஞரான ‘பாப்லோ நெருடா’ காதலைக் கொண்டாடியவர். தனது நோபல் பரிசின் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு, சுற்றுக்கோட்டையும் பழைய அரண்மனை ஒன்றும் இருந்த ‘ஜலா நெகரா’ என்ற தீவை விலைக்கு வாங்கினார்.

அந்தத் தீவில், உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் காதலர்கள் வந்து சேர்ந்து, ஆடிப்பாடி தங்களுக்கு விருப்பமான கவிதைகளை அந்தக் கோட்டைச் சுவர்களில் எழுதிப் போகலாம் என்று பிரகடனப் படுத்தியிருந்தார்.

அவர் இறந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றுவரை அந்தத் தீவு காதலர்களின் புகலிடமாகவே உள்ளது.

‘நெருடா அரசியல் காரணங்களுக்காகச் சில ஆண்டுகாலம் இத்தாலியில் ஒளிந்து வாழ்ந்தார். அந்த நாட்களில் அவருக்குத் தபால் கொண்டுவரும் தபால்காரன் ஒருவனுக்கும் நெருடாவுக்கும் நட்பு ஏற்பட்டது. தபால்காரன் ஒரு நாள் கவிஞரிடம் தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அவளை அடைவதற்காக ஒரு காதல் கவிதை எழுதித் தரும்படியாகவும் கேட்கிறான்.

‘நான் உனக்குக் காதல் கவிதை எழுதித் தந்தால் அந்தப்பெண் என்னைக் காதலிக்கத் துங்கிவிடுவாள், பரவாயில்லையா?’ என்று சிரிக்க, ‘என்னால் வேறு எப்படி ஒரு பெண்ணின் மனதை அடைய முடியும்?’ என்று கேட்கிறான். சரி, உனக்குக் கவிதை எழுதக் கற்றுத் தருகிறேன், அதைக் கொண்டு நீயே ஒரு காதல் கவிதை எழுதிவிடலாம் என்று கவிதை குறித்த ஆழ்ந்த புரிதலை அவனிடம் ஏற்படுத்துகிறார்.

கவிதையும் காதலும் பிரிக்கவே முடியாதது போலும். கவிதை தெரியாத அல்லது எழுதாத காதலர்கள் எவரேனும் உலகில் இருக்கிறார்களா என்ன? எல்லாக் காதலர்களும் டயரியில், கல்லூரிப் பாட நோட்டுக்களில் கவிதை எழுதி ஒளித்து வைத்திருக்கிறார்கள்.

காதலிக்கச் சந்தர்ப்பம் அற்றுப்போய், அந்த ஆசையை நூற்றுக்கணக்கான கவிதைகாளாக எழுதித் தீர்த்துக்கொள்பவர்கள் என்றும் ஒரு ரகம் இருக்கிறது. காதலிக்காத ஆணோ பெண்ணோ கூட இருக்கக் கூடும். ஆனால் காதல் கவிதையை எழுதாத அல்லது ரசிக்காத ஆணும் பெண்ணும் வாலிப வயதைக் கடந்து வரவே முடியாது என்பது என் எண்ணம்.

வாழ்வின் விசித்திரம், யார் யாரைக் காதலிக்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. சரித்திரத்தின் கல்லெழுத்துக்களிலிருத்து சம காலத்துக் கதைகள் வரை, காதல் விநோதங்களால்தான் நிரம்பியிருக்கிறது. காதல் கவிஞர்களை உருவாக்குகிறதோ இல்லையோ, சில ஆழ்ந்த நினைவுகளை உருவாக்கி விடுகிறது.

பிரிவு, காதலின் ஆறாத துயரம். அது களிமண்ணைப் போலப் பிசுபிசுப்பும் ஈரமும் கொண்டதாகவே எப்போதும் இருக்கிறது. பிரிந்த காதல் எத்தனையோ இலக்கியங்களின் வித்தாக இருந்திருக்கிறது. ஆன்டன் செகாவின் மூன்று காதல் கதைகளும், வைக்கம் முகமது பஷீரின் இளம்பருவத் தோழியும், தாஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகளும், என்றும் மறக்க முடியாத காதல் கதைகளாக இருப்பதற்கு, பிரிவுத்துயரும் ஒரு காரணம்தான் இல்லையா?

எஸ். ராமகிருஷ்ணன் – கதாவிலாசத்தில்.

 
2 பின்னூட்டங்கள்

Posted by மேல் நவம்பர் 10, 2011 in கட்டுரை

 

குறிச்சொற்கள்: , ,

கனாக் காணும் காலங்கள்

பெண்கள் எப்போதுமே பெரும் சக்தி. அனிச்சையாய் மாராப்பைச் சரி செய்கிற விரல்கள். கண் சிமிட்டல்களையும், காத்திருப்புகளையும் தவிர்க்கிற விழிகள் என இயற்கையாகவே பெண்களுக்கு எச்சரிக்கை உணர்வு அதிகம்.

அவர்கள் உடலைத் தருவதற்கு முன் உள்ளத்தைத் தருபவர்கள். ஆண்கள் போல அவசரக் குடுக்கைகள் அல்ல!

ஒரு பெண் இறுக்கமாய் இருந்தால்… திமிர், கொஞ்சம் சிரித்துப் பேசினால்… ‘ஈஸி’ டைப். பையன்களிடம் நட்பாய் இருந்தால்… எதற்கும் துணிந்தவள். விருப்பு வெறுப்புகளில் தெளிவாக நின்றால்… அடங்காப் பிடாரி. தன் வாழ்வைத்தானே தீர்மாணித்தால்… ஓடுகாலி. பெண்களுக்கு சமூகம் சூட்டுகிற பட்டப் பெயர்களுக்கா பஞ்சம்?

பெரும்பான்மையான பெண்களுக்கு இதுதான் ஆதங்கம். சில மேலைநாட்டுப் பெண்கள் ஆணும் பெண்ணும் சமம் என்பதைத் தாண்டி, ஆணுக்கு மேலாக அவர்கள் கரமும் தரமும் ஓங்கியிருக்கும். தனியாகவே வாழ முடிகிற துணிவும் தகுதியும் இருக்கும்.

ஆனால் இங்கே இந்தியாவில் கல்யாணச் சந்தை என்று வந்துவிட்டால், பெண்களின் நிலை பரிதாபம்! ஏறக்குறைய துப்பறியும் நிபுனர்களாகவே மாறி, என்னன்னவோ விசாரித்த பின்புதான் ஒரு பெண்ணை ஒப்புக் கொள்வார்கள். ஆனால் பெரும் காமுகனுக்குக் கூட பேசாமலேயே பெண் கொடுக்கச் சம்மதிப்பார்கள் என்ன நான்சென்ஸ் இது?

பெண்களின் பிரச்னையே, அவர்களின் வீடுதான். தனியாகச் செல்ல அனுமதி மறுப்பார்கள். வெளி மனிதர் வீடு வந்தால் உள்ளே ஒளிந்து கொண்டாக வேண்டும். கொட்டிக் கொட்டியே பெட்டிப் பாம்பாய் ஆக்கிவிடுவார்கள். அப்படி ஒரு பெண்ணிடம், எவனோ ஒருவன் துரத்தித் துரத்தி அன்பைக் கொட்டும்போது, மாயக்கதவுகள் தகர்ந்து, அவள் குழந்தையாகி விடுகிறாள். வந்தவன் நல்லவனானால்… அவர்கள் அதன்பிறகு ‘இனிதாக வாழ்ந்தார்கள்’ என்று சுபம் போடலாம். நாதாரி நாயாக இருந்தால், ஆரம்பிக்கும் நரகம்.

கீர்த்தனா கொள்ளை அழகு… பையன்கள் என்னென்னவோ செய்து பார்த்தார்கள். எல்லாவற்றிற்கும் புன்னகை மட்டுமே பதில். எனக்கும் அவளைப் பிடிக்கும். நானும் கூடக் காதலைச் சொன்னேன். சிரித்தாள். ‘இதுதான் உன் வாழ்க்கையின் லட்சியமா…?’ என்றாள். நான் பதில் கிடைக்காமல் தடுமாறினேன். சிரித்துக்கொண்டே போய்விட்டாள் கீர்த்தனா. அந்த நிமிடம் எனக்கு அவமானமாக இருந்தாலும், பிறகு அதைக் கடந்து அவளுடன் நட்பைத் தொடர முடிந்தது.

இப்போது நாசாவில் வேலை செய்கிறாள். ‘ரொம்ப சந்தோஷமா இருக்கேன் செல்வா! எவ்வளவு நாள் கனவு… நான் ஜெயிக்கப் போறேன். இன்னும் ஒரு வருஷத்துல ப்ராஜக்ட் லீடராயிடுவேன்’ என்று மெயில் அனுப்பியிருந்தாள். கணவன் பற்றியோ, குழந்தை பற்றியோ… ஹூம்!

வாழ்க்கை சிலருக்கு எவ்வளவு எளிதாகப் போய்விடுகிறது! அவளுக்கும் உணர்வுகள் இல்லாமலா இருந்திருக்கும்? உணர்ச்சிகளைத் தள்ளிவைத்துப் பறந்தால் மட்டுமே, உயரம் கைகூடுகிறது.

காதலா, சரி…

திருமணமா செய்துகொள்.

‘கல்யாணத்துக்குப் பிறகு வேலைக்குப் போகக்கூடாது’ என்று உன் வேலையை, திறமையை, அடையாளத்தை விலையாகக் கேட்கிறானா?

‘ச்சீ… போடா!’ என்று துரத்து!

உன் அருமை புரிந்து உன்னை ‘இன்ச்… இன்ச்!’ ஆகக் காதலிக்க ஒருவன் கிடைப்பான். அதுவரை காத்திரு! கிடைத்தது போதும் என்று அவசரப்படாதே!

தன்னடக்கத்துக்கும், தாழ்வுமனப்பான்மைக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.

கறுப்பு, குள்ளம், படிப்பு, பணம் என்று எதுவுமே பிரச்னை ஆகக்கூடாது பெண்களே… மனம் மட்டும்தான் பிரதானம்!

கறுப்பாக இருந்தால் உன்னை ஒருவரும் பார்க்காவிட்டால், உன்னைக் காதலிக்காவிட்டால் என்ன இப்போது? இதை ஒரு குறையாகத் துயரப்பட்டுப் புழுங்கும் பல பெண்களைப் பார்த்திருக்கிறேன்! இளமை கொல்லும் அந்த மூன்று வருடங்களை மட்டும் பொறுத்துக் கொண்டால் பின் நீதான் ராணி!

இதற்கெல்லாமா தனிமைப்பட்டுப் போவது? உலகத்தின் பெரிய மாடல்கள் கறுப்பு நிறம்தான். முதலில் உன்னை உனக்குப் பிடிக்க வேண்டும்!

– இயக்குனர் செல்வராகவன்.

 
3 பின்னூட்டங்கள்

Posted by மேல் நவம்பர் 1, 2011 in கட்டுரை

 

குறிச்சொற்கள்: , ,