RSS

Monthly Archives: ஒக்ரோபர் 2010

அவள் அப்படித்தான்

கிருஷ்ணன் அந்த தனியார் கம்பனியில் சாதாரண பியூனாகத்தான் வேலைக்குச் சேர்ந்தான். அவனது வலது உள்ளங்கையில் தனரேகையுடன் சுக்கிரனும் சேர்ந்து பின்னிக்கொள்ள.. சில வருடங்களில் மேலாளராக உயர்ந்துவிட்டான்.

மிருதுளா அந்த அலுவலகத்தில் டைப்பிஸ்ட்டாக பணிபுரிய ஆரம்பித்தவள், இன்றளவிலும் டைப்பிஸ்ட்டாகத்தான் இருக்கிறாள்.

கிருஷ்ணன்- மிருதுளா கல்யாணவிருந்து என்றைக்குத்தான் கொடுப்பார்களோ? என ஆவலுடன் காத்திருந்தனர் சக பணியாளர்கள். அந்த அளவிற்கு இருவரது காதலும் நெருக்கத்தைக் கொடுத்திருந்தது.

வழக்கம் போல கடற்கரையில் சந்தித்துக்கொண்டனர். கிருஷ்ணன் மெல்ல ஆரம்பித்தான், ‘மிருது…. வந்து…… இப்ப கடைசியா இருக்கிற ரீஜினல் மேனேஜர் பதவிக்கு நான் வரனும்னா நீ மனசு வைக்கனும்..’

‘என்னடா கிருஷ் இப்படி சொல்லிட்ட, நான் உனக்காகவே வாழ்ந்துகிட்டு இருக்கேன், ஏன்டா தயங்குற! சொல்லும்மா கிருஷ், நான் என்ன செய்யனும்?’

‘அது ஒன்னுமில்ல மிருது. நம்ம கம்பனி சேர்மேனுக்கு உன்மீது ஒரு கண்ணாம். நான் உன்னைக் காதலிப்பதால்தான் தயங்குகிறாராம். ஒரே ஒரு நாள் மட்டும் உன் கூட…. ஆசைப்படறார்…’

‘அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?’’  மிருதுளாவின் கண்களில் சிவப்பேறியிருந்தது.

‘யோசித்துப்பார் மிருது, ஒரு நாள் மட்டும் அவரோட நீ இருந்தேன்னா நம்ம எதிர்காலம் பிரகாசமா இருக்கும்…’

தயங்கித்தயங்கி முடித்தான் கிருஷணன்.

‘சரி, நான் நாளை இரவு நம்ம முதலாளி வீட்ல இருப்பேன்’’ என்றாள் மிருதுளா.

மறுநாள் அலுவலகம் வந்த கிருஷ்ணனிடம் ஒரு கவர் தரப்பட்டது.

அதில் கிருஷ்ணனுடைய பணி நீக்கத்திற்கான உத்தரவு காணப்பட்டது. அதுமட்டுமல்ல; அன்றே மிருதுளா, மேலாளர் பதவியின் இருக்கையை அலங்கரித்தாள், அந்த கம்பனி சேர்மேனின் ஆசை நாயகியாக.

நன்றி – ஆ.வி. .

 

 
பின்னூட்டமொன்றை இடுக

Posted by மேல் ஒக்ரோபர் 22, 2010 in சிறுகதை

 

குறிச்சொற்கள்: , , ,

கானல் வரி…‘தமிழ்நதி’யின் புத்தகம் பற்றிய அலசல் (2)

கள்ளக்காதல் யார் கண்டுபிடித்த வார்த்தையோ தெரியவில்லை. திருட்டுத்தனம் என்று அர்த்தப்படுத்திக்கொண்டாலும், எல்லா நல்லக்காதல்களும் திருட்டுத்தனமாகத்தான் (பெற்றோருக்குத்தெரியாமல்) அரங்கேறுகின்றன. காதலுக்கு கண் மட்டுமில்லை, எல்லையும் இல்லை. சமுதாய வரைமுறைகளை மீறி இப்படி வேறொருவரை (கணவரைத் தவிர்த்து) நேசிக்கும் போது, நாம் தவறு செய்கிறோம் என்கிற குற்ற உணர்ச்சியிலிருந்து அது ஆணாலும் சரி, பெண்ணானாலும் சரி தப்பிக்க முடிவதில்லை.

ஆனால் இந்தக்கதையின் நாயகியோ எந்தக்குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தன் ஆனந்த ஆத்மார்த்த நிலைக்கு வித்திட்ட உணர்வை உயர்த்திப் பிடிக்கிறாள். வித்தியாசமாகத்தானிருக்கிறது. எல்லோருக்கும் இதே மாதிரி மனநிலை வாய்த்து விடுகிறதா என்ன? வெளிநாட்டிலிருந்து வந்து, அக்கம் பக்கம் அவளைப்பற்றிய விபரம் ஏதும் தெரியாத நிலையில், மாதவியோ விரும்பியவனோடு இப்படி ஊர் சுற்றி இன்பம் அனுபவிக்கிறாள். ஊர் உறவு என்ற வேலிகளோடு வாழும் பெண்களோ இத்தகைய உறவுகளை விரும்பி ஒருகாலகட்டத்தில் கள்ளக்காதல் என்ற தலைப்போடு தந்தியில் சந்திசிரித்துப் போய்விடுகிறார்கள்.

‘பெண்ணுடலை நிர்வாணமாக பார்த்த அந்தக்கணத்தில் அப்பெண்ணின் மேலிருந்த மரியாதை சரிந்து விடுகிறது’ பிரபஞ்சனின் இந்தக்கூற்று உண்மையா என்று ஆண் வர்கத்தைத்தான் கேட்க வேண்டும். நட்போடு இருக்கிறவரை நாகரிகமாக பேசிப்பழகியவர்கள் கூட எல்லை மீறி செக்ஸில் ஈடுபடும்போது வாடி, போடி என்றழைப்பது இதனாலோ! குடிகாரன் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி தினமும் குடிப்பதைப்போல, விரும்பிய பெண்ணின் நிர்வான உடல் மீண்டும் மீண்டும் போதையேற்றி, அவள் பின்னே மரியாதை இழந்து அலைபவர்களைத்தான் நான் அதிகம் பார்த்திருக்கிறேன். சீச்சி இந்தப்பழம் புளிக்கும் என்று வேறு பெண்ணைப் பார்ப்பவர்கள் குறைவுதான். அவன் உபயோகித்த அந்த யோனியை வேறு யாரும் உபயோகப்படுத்த்திவிடக்கூடாது என்கிற தந்திரத்தை பிரயோகிப்பவர்களும், பெண்ணை தன் உடைமையாகப் பார்ப்பவர்களும்தான் ஆண் வர்கத்தினர் பெரும்பாலானோரும். இதனால்தான் கள்ளக்காதலில் நிறைய கொலைகள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறதுபோலும்.

நட்பும் சரி, காதலும் சரி ரொம்ப சுயநலமானது. நமக்குரியவரை யாருக்கும் விட்டுத்தர மனசு வருவதேயில்லை. அது இன்னொருத்தன் பொண்டாட்டியாகவோ இல்லை இன்னொருத்தியின் கணவனாகவோ இருந்தால் என்ன? ஆனால் நாம் மட்டும் சம்பந்தப்பட்ட உறவுகளை விடுத்து இப்படி கள்ளக்காதல் செய்யலாமா? நியாய அநியாயங்கள் காதலிலும், காமத்திலும் இல்லாமல் போவதேன்?

நிறைய வரிகள் மிகப்பொருத்தமாக கையாளப்பட்டிருக்கின்றன. உதாரணம்- ‘கொழுப்பெடுத்த கள்ளக்காதல் என்று வர்ணிப்பதற்கான சகல தகுதிகளையும், இரகசிய மீறல்களையும் கொண்டதாகிய இந்த உறவு, குழந்தைத் தனங்களையும் கொண்டிருப்பது முரண் நகையாக இருக்கிறது’. அடுத்து புனிதம் பற்றிய செல்லாடல் வரும் இடத்தில் ‘எழுத்து நினைத்தபடியே நான்’, ‘நான் நினைத்தபடியே எழுத்து இரண்டு பேரும் வேறில்லை’. இன்னொரு இடத்தில் ‘இதென்னடாது…. இன்னொருத்தனின் பொண்டாட்டியை இன்னொருத்தியின் கணவன் கட்டுப்படுத்துவதாவது………

ஆண்களின் இலக்கே அன்பு, காதல் என்ற போர்வையில் பெண்ணை மயக்கி அனுபவிக்கும் எண்ணம்தான். ஆனால் பெண்கள் இயல்பான இரக்க குணத்தாலும், புகழ்ச்சியிலும் உண்மையில் மதி மயங்கிப்போகிறார்களா இல்லை தங்களின் சொந்த தேவை நிறைவேறுவதற்காக மயங்குவதைப் போல் நடிக்கிறார்களா? உண்மைதான் என்று யாராவது ஒப்புக்கொள்வார்களா? அவுசாரி பட்டத்திற்கு பயந்துதான் இத்தனையும் அனுபவித்தாக(!) வேண்டியிருக்கிறது. சிலருக்கு குடும்பத்திலிருந்து கொண்டு இப்படி ரகசியமாக கள்ளக்காதல் செய்வதுதான் பாதுகாப்பானதாகவும், சௌகர்யமாகவும் இருக்கிறது!?. தனியே போய் செய்வதானால் பலான பட்டத்தோடு பல பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடுகிறது. காற்று வேறு பக்கம் அடிக்கிறதோ! சரி விஷயத்துக்கு வருவோம். என்னதான் நியாயம் கற்பித்தாலும் இந்த வகைக்காதல்கள் துரோகத்தை அஸ்திவாரமாக்கொண்டதுதானே?

(அடுத்த பதிவில் தொடர்கிறேனே………).

அன்புடன்,

உயிர்த்தோழி.

 

குறிச்சொற்கள்: , , , ,

கானல் வரி…………. ‘தமிழ்நதி’யின் புத்தகம் பற்றிய அலசல்


வாசிப்பு அனுபவம் என்பது அலாதியானது. புத்தகத்தை கையில் எடுத்துவிட்டால் அதை முடிக்காமல் கீழே வைத்ததில்லை என்ற கடந்த காலத்தை நினைத்தால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.  தற்போதைய இன்டர்நெட், மொபைல் ஃபோன், கணக்கற்ற தொலைக்காட்சி சேனல்கள் என எதுவுமே இல்லாத அந்த நாட்களின் ஒரே பொழுதுபோக்கு வாசிப்பு மட்டுமே. நூலகத்திற்குச் சென்றால்கூட நேரத்தோடு வீட்டிற்கு வந்ததே இல்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு எழுத்தளர்களைப் படித்த அந்த சுகானுபவங்கள் மீண்டும் வரவே வராது என்றுதான் நினைக்கிறேன். இணைய உலகின் பரந்துபட்ட அறிமுகம் கிடைத்தபின் மீண்டும் வாசிப்பனுபவம் தொடங்கிவிட்டாலும், புத்தக வாசிப்பு என்பது முடியாத ஒன்றாகிவிட்டது.

இலங்கை எழுத்தாளர்கள் எவருடைய நூலையும் இதுவரை படிக்க சந்தர்பம் கிடைத்ததில்லை. ஒரு புதுமாதிரியான எழுத்து நடை. வழக்கத்திலில்லாத (தமிழ்நாட்டில்) சொற்பிரயோகங்கள் என ஆரம்பத்தில் இப்புத்தகத்தை படிக்க முனைந்தபோது மெதுவாகவே வாசிக்க முடிந்தது. போகப்போக மாதங்கியின் மனசை படிக்கத்துவங்கியதும் மற்றெல்லாம் மறந்து போய்விடுவது ஆச்சர்யம்தான்.

‘தமிழ்நதி’யைக் கூட ஆனந்தவிகடனிலோ/குமுதத்திலோ பேட்டி கொடுத்திருந்த போது படித்ததுதான். அவரது வலைதளத்தைக்கூட சமீப காலமாகத்தான் படிக்கத் துவங்கினேன். தற்செயலாய் படிக்க நேர்ந்த இப்புத்தகத்தைப் பற்றி ஏனோ அப்போதே எழுதவேண்டும் என்று தோன்றியது. பல காரணங்களால் முடியவில்லை. ‘காதல்வலிகளை’ கானல் வரிகளாக்கியிருக்கிறார். காதல் என்பது சந்தோஷமட்டுமில்லை, வேதனையும் கூட என்பது நிறையபேருக்குப் புரிவதில்லை. பிரிக்கமுடியாத காதல் உறவுகள் கூட பிணக்கில்லாமல் இருந்ததில்லை. ஊடலும் கூடலுமான இந்த வாழ்க்கையின் சுக, துக்கங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளமுடிவதில்லை.

நான்கைந்து வருடங்களுக்கு முன்பு கடிதப்போக்குவரத்து மிக அவசியமானதாக இருந்த காலகட்டத்தில் மனக்குமுறல்களையும், ஆற்றாமையையும் வெளிப்படுத்த வடிகாலாக இருந்த ஒரே விஷயம் கடிதம் எழுதுவதுதான். ஆனால் இப்போதோ எல்லாவற்றையும் கொட்டித்தீர்க்க கைப்பேசி வந்துவிட்டது. இருப்பினும் காதலில்தான் பேசுவதற்கு காலம் போதாத சாபக்கேடு இருக்கிறதே!. கணவன் மனைவிக்குள்ளே கூட பேச விஷயமே இருக்காது. எத்தனை பேசினாலும், பகிர்ந்து கொண்டாலும் மனசுக்குள்ளே புதைத்துக்கொண்டவைதான் அதிகமாக இருக்கும். விருப்பு-வெறுப்புகளுக்கு மத்தியில் விட்டுக்கொடுத்துதான் வாழ்க்கையை ஓட்ட வேண்டியிருக்கிறது.

அரசியல் கட்சியானாலும் சரி, அது அடுப்படியானாலும் சரி தலைவருக்குப் பிடித்ததைச் செய்யும் அடிமைதான் நல்ல விசுவாசி. மாற்றுக் கருத்துக்கும், மனசிலுள்ளவற்றைச் சொல்வதற்கும் மரியாதை இல்லாத இடங்களில் என்னத்தை கூறிவிடமுடியும்?

கானல்வரியின் நாயகி மாதவியின் மனக்குமுறல்கள் உயிரோட்டமாக, மிக இயல்பாக, பாசாங்கற்ற ஒரு பெண்ணின் எண்ணங்களாகவே இருக்கின்றன. மாதவி திருமணம் ஆனவள். கணவனோ அன்பானவன், பெருந்தன்மையுடையவன் எல்லாம் சரி. அவனிடத்தில் எது இல்லை என்று அவள் மௌலியைத் தேடினாள்? பின் ஏன் விலக்கினாள்?…………… என்னடா ‘இது நம் கதையைப்போலவே இருக்கிறதே’ என்று நினைத்ததுமே சுவாரசியம் கூடிவிட்டது. படித்து முடித்ததும் இதயம் கனத்துப்போனது உண்மை. விமர்சனமாக இல்லாமல் இதை ஒரு பகிர்வாக எழுதலாமே என்ற எண்ணத்தில் விளைந்ததே இப்பதிவு.

(அடுத்த பதிவில் தொடர்கிறேன்).

அன்புடன்,

உயிர்த்தோழி.

 

குறிச்சொற்கள்: , ,