RSS

அமேசான் கிண்டிலில் கிடைக்கிறது!

இந்தத் தளத்தில் வெளியான அனைத்து கடிதங்களும் கிண்டில் புத்தகமாக அமேசான் தளத்தில் வெளியிட்டிருக்கிறேன். ஆங்கில மொழிபெயர்ப்பும் நடந்து கொண்டிருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் வாங்கிப் படிக்கலாம்.

https://www.amazon.in/dp/B08LBPR7DF

 

குறிச்சொற்கள்: ,

குற்ற உணர்சி

Image result for guilty feeling images 

அன்பே! உன் மௌனம் என்னை சித்ரவதை செய்தது உண்மை. அன்பு சுமையாகிவிடக் கூடாது என்பது உண்மைதான் என்றாலும் அறுத்துக்கொள்ளவும் ஒரு காரணம் வேண்டுமல்லவா? மனிதனை உதாசீனப் படுத்துவதுதான் பஞ்சமா பாதகங்களை விடக் கொடுமையானது.

பதில் எழுத மறுப்பதற்கு என்ன காரணம் என்பது தெரியாமல் நான் பட்ட வேதனை… நேர் செய்து விட்டாய். யாராலும் பேசமுடியாயதை நாம் பேசி பகிர்ந்து விட்டுச் சட்டென்று விலகிப் போவது பாரம்.

உறவுகளை விட ஸ்நேகங்கள் உண்ணதமானவை. எந்த சுமையுமில்லாத நட்பு ஆரோக்கியமானவை. உன் கோபம் என்னவென்று தெரியாமல் காத்துக் கிடந்த சோர்வு என்னை அசிங்கப் படுத்தியது.

அறிவும் மென்மையும் கொண்ட ஒரு ஸ்நேகிதியை இழந்து விட்டேனோ என்று நொந்து போயிருந்தேன். பிராத்தனைக்குப் பலன் கிடைத்த மாதிரி என் வேதனைக் கடி்தத்திற்கு பயன் கிடைத்து மனமிரங்கியிருக்கிறாய். என் மனதில் அனாவசியமான ரணங்கள் ஏற்படுவதைத் தடுத்திருக்கிறாய்.

பூத்ததை எல்லாம் சூடிக்கொள்ள முடிகிறதா என்ன? அது போல வாழ்கையில் எதிர்பட்டவர்களை எல்லாம் நட்பு பாராட்ட முடிகிறதா? யாரையும் எதற்காகவும் குற்றம் சொல்ல முடியாது.  நாம் எல்லோரும் உணர்ச்சிக்கு அடிமைப்பட்டவர்கள். காலம் நம் தலைக்கு மேலே இருந்து சாட்டையைச் சொடுக்குகிறது. நாம் அதன் ஆணைக்கேற்ப ஆடிக் கொண்டிருக்கிறோம். நம்க்கு நேர்வதெல்லாம் நாமாகத் தீர்மாணிப்பதில்லை. எல்லமே நம்மீது திணிக்கப் படுகிறது. இதில் யாரைக் குற்றம் சொல்வது? கு்ற்றவாளிகள் குற்றவாளிகளுக்கே தீர்ப்பு எழுதக் கூடாதல்லவா?.

உலகம் இதுவரை செய்யாத எந்த தப்பையும் நீ செய்துவிடவில்லை. நம் முன்னோர்கள் செய்யாத தப்பையா நாம் செய்துவிட முடியும். வளர்ந்த பெண்ணின் அப்பாவாக இருந்து கொண்டே மனைவி இருக்கும்போதும் இன்னொருத்தர் மீது இப்படி ஒரு ஆசையைப் படறவிடுகிறோமே என்ற குற்ற உணர்ச்சி என்னைக் கொல்கிறது.

இதில் என்னுடைய அபிப்ராயம் என்னவென்றால் இது இரண்டுமே தேவையில்லாதது. முதலில் நீ ஒரு மனுஷி. ரத்தத்தாலும், சதையாலும், நரம்பாலும் உருவானவள். உனக்கென்று ஒரு ஆத்மா, உனக்கென்று ஒரு ருசி, உன்க்கென்று ஒரு வாழ்க்கை தேவை. எல்லா மனித உயிர்களுக்குமே இதுதான் நியதி. புழுங்கிக் கிடக்கும் நெஞ்சுக்குள் ஒரு புதுத்தென்றல் வேண்டுமில்லையா?

யாரும் அக்னிப் பிரவேசம் செய்யச்சொல்ல முடியாது. சட்டம் சம்பிரதாயம் ஒன்றும் பண்ண முடியாது. பக்கத்து வீட்டுக் காரிக்கெல்லாமா பயப்படுவது?. எந்த குற்ற உணர்ச்சியும் உனக்கு வேண்டாம். எது உனக்கு சந்தோஷத்தையும் சுதந்தரத்தையும் கொடுக்குமோ அதைச்செய். பெண்கள் மனந்திறந்து சொல்லாததனாலேயே  இந்த உணர்வே இல்லைன்னு சொல்ல முடியாதில்லையா? இந்தச் சமூகம் சொல்ல விடாம அடக்கி வச்சிருக்கு.

 

எழுதப்படாத டைரி

Lovers

திருமண அழைப்பிதழ் வந்தது. முகவரியில் ராதாவின் கையெழுத்து. என் பெயர் கூட அவள் எழுதும்போது புதுக்கவிதை.

என்ன நடந்திருக்கும்…? ஏன் இந்த திருமணம்…? அவளுக்கு என்னவாயிற்று…? எப்படி மறக்க முடிந்தது…?
‘அரவிந், ஊருக்குப் போறேன். எங்க பாட்டி ரொம்ப ஆசாரம். அவதான் எங்க குடும்பத்துக்கு மகாராணி.

அப்பா இன்னும் தன் தாய்க்குச் சேவகன்தான். அம்மா அடிமை. நம்ம காதலை எப்படியும் சொல்லிடுவேன். பாட்டி சம்மதிக்கணும். இல்லேன்னா…’

அவள் சொன்னது மறு ஒலிபரப்பானது. அழைப்பிதழில் கடிதமாவது வைத்திருப்பாள் என நம்பினேன்.
இல்லை.

கவரை மட்டும் வைத்துக்கொண்டு, அழைப்பிதழைத் தூள் தூளாகக் கிழித்துப் பறக்க விட்டேன். உள்ளம் சிதறியது போல, காற்றில் அது சிதறியது. ஒரு துண்டு மட்டும் என் சட்டையில் ஒட்டிக்கொண்டது.

வேண்டாம், இது கூட வேண்டாம். அந்தக் காகிதத் துண்டை எடுத்தேன். பின்புறம் அவள் பெயர் – பெயர் மட்டும் கிழியாமல் ஒரு துண்டாக…

இன்னும் என்னைப் பிரிய மனமில்லையா ராதா..? நீ மட்டும் குற்றவாளியாக இருக்க முடியாது. எப்படியோ… இனி எல்லாவற்றையும் மறந்துவிடு.

போ… காகிதத்துண்டைப் பறக்க விட்டேன். காற்றும் வீசவில்லை. அதுவும் சதி செய்தது. கவரை மட்டும் பத்திரப்படுத்தி என் டைரியில் வைத்துக் கொண்டேன். அவள் கடைசியாகப் பதித்த கைச்சுவடு. இரவு இமைகள் மூடவில்லை. எழுதும் நாட்குறிப்பில் பல பக்கங்களை அவள் விழுங்கினாள். என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

‘அரவிந்… எல்லாவற்றையும் பாஸிட்டிவா நெனைப்பீங்க. இதையும் அப்படி நெனச்சுக்குங்க.’ திருமணத்துக்கு வருவீங்களா அரவிந்… வந்து வாழ்த்தணும்… வரமாட்டீங்க…

ஒரு காதல் சந்திப்போடு என் நினைவு பசுமையாக இருந்துவிட்டுப் போகட்டும். கல்யாணக்கோலத்தில் இன்னொருவனோடு நிற்கிற அந்தக் காட்சி ஏன் மனதில் பதியணும்..?

புரியுது. இப்ப குற்றவாளிக் கூண்டில் நான். எனக்கு என்ன தண்டணை? காதல்னா தப்பா நினைக்கிற மனிதர்கள் ஒருபுறம்… காதல்னா – தோல்விதான்னு நெனைக்கிற கற்பனை ஒருபுறம்…

கற்பனை நிஜமாகிவிட்டதா அரவிந்…? நாட்குறிப்பில் அவள் பேசிக்கொண்டே இருந்தாள். மறந்துடு ராதா! நம்ம காதல் எவருக்கும் தெரிய வேண்டாம். சொல்லிவிடாதே ராதா… என்னைப்போல் எத்தனை பேர் பாஸிட்டிவா நெனைப்பாங்க..? வேண்டாம் மறந்துடு.

காதலிக்காதவங்க யார்? இதயம் இருக்கிற வரை காதல் இருக்கும். சில சத்தம் போட்டுக் கலக்கும். அல்லது, ஊமையாக இருந்துவிட்டு அழும். பயத்தில் கல்லறை கட்டிவிட்டு நினைவு மண்டபத்தை இடிக்க முடியாமல் தவிக்கும்.

திருமணங்களில் கலந்துகொள்ளும் போதெல்லாம் நான் நினைப்பேன்.

இதில் எந்தக் கதவு திறந்திருந்தது..? எந்தக் கதவு மூடிவிட்டது..?

இந்தப் பெண்ணுக்காக எங்கோ, யாரோ ஒருவன் யாருக்கும் தெரியாமல் அழுதுகொண்டிருக்கிறானோ..? இந்த மணமகனுக்காக எவளோ ஒருத்தி சாபமிட்டுக் கொண்டிருப்பாளோ? எல்லாம் கற்பனைதான். காலம் அப்படி.

காதலிக்கணும். அப்பதான் மனசு மென்மையாகும். எல்லாமே அழகாகத் தோணும். தோற்றாலும் பரவாயில்லை. காதலிக்கணும். கம்பனும், கண்ணதாசனும் எத்தனை முறை தோற்றார்களோ..? தோற்றதில் அவர்களுக்கு வெற்றி.

நம் தோல்வி மறப்பதற்காக. மறக்க முடியுமா?

ஒரு வெள்ளிக்கிழமை கோயிலுக்குச் சென்றோம். பிரகாரத்தில் அமர்ந்து பேசியபோது நீ கேட்டாய் – சாமிகிட்ட என்ன வேண்டிக்கிட்டீங்க..?

எதுவுமே வேண்டலை… வரம் கேட்கத்தான் கோயிலுக்கு வரணுமா? நீ என்ன வேண்டிக்கிட்டே?
எங்களைப் பிரிச்சுடாதேன்னு வேண்டினேன். நான் வாய்விட்டுச் சிரித்தேன்.

உனக்குப் பயம். சேர்த்து வைய்யுன்னு வேண்டியிருந்தா அது நம்பிக்க. பிரிஞ்சிடுவோம்னு ஒரு பயம். அதான், அப்படியொரு வரம் கேட்டிருக்கே.

நான் பெண். பயம் இயற்கை. நீங்க எதையும் நல்லதாகவே பார்ப்பீங்க… அந்தக் குணம்தான் எனக்கு ரொம்பப் பிடிச்சது. கத்துக்கணும்… நிறைய கத்துக்கணும்… என்றாய்.

நினைவிருக்கா ராதா?

இன்று எனக்குப் பிறந்த நாள். நீங்க எனக்கு ஏதாவது வாங்கித் தரணும் என்றாய். ‘நமக்குப் பிறந்த நாள் நாளைக்கு என்றேன்.

உனக்குப் புரியவில்லை. நம்ம காதலுக்கு ஒரு வயசு. எனக்கு என்ன வாங்கித் தர்றீங்க… வளையல்…?
வேண்டாம். சத்தம் போடும். மனசு மிருதங்கமாகும்.
கொலுசு..? மனசு நாட்டியமாடும். அப்போ என்னதான் வாங்கித் தருவிங்க?
பூ… சத்தமில்லாமல் மணக்கும். மனசு நிறையும். உனக்கு எந்தப் பூ பிடிக்கும்?

ரோஜா… உங்களுக்கு?

மல்லிகை. உனக்குப் பிடிச்சதால எனக்கும் இப்போ ரோஜாவும் பிடிச்சிருக்கு.

பூ வாங்கித் தந்தேன். அன்று மட்டுமல்ல, தினமும். பூக்கடைக்காரனே நண்பனாகி விட்டான். நம்மைப் பார்த்ததும் ஒரு ரோஜாவை எடுத்துத் தந்துவிடுவான். ஒரு நாள் அவன் கேட்டுவிட்டான்… என்ன சார் பூவா வாங்குறீங்க… எப்போ மாலை வாங்கப் போறீங்க…?

அவன் நாளைக்கு என்ன கேட்கப் போகிறானோ? ஒரு பூக்கடைக்காரன் கூட உன் நினைவை மறுபதிவு செய்வான். நாம் நடந்து வந்த பாதைகள்… கால்கள் பதித்த கடற்கரை… உண்டு மகிழ்ந்த உணவு விடுதி… எல்லாமே தொல்லை செய்யும். வேண்டாம் இந்த ஊரே வேண்டாம்.

இப்போ நான் சாமியிடம் வேண்டிக்கிறேன். மறுபடியும் உன்னை நான் சந்திக்கவே கூடாது. நீ எங்கிருந்தாலும் நல்லா வாழணும்.

எனக்காக நீ என்ன வேண்டுவாய் ராதா?

ஒரு ரோஜா உதிர்ந்து விட்டது. உங்களுக்குப் பிடித்த மல்லிகை எங்கோ பூத்திருக்கும். ஒன்றை மறக்க இன்னொன்று அவசியம் என்பாய். எனக்கு அவசியமில்லை. அவசரமில்லை… காலம் சொல்லும்.

வீட்டுக்குள் நுழைந்ததும் காயத்ரியைத் தேடினேன். எங்கு போயிருப்பாள்? என் அறைக்குள் கட்டலில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள். என்னவாயிற்று இவளுக்கு? புரியாமல் நெருக்கமாக அமர்ந்தேன்.
என்ன ஆச்சு காயத்ரி? விம்மினாள்.

சொல்லிட்டு அழு. உங்க டைரியைப் படிச்சேன்…. விம்மத் தொடங்கினாள். புரிந்துவிட்டது. காயத்ரியைத் திருமணம் புரிந்துகொண்ட பிறகு சொல்ல வேண்டும் என்ற நினைவு இல்லை. ஏன் சொல்ல வேண்டும்? அந்த ராதாவுக்கு ஒரு சட்டம்.. எனக்கு மட்டும் ஒரு வழக்கா? வீடு என்றிருந்தால் ஜன்னல்கள் இருக்கும். ஜன்னல்கள் இருந்தால் காற்று வரும். காதலும் அப்படித்தான்

ஜன்னலுக்காகச் சண்டை போடப்போகிறாளா? காற்றுக்காகக் கண்ணீரா? எதற்கு இந்த அழுகை? சரி… எதுக்கு அழறே? ‘நீங்களும் காதலிச்சிருக்கீங்களா? என்றவாறு என் மார்பில் சாய்ந்து விம்மினாள். ஒரு டைரி எழுதப்படாமல் படிக்கப்பட்டுவிட்டது.

அவள் கன்னங்களில் வழிந்தோடிய கண்ணீரைத் துடைத்துவிட்டு இறுக்கமாக அணைத்துக் கொண்டேன். அதில் சிறகுகளின் ஆறுதல்.

– சாரதா நாகரத்தினம் 18.02.2001

 

குறிச்சொற்கள்: