RSS

Tag Archives: சாரு

பின் நவீனத்துவ எழுத்து வெறும் போர்னோவா? – சாருநிவேதிதா

கலைத்துப்போடுதல், ஆபாசம், புரியாமை – சர்ச்சை – தமிழில் பின்நவீனத்துவ நாவல்கள் என்ற தலைப்பில் குமுதம்-‘தீராநதி’ அக்டோபர் 2003-ல் சாருநிவேதிதாவின் பேட்டி!

பின்நவீனத்துவ எழுத்து ஒரு ஜந்து மாதிரி தமிழ் இலக்கியச் சூழலில் எழுத்தாளர்களையும், வாசகர்களையும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. பின் நவீனத்துவ நாவல் என்று தங்களுடைய எழுத்துக்களுக்குத் தாங்களே சான்றிதழ் அளித்துக்கொண்டு நாவலை வெளியிடுகிறார்கள். படித்துப் பார்த்தால் எழுத்து என்பதற்கு வேண்டிய அடிப்படையான அம்சத்தையே காணோம். அது என்ன வாசிப்புத்தன்மை? பலருடைய எழுத்து ஏதோ சங்கேத பாஷையாகவும், குழுஉக்குறிகளாகவும் உள்ளன. அந்தக்காலத்து சித்த மருத்துவக் குறிப்புகளைக் கொண்ட ஓலைச்சுவடிகளையே இவை ஞாபகப்படுத்துகின்றன. பெரும்பாலான பின்நவீனத்துவ நாவல்களின் தோல்விக்கு இதுவே காரணம். இதற்கு உதாரணங்களாக பிரேம் ரமேஷின் நாவல்கள் மற்றும் கோணங்கியின் பாழி போன்றவற்றைச் சொல்லலாம். பின் நவீனத்துவத்துக்கு நேர் எதிரான ஒரு தன்மை இங்கே பின் நவீனத்துவத்துவமாக அடையாளம் காணப்பட்டது ஆச்சர்யம்தான். ஆனாலும் முன்னுதாரணங்கள் உள்ளன. உ-ம் புரட்சி.

பின்நவீனத்துவ எழுத்தின் முக்கிய தன்மை- ரொலாந் பார்த் குறிப்பிடும் PLEASURE OF THE NEXT. இங்குள்ள பிரதிகளைப் படிக்கும்போது தகரத்தை சிமென்ட் தரையில் தேய்ப்பதைப் போன்ற நாராச உணர்வே ஏற்படுகிறது. இதற்கு மாறாக உலக இலக்கியத்தில் பின்நவீனத்துவத்துவ எழுத்தாளர்களாக அறியப்படும் உம்பர்த்தோ எக்கோ, இடாலோ கால்வினோ, ஜெர்ஸி கோஸின்ஸ்கி போன்றவர்களின் எழுத்து ஒரே வாசிப்பில் படித்து முடிக்கக்கூடிய அளவுக்கு சுவாரசியமானவை. எக்கோவின் நாவல்கள் வணிக எழுத்தாளர்களின் விற்பனையையும் மிஞ்சியவை. இதே ரீதியில் ‘நாங்களும் சுவாரசியமாய் எழுதுகிறோம்’ என்று புறப்பட்டசில பின்நவீனத்துவத்துவ எழுத்தாளர்களின் நாவல்களோ கலைத்தன்மை ஏதுமற்று, தட்டையான மொழியில் உள்ளதால் இவற்றின் ‘எளிமை’ கலையின் பாற்பட்டதாக அல்லாமல், வணிக எழுத்தின் தரத்திலேயே நின்று விடுகிறது. எனவே வணிக எழுத்தாகவும் அல்லாமல், இலக்கியமாகவும் ஆக முடியாமல் காணாமல் போகும் துர்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்பட்டு விடுகின்றன.

தமிழவன், எம்.ஜி.சுரேஷ் போன்றோரின் உற்பத்தி இதற்கு உதாரணம். இந்த இடத்தில் நாம் வேறு ஒருவரை நினைவு கொள்ள வேண்டும். அவர் வணிக எழுத்தின் அத்தனை கூறுகளையும் எடுத்து அவற்றையே கச்சாப் பொருளாகக் கொண்டு ஒரு புதிய பின்நவீனத்துவத்துவ எழுத்துப்பாணியை உருவாக்கிய டொனால்ட் பார்த்தெல்மே.

பின்நவீனத்துவத்துவத்துக்கு முந்தைய எழுத்தாளர்களான கு.பா.ரா., அசோகமித்திரன், எம்.வி.வெங்கட்ராம் போன்றவர்களின் எழுத்தில் நாம் கண்டுணர்ந்த கலைத்தன்மையும், சுவாரசியமும் பெரும்பான்மையான பின்நவீனத்துவத்துவ எழுத்தாளர்களிடம் இல்லை. காரணம்? தெரியவில்லை. கோட்பாடுகள் தெரிந்த அளவுக்கு இலக்கியம் தெரியவில்லையோ? பின்நவீனத்துவத்துவ எழுத்தின் இந்தக்குறைபாடுகள் இலக்கியத் தயிர்வடைகளுக்கும், பத்தாம்பசலிகளுக்கும் நல்வாய்ப்பாகப் போய்விட்டது. ‘இதுவரை அரைத்துவந்த பழைய மாவையே தொடர்ந்து அரைப்போம்’ என்ற வாதம் வலுத்துப் போனதற்கும், நம்முடைய மண், நம்முடைய வாழ்க்கை, நம்முடைய அனுபவம் என்கிற ‘கல்சுரல் சாவனிசம்’ மீட்டுறுவாக்கம் பெற்றதற்கும் இதுவே காரணம்.

இத்தகைய நபர்கள் பின்நவீனத்துவத்துவ எழுத்தின் மீது வைக்கும் ஒரு குற்றச்சாட்டு – இது ஆபாசமான எழுத்து. நம்முடைய இலக்கியத்தில் சிருங்கார ரசம் இல்லையா என்று கேட்டால், பின்நவீனத்துவத்துவ எழுத்தில் சிருங்கார ரசம் இல்லை; இது வெறும் போர்னோ என்கிறார்கள். போர்னோகிராஃபி இலக்கியமாக அங்கீகரிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டது. மர்க்கி தெ சாத்-இன் எழுத்து போர்னோதான். ஆனால் அது இலக்கியமாகக் கருதப்படுகிறது. அத்தகைய எழுத்தை இங்கே எழுதுவது பற்றி யோசிப்பது கூட முடியாத காரியம்! ழார் பத்தேல் எழுதிய ‘விழியின் கதை’ நாவலைப்பற்றி சூசன் சொண்டாக் ‘CHAMBER MUSIC OF PORNOGRAPHIC LITERATURE’ என்கிறார்.

போர்னோகிராஃபி இலக்கியம் என்ற ஒருவகை உருவாகி இத்தனை காலம் ஆன பிறகும், ஆபாசம், போர்னோ என்று சொல்லிக்கொண்டிருப்பது ஒருவரின் அறியாமையையே குறிக்கும். அது அவர்களின் பிரச்சனையே தவிர பின்நவீனத்துவத்துவ எழுத்தாளர்களின் பிரச்சனை அல்ல.

அடுத்து ஜெயமோகனின் நாவல்களை பின்நவீனத்துவத்துவ எழுத்து என்று சொல்லும் கோமாளித்தனம்! பின்நவீனத்துவத்துவத்தின் அடிப்படையே மையத்தைத் தகர்ப்பது. இதை ஆண்-பெண் பாலியல் தன்மையை வைத்து விளக்கிச்சொல்லலாம். ஆண்களின் பாலியல் மையத்தைக் கட்டமைப்பது. பெண்களின் பாலியல், எல்லையற்றது. தொடக்கமோ முடிவோ அற்றது. ஜெயமோகனின் எழுத்து முதல் வகையைச் சேர்ந்தது. மிக மூர்க்கமான அதிகாரக்கட்டமைப்பைக் கொண்ட அவரது எழுத்து பின் நவீனத்துவத்துவத்துக்கு முற்றிலும் எதிரானது. அவரை எப்படி இதில் சேர்க்கிறார்கள் என்று புரியவில்லை!

 
7 பின்னூட்டங்கள்

Posted by மேல் ஜனவரி 27, 2010 in பாலியல்

 

குறிச்சொற்கள்: , , , ,