RSS

பாலியல் தொழிலாளி!

“எப்படி இந்த விஷயத்தைக் கணவனிடம் சொல்லப் போகிறோம்…’ என்று, திகைத்துப் போய் அமர்ந்திருந்தாள், சப்-இன்ஸ்பெக்டர் மாலதி.
காவல் துறையில், இடமாற்ற உத்தரவு வாங்குவது, அவ்வளவு சுலபம் இல்லை; அதற்கு, பல லட்ச ரூபாய் செலவாகும் என்று அவளுக்கு தெரியும். மதுரையில், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பணிபுரியும் அவள் கணவன், கை நிறைய சம்பளமும், பை நிறைய, “கிம்பளமும்’ வாங்குபவன். எத்தனை லட்ச ரூபாய் ஆனாலும், தானே கொடுத்து விடுவதாகச் சொல்லி இருந்தான்.

திருமணமாகி, ஓர் ஆண்டு தனி தனியாக வாழ்ந்து, வார இறுதி நாட்களில், “சந்திப்பு’ என்ற நிலைக்குப் பழகிக் கொண்ட பின், எல்லா நாளும் கணவனுடன் இருக்கலாம் என்ற செய்தி, மாலதிக்கு இனிக்கத்தான் செய்தது; ஆனால், அதற்கு இப்படி ஒரு விலையா?
தன்னுடைய இடமாற்ற உத்தரவுக்காகக் கேட்கப்பட்ட விலையை, கணவனிடம் சொல்வதா, வேண்டாமா என்ற குழப்பமும் இருந்தது. மாலதியின் புருஷன் மணி, இயற்கையிலேயே கோபக்காரன். இதைக் கேட்டு ஏதாவது அசம்பாவிதமாகச் செய்து விட்டால்…
மாலதியின் அலைபேசி அழைத்தது.

“ஏ.டி.எஸ்.பி., சேகர் பேசறேன்…’
“குட் மார்னிங் சார்!’
“சாஸ்திரி நகர்ல, ஒரு அபார்ட்மென்ட்ல மசாஜ்ங்கற பேர்ல, விபச்சாரம் நடக்கறதா தகவல் வந்துருக்கு!’
“எஸ் சார்!’
“பகல்லேயே நடத்தறாங்களாம். நீங்க சரியா, 11:00 மணிக்கு அங்க போங்க. கையும், களவுமா ஆளுங்களப் பிடிச்சிட்டு வந்துருங்க…’
“எஸ் சார்!’

மணி, 10:30 ஆகியிருந்தது. ஹெட் கான்ஸ்டபிள் பாண்டி வந்தவுடன் போகலாம் என்று தீர்மானித்தாள் மாலதி.
இந்தப் பாண்டிதான் அவளுக்கு ஆதரவாக இருக்கிறான். “மதுரைக்குப் பணி மாற்றம் வேண்டும்…’ என்ற அவள் விண்ணப்பம், பல நாட்கள் கிடப்பிலேயே கிடந்தது. பாண்டிதான் அது இருக்கும் இடத்தை மோப்பம் பிடித்து, அதைக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே நகர்த்தினான். அந்த உத்தரவில் கையெழுத்து போடும் வல்லமையுடைய அதிகாரியின் மேஜைக்கு, அந்த விண்ணப்பம் போனவுடன், அவளை அழைத்துக் கொண்டு, அந்த அதிகாரியைப் பார்க்கப் போனான்.
அவனை வெளியே இருக்கச் சொல்லி, மாலதியிடம் தனியாகப் பேரம் பேசினார், அந்த உயர் அதிகாரி.
“நீங்க மதுரைக்கு டிரான்ஸ்பர் கேட்டிருக்கீங்க. பொதுவா, இதுக்கு இன்னிக்கு ரேட், இருபது லட்சம் ரூபாய்; ஆனா, உங்ககிட்ட நான் அதக் கேக்கப் போறதுல்ல!’

“அத’ என்பதில், அவர் கொடுத்த அதிகப்படி அழுத்தம், அவர் எதைக் கேட்கப் போகிறார் என்பதை, அவளுக்குக் கோடிட்டு காட்டியது.
அசிங்கமாகச் சிரித்தபடி, அதைவிட அசிங்கமாகப் பேசினார் அதிகாரி…
“நான் அந்த விஷயத்துல கொஞ்சம் வீக். இல்ல, இல்ல… அந்த விஷயத்துல நான் ரொம்பவே, “ஸ்ட்ராங்!’ சந்தேகம்ன்னா… பீச் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், செண்பகலட்சுமிகிட்ட கேட்டுப் பாருங்களேன்…

“அடுத்த வாரம் நான் கொடைக்கானல் போறேன். நீங்க என் கூட வரணும்; நாலே நாள் தான். உங்களுக்கு, “டூட்டி மார்க்’ பண்ணச் சொல்லிடறேன். திரும்பி வந்தவுடன், உங்க, “டிரான்ஸ்பர் ஆர்டர்’ ரெடியா இருக்கும்; என்ன சொல்றீங்க?’
என்ன சொல்வது?
“இப்போ ஒண்ணும் சொல்ல வேண்டாம்; ரெண்டு நாள் யோசிங்க. டிரான்ஸ்பர் வேணும்ன்னா இந்த நம்பருக்குப் போன் பண்ணுங்க. இப்ப நீங்க போகலாம்!’

பேய் அறைந்ததைப் போல் வெளியே வந்தாள் மாலதி. இதை யாரிடமும் சொல்லக் கூடாது என, கங்கணம் கட்டிக் கொண்டாள்.
அவள் சொல்லாமலேயே, கண்டுபிடித்து விட்டான் பாண்டி.
“பணம் தவிர, வேற எதாவது கேட்டாரா மேடம்?’

உயிரில்லாமல், தலையாட்டி, நடந்ததைச் சொன்னாள்.
“யதார்த்தமா யோசிச்சிப் பார்த்து முடிவெடுங்க மேடம். இந்தாளு சொன்னா, கரெக்டா செஞ்சிடுவாரு; அந்த விஷயத்துல நேர்மையான ஆளு!’

“என்ன எழவு நேர்மையோ…’ என்று அலுத்துக் கொண்டாள் மாலதி.
“என்ன மேடம் யோசனையில இருக்கீங்க?’
பாண்டியின் பேச்சு, அவள் நினைவலைகளைக் கலைத்தது.
“பாண்டி… நாலு லேடி கான்ஸ்டபிள்களைக் கூட்டிக்கிட்டு, உடனே கிளம்பணும். “பிராத்தல்’ ரெய்டு செய்யப் போறோம்…’
“எங்க மேடம்?’
“அடையாறு சாஸ்திரி நகர்ல…’ விலாசத்தைச் சொன்னாள்.
“அங்க வேண்டாமே மேடம்’ வழிந்தான் பாண்டி.
“ஏன்யா…’
“நான் அவங்க கஸ்டமர் மேடம்… எனக்கு ரெகுலரா ஒரு ஆள் வரும். சரோஜான்னு பேரு. சூப்பர்…’
“த்தூ… உனக்கெல்லாம் எவன்யா போலீஸ்ல வேலை கொடுத்தது?’
தன்னைத் தகாத உறவுக்கு அழைத்த உயரதிகாரியிடம் சொல்ல முடியாத வார்த்தைகளை, பாண்டியிடம் சொன்னாள் மாலதி.

மதியம், 1:00 மணி —

சாஸ்திரி நகரில், சற்று ஒதுக்குப்புறமாக இருந்த வீட்டில் நடத்திய அதிரடி சோதனையின் விளைவாக, நான்கு, “அழகி’கள் மற்றும், “தொழில்’ நடத்திக் கொண்டிருந்த நடுத்தர வயதுப் பெண்மணியையும் ஜீப்பில் அள்ளிப் போட்டு, அழைத்து வந்தனர்.
மற்றவர்கள் அடங்கி, ஒடுங்கியிருக்க, பாண்டியின் ஆளான சரோஜா தான், துள்ளிக் கொண்டிருந்தாள்.

“யோவ் என்னய்யா… யாரும் வரமாட்டங்கன்னு சொன்ன?’
நெளிந்து கொண்டிருந்தான் பாண்டி.
“ஏய் மரியாதையாப் பேசு… அவரு, ஹெட் கான்ஸ்டபிள் தெரியும்ல?’
“அவரு என்னோட கஸ்டமர்; அது, உங்களுக்குத் தெரியும்ல?’
“வாய மூட்றி!’
“ஏன்க்கா கோச்சிக்கறீங்க?’

முன் சீட்டில் அமர்ந்திருந்த மாலதி திரும்பி, சரோஜாவின் முகத்தில் அடித்தாள். அடியின் வேகத்தில் நிலைகுலைந்து விழப் போனவளை, மற்ற பெண்கள் தாங்கிப் பிடித்தனர்.
“யாருக்கு யாருடி அக்கா? இன்னொரு தரம் அந்த வார்த்தையச் சொன்ன, அறுத்துருவேன்…’
“சரிக்கா…. இனிமே அப்படிச் சொல்லல…’
மீண்டும் ஒரு முறை, திரும்பி தன் பலத்தை எல்லாம் திரட்டி, சரோஜாவை அடித்தாள் மாலதி.
“இன்னொரு தரம் அந்த வார்த்தையக் கேட்டேன், கொலையே செஞ்சுருவேன்…’

ஸ்டேஷனுக்கு வந்தவுடன், மாலதி முன், தலையைச் சொறிந்தபடி நின்றான் பாண்டி.
“என்னய்யா?’ மாலதியின் குரலில் எரிச்சல் இருந்தது.
“மேடம்… அந்தப் பொண்ண மட்டும் விட்ருவோம்… எனக்காக, ப்ளீஸ்!’
“ஏன்…’ உன் ஆளுங்கறதுனாலயா? அப்படின்னா, அவள இங்கேயே வச்சி, மாலை மாத்தி, கல்யாணம் பண்ணிக்கோ. அவள விட்டுடறேன்; என்ன சொல்ற?’

லாக்-அப்பில் இருந்த சரோஜா, பலமாக கை தட்டினாள்.
“சூப்பர் யக்கோவ்!’
தன் கையில் இருந்த தடியை, சரோஜாவைப் பார்த்துத் தூக்கியெறிந்தாள் மாலதி.

தொய்ந்து போன முகத்துடன், விலகிச் சென்று விட்டான் பாண்டி.

“பாண்டி… எல்லாருக்கும் பிரியாணிப் பொட்டலமும், டீயும் வாங்கிக் கொடுத்துரு. நாளைக்குக் காலையிலதான் கோர்ட்டுக்கு கூட்டிக்கிட்டுப் போக போறோம். சாயங்காலமா எப்.ஐ.ஆர்., போட்டுக்கலாம்…’

சுரத்தில்லாமல், “சரி’ என்றான் பாண்டி.

அவன் கையில், தனியாக, நூறு ரூபாயை வைத்தாள் மாலதி.

“உன் ஆளுக்கு ஏதாவது ஸ்பெஷலா வாங்கிக் கொடு…’
பாண்டியின் முகம் மலர்ந்தது.

“ஸ்டேஷன பார்த்துக்கோய்யா… நான் சாப்ட்டுட்டு வந்துடறேன். உன் ஆளோட பேசு; ஆனா, அத்துமீறாமல் பாத்துக்க… சரியா?’
“எஸ் மேடம்…’

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, மாலதியின் கணவன் அவளை அழைத்தான்.

“போன விஷயம் என்னாச்சு?’
“அது, வந்து… வந்து…’

“ஏன் இழுக்கற… விஷயத்தச் சொல்லு. பணம் நிறையக் கேட்டாங்களா… எவ்வளவு கேட்டாலும் கொடுத்துருவோம்!’

“பணம் கேக்கலைங்க…’
“அப்புறம்?’

தட்டுத் தடுமாறி விஷயத்தைச் சொன்னாள் மாலதி. தன் கணவன் கோபம் வந்து, “காச் மூச்’ என்று கத்தப் போகிறான் என்று நினைத்தாள். ஒரு வேளை, “இந்த போலீஸ் வேலையே வேண்டாம்; நான் சம்பாதிப்பதே நமக்குப் போதும்…’ என்று சொல்லி விடுவான் என, எதிர்ப்பார்த்தாள். அப்படிச் சொன்னால், உடனே வேலைக்குத் தலை முழுகி, மதுரைக்கு ரயில் ஏறிவிட வேண்டியதுதான் என்றும் தீர்மானித்தாள்.

“அப்பா… என் வயத்துல பால வார்த்த செல்லம். 20 – 30 லட்ச ரூபாய் கேட்டிருவாங்களோன்னு பயந்து போயிட்டேன். நான் வீடு வாங்கறதுக்காக வச்சிருந்த பணத்தக் கொடுக்கணுமேன்னு நெனச்சேன். பைசா செலவில்லாம காரியம் முடியணும்ன்னு இருக்கு. வண்டியூர் மாரியம்மன நல்லாக் கும்பிட்டுக்கிட்டு, ஆபீசர் கூட போயிட்டு வந்துரும்மா!’

தன் சாப்பாட்டு இலையிலேயே வாந்தி எடுத்து விட்டாள் மாலதி.
அது எப்படி… ஒரே வாக்கியத்திலேயே, “சோரம் போ… மாரியம்மனைக் கும்பிட்டுக்கோ…’ என்று, தன் கணவனால் பேச முடிகிறது?

கல்லாவில் அமர்ந்திருந்த ஓட்டல் முதலாளி ஓடி வந்தார்.

“நீங்க வேற இடத்துல போய் உக்காருங்க மேடம். உங்களுக்குப் புதுசா இலை போட்டு, சாப்பாடு போட சொல்றேன்…’
“வேண்டாம் சார்… என்னால சாப்பிட முடியாது; வயிறு சரியில்ல. நான் வர்றேன்…’

மாலை, 4:00 மணி வாக்கில், தன் காவல் நிலையத்துக்கு வந்து சேர்ந்தாள் மாலதி. லாக்-அப்பில் இருந்த சரோஜாவுடன், சல்லாபம் செய்து கொண்டிருந்த பாண்டி, அவளைப் பார்த்ததும், சட்டென்று விலகி ஓடி வந்து, விறைப்பாக ஒரு சல்யூட் வைத்தான்.

“என்ன மேடம்… சோர்ந்து போயிருக்கீங்க; சாப்பிடலையா?’

“சாப்பிட முடியல பாண்டி!’

“ஏன் மேடம்?’

தன் கணவன் சொன்னதை கூறினாள்.

“அப்புறம் என்ன மேடம்… அவரே ஓ.கே., கொடுத்துட்டார்ல, ஆபீசருக்குப் போனப் போட்டு, விஷயத்தச் சொல்லுங்க. காரியத்த முடிங்க மேடம். ஆபீசர்கிட்ட பேசும் போது, என்னப் பத்தி நாலு நல்ல வார்த்த சொல்லுங்க மேடம்…’

மாலதிக்கு வெறுப்பாக இருந்தது; ஸ்டேஷனுக்குள் இருக்கவே பிடிக்கவில்லை.

பால் வியாபாரிகள், சாலை மறியல் செய்து கொண்டிருப்பதாகத் தகவல் வரவே, உடனே கிளம்பிப் போய் விட்டாள் மாலதி.

இரவு, 7:00 மணிக்கு திரும்பி வந்த போது, லாக்-அப் கதவோடு ஒட்டி நின்றபடி, சரோஜாவைக் கொஞ்சிக் கொண்டிருந்தான் பாண்டி.

இந்தக் கழுதைகளை நாலு தட்டுத் தட்டி, விசாரித்து, எப்.ஐ.ஆர்., போடுவோம் என்று தீர்மானித்தாள் மாலதி.

விஷயத்தைச் சொன்னவுடன், லாக்-அப் அறைக்குள் மாலதிக்கு ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து போட்டான் பாண்டி.

“சரியா சாப்பிடலையாக்கா… முகத்துல சுரத்தேயில்லையே!’
சரோஜா, “அக்கா பாட்டு’ பாட ஆரம்பித்தவுடன், மாலதிக்கு எங்கிருந்துதான் அந்த கொலை வெறி வந்ததோ தெரியவில்லை. பாண்டி கையில் இருந்த லத்தியைப் பிடுங்கி, சரோஜாவின் வாயிலேயே போட்டாள்.

சரோஜாவின் சில பற்கள் உடைந்து, உதடு கிழிந்து, ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. நல்ல வேளையாக, சரியான சமயத்தில் தடுத்து நிறுத்தி விட்டான் பாண்டி. இல்லாவிட்டால், மாலதிக்கு இருந்த ஆத்திரத்துக்கு,சரோஜா, லாக்-அப்பிலேயே சமாதி ஆகியிருப்பாள்.

“காசுக்கு முந்தி விரிக்கிற கழுதைக்கு, என்னோட என்னடி அக்கா உறவு? இனி ஒரு தரம் அக்காங்கற வார்த்தையக் கேட்டேன், கொலை செய்துருவேன்…’

சரோஜாவுக்குத் தாங்க முடியாத வலி; கண்கள் நிரம்பி விட்டன. தன் கைகளால் அடிபட்ட வாயை மூடியபடி, மாலதியைக் கோபத்துடன் முறைத்துப் பார்த்தாள்.

“வேசித்தனம் செய்யறவளுக்கு அக்கா உறவு கேக்குதாக்கும்?’
அதற்கு மேல் சரோஜாவால் பொறுக்க முடியவில்லை. கையை வாயிலிருந்து எடுத்தாள்.

“நீ செய்யறது என்னவாம்?’

பூட்ஸ் அணிந்த தன் கால்களால், சரோஜாவின் இடுப்பில் மாறி, மாறி உதைத்தாள் மாலதி.

“சும்மா இரு கழுதை!’ சரோஜாவை அடக்க முயன்று கொண்டிருந்தான் பாண்டி.

“நான் காசுக்காகப் படுக்கறது வேசித்தனந்தான்; நீ டிரான்ஸ்பருக்காக, ஆபீசரோட படுக்க நினைக்கிறது, பத்தினி விரதமா? நானாவது சோத்துக்கில்லாம செய்யறேன்; நீ இன்னும் சொகமா வாழணும்ன்னு செய்யற. அதுக்கு உன் புருஷனே உடந்தை!’

“த்தூ…’ என்று சரோஜா துப்பிய போது, ரத்தத்தோடு சேர்ந்து அவளது உடைந்த பற்களும் கீழே விழுந்தன.
அவளை மிதிப்பதற்காக மாலதி தூக்கிய கால், அப்படியே அந்தரத்தில் நின்று கொண்டிருந்தது.

பின் மாலதி விடுவிடுவென்று வெளிய போய் விட்டாள்.

“”பாண்டி… எல்லாத்தையும் வெளிய விட்ருய்யா. எப்.ஐ.ஆர்., போட வேண்டாம். மதியம் நாம அங்க போகும் போது, யாருமேயில்லன்னு சொல்லிரு; புரியுதா?”

மற்றவர்கள், விட்டால் போதும் என்று ஓடி விட்டனர். சரோஜா மட்டும் தயங்கி, தயங்கி மாலதியின் இருக்கைக்கு வந்தாள்.

நிமிர்ந்து பார்த்தாள் மாலதி. சரோஜாவின் உடம்பு அந்தத் தொழிலுக்கே உரித்தான வாளிப்புடன் இருந்தது என்றாலும், முகத்தில் அதீதமான வாட்டம் இருந்தது.

“”புருஷன் தான் சொல்றானேன்னு ஏடாகூடமா எதுவும் செஞ்சிராதே; ஆம்பிளைங்க அத மறக்கவே மாட்டாங்க. நீங்க ரெண்டு பேரும் தனியா இருக்கும் போது, “ஆபீசர் உன்ன அங்க தொட்டானா… இங்க தொட்டானா…’ன்னு அசிங்கமா கேட்டுக்கிட்டே இருப்பான்; நான் வர்றேன்க்கா!”

இந்த முறை சரோஜா, “அக்கா…’ என்று அழைத்த போது, மாலதிக்குக் கொஞ்சம் கூடக் கோபம் வரவில்லை.

நன்றி; தினமலர் – வாரமலர்.

 
3 பின்னூட்டங்கள்

Posted by மேல் ஒக்ரோபர் 18, 2011 in சிறுகதை

 

குறிச்சொற்கள்: ,

ஒரு ஆண் காதலில் தோற்றுவிட்டால்…

சென்ற பதிவின் தொடர்ச்சி….

சிகரெட்டை நிறுத்தினா எனக்கு ஹார்ட் அட்டாக் வந்திடும், என்று நான் சொல்ல, வலது கை ஆள்காட்டி விரலைத் தன் மேலுதட்டின் மேல் குவித்துக்கொண்டு சிரிக்கும் தனது பிரத்யேகமான அந்த அழகுச் சிரிப்பை உதிர்த்தாள் வித்யா.

‘அழகான பெண்கள் அதை நினைவூட்ட, ஓர் அசைவை வைத்திருக்கிறார்கள்’ என்று வண்ணதாசன் ஒரு கதையில் எழுதியது ஞாபகத்துக்கு வந்தது. எனக்கு மனசு படபடவென அடித்துக்கொண்டது. எப்போது வேண்டுமானாலும் வித்யா எங்கள் காதலைப் பற்றிய பேச்சை எடுப்பாள்… எனது பிரிவால் ஏற்பட்ட துயரங்களைச் சொல்வாள்… நானும் மிகவும் வேதனையான அந்தக் காதல் தோல்வி பற்றிப் பேசலாம் என்று காத்திருந்தேன்.

‘உனக்கு இப்போ முப்பத்திரண்டு முடிஞ்சிருக்குமே… சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ பாலு!’ என்றாள் வித்யா.

‘ம்… பார்க்கலாம். உன் ஹஸ்பெண்ட்…?’

‘துபாய்ல இருக்கார். ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறை வந்துட்டுப் போவார்.’

‘குழந்தைங்க…?’

‘ஒரே ஒரு பையன்.’

இப்படி குடும்ப விஷயங்கள், பழைய நண்பர்கள் குறித்தெல்லாம் பேசிக்கொண்டிருந்தாளே தவிர, எங்கள் காதல் குறித்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.

ஜூஸ் குடித்துவிட்டு திரும்ப பேங்க் வந்து, பணத்தை வாங்கிக் கொண்டு நான் புறப்பட்டபோது, ‘தங்கச்சிக்கு எப்ப டெலிவரி ட்யூ டேட்’ என்றாள்.

இந்த வாரத்துக்குள்ளேன்னு சொல்லியிருக்காங்க. அதுக்குத்தான் பணம் ரெடி பண்றேன்.’

‘குழந்தை பிறந்ததும் ஃபோன் பண்ணு பாலு’ என்று அனுப்பி வைத்தாள். எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

ஹூம்… திருமணமானவுடன் பெண்கள் சகலத்தையும் மறந்து விடுகிறார்கள்… துறந்துவிடுகிறார்கள். எனக்கு வேதனையாக இருந்தது. அந்தந்த நிமிடங்களில் வாழ்பவர்களா பெண்கள்?

பத்துநாள் பெபுடேஷன் முடிந்து ஊருக்குப் புறப்படுவதற்கு முன்பு, வித்யா எனக்குப் ஃபோன் செய்தாள். அவளை வழியனுப்ப ரயில்வே ஸ்டேஷன் சென்றேன்.

வானம் இருட்டிக்கொண்டு வந்தது. எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம்!

‘அப்புறம் பாலு சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ.’

‘சரிங்க பாட்டி..’ என்று புன்னகைத்தபடி சிக்னலைப் பார்த்தேன்.

வானம் மெலிதாக தூற ஆரம்பித்தது.

‘மழை பெய்யுது வித்யா, ட்ரெயின்ல உட்கார்ந்துக்கோ!’

‘பரவாயில்ல பாலு!’

ஒன்றிரண்டு மழைத்துளிகள் வித்யாவின் நெற்றியில் விழுந்து தெறித்தன.’

சிக்னல் மஞ்சளுக்கு மாறியது. ‘வித்யா… ட்ரெயின் கிளம்பப்போகுது. ஏறிக்கோ என்றேன்’.

‘ம்… என்ற வித்யாவின் முகம் சட்டென்று மாறியது. என் கண்களை உற்று நோக்கினாள். நான் சிலிர்த்துப் போனேன். அதே பார்வை. முதன்முதலாக எங்கள் காதலைப் பறிமாறிக்கொண்ட போது பார்த்த அதே காதல் வழியும் பார்வை.

இப்போது மழை சற்று வேகமாகப் பெய்ய ஆரம்பித்தது. வித்யா என்னை அப்படியே பார்த்துக்கொண்டு இருந்தாள். ‘கடவுளே…’ என்று நான் தவித்துப் போனேன். வித்யாவின் கண்கள் கலங்கின.

கார்டின் விசில் சத்தம் கேட்டது. ‘ட்ரெயின் கிளம்புது, வித்யா. சீக்கிரம் ஏறு’ என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ரயில் நகர ஆரம்பித்தது.

வேகமாக நான் வித்யாவின் இடது கையைப் பிடித்து, ட்ரெயினில் ஏற்றிவிட்டேன். வித்யா அவசரமாக தன் ஹாண்ட்பேகைத் திறந்து, ஒரு காகிதப் பொட்டலத்தை எடுத்து, என் கையில் திணித்தாள். என் ஈரக்கையினை இறுக்கமாக அழுத்தி, ‘வர்றேன் பாலு’ என்று விடைபெற்றுக் கொண்டாள்.

ரயில் வேகமாக நகர, நான் நின்றுவிட்டேன். கையை அசைத்தபடி சில விநாடிகளில், புள்ளியாக மறைந்து போனாள் வித்யா.

பொட்டலம் நனைந்துவிடாமல் இருப்பதற்காக வேகமாக ஓடி, கேன்டீன் வாசலுக்குச் சென்று நின்று, பொட்டலத்தைப் பிரித்தேன். உள்ளே நான் அடகு வைத்த சங்கிலியும், கூடவே ஒரு கடிதமும். தவிப்புடன் பிரிக்க ஆரம்பித்தேன்…

‘அன்புள்ள பாலு,

ஒரு ஆண் காதலில் தோற்றுவிட்டால், கவிதை எழுதலாம், கதை எழுதலாம். சினிமா எடுக்கலாம். ஏன் மனைவியிடம் தன் பழைய காதலைக் கூறி, என் புருஷன் எதையும் எங்கிட்ட மறைக்க மாட்டாரு’ என்று நல்ல பெயர் கூட எடுக்கலாம். ஆனால் பெண்கள்…?

ஊர் உறங்கிவிட்ட இரவில், ஜன்னல் வழியே தெரியும் ஆகாயத்தை வெறித்தபடி கண்ணீர் விடுவதைத் தவிர, வேறொன்றும் செய்ய இயலாது.

நீண்ட காலம் கழித்து உன்னைப் பார்த்தவுடன், உன் மடியில் விழுந்து கதறி, நமது காதல் பற்றி ஆயிரமாயிரம் விஷயங்கள் பேச என் மனது துடித்தது. ஆனால் செய்யவில்லை. காரணம் நம் காதல் பற்றி உன்னிடம் பேச ஆரம்பித்தால், நான் உடைந்துவிடுவேன், பாலு! உன் கழுத்தைக் கட்டிக்கொண்டு கதறிவிடுவேன். பிறகு அந்த உறவு எங்கே கொண்டுபோய் விடுமோ?

பிறகு… உன் செயினை அணிந்துகொள். நானே மீட்டுவிட்டேன். தயவு செய்து அதை மீண்டும் அடகு வைக்காதே! நம்மைப் போன்ற தோற்றுப்போன காதலர்களுக்கெல்லாம், இது போன்ற காதல் சின்னங்கள்தானே சின்னச்சின்ன சந்தோஷ நினைவுகளை அசைபோட வைக்கின்றன! நீ வாங்கிக் கொடுத்த கொலுசை, அது கறுத்துப் போனாலும் இன்னமும் நான் பத்திரமாக வைத்திருக்கிறேன். வருகிறேன் பாலு! மீண்டும் என்றேனும், எங்காவது சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன்,

உன் வித்யா.’

நான் கண் கலங்க, நெகிழ்ச்சியுடன் அந்தச் சங்கிலியை கழுத்தில் அணிந்து கொண்டேன். அருகிலிருந்த ஆலமரம் காற்றில் அசைய, ஒன்றிரண்டு மழைத்துளிகள் என் மீதும் விழுந்தன.

-ஜி.ஆர். சுரேந்தர்நாத்.

 
பின்னூட்டமொன்றை இடுக

Posted by மேல் ஒக்ரோபர் 16, 2011 in சிறுகதை

 

குறிச்சொற்கள்:

என் மேல் விழுந்த மழைத்துளியே…..

காதலியை அதுவும் முன்னாள் காதலியை, எத்தனையோ இடங்களில் சந்தித்திருக்கலாம்.

மழைக்கு ஒதுங்கிய மரத்தடியில், மஞ்சள் பூக்கள் சிதறி விழுந்த ஈர நிமிடங்களில் சந்தித்திருக்கலாம்… திருவிழாக்கடை பெட்ரோமேக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் கண்ணாடி வளையல் வாங்கும் பெண்களுக்கு நடுவே சந்தித்திருக்கலாம்… இன்னும் இதுபோன்று வேறு எங்கு வேண்டுமானாலும் சந்தித்திருக்கலாம். நகையை அடகு வைக்கப்போன இடத்தில் சந்தித்திருக்க வேண்டாம்.

தங்கையின் பிரசவ செலவுகளுக்காக, எனது கழுத்துச் சங்கிலியை அடகு வைக்க கோ-ஆபரேடிவ் பேங்க் சென்றபோதுதான் அந்த வேதனையான சந்திப்பு நிகழ்ந்தது.

‘ஜூவல் லோன் வாங்க வந்திருக்கிறது யாரு?’ என்று சத்தமாகக் கேட்டு மானத்தை வாங்கினான் பியூன். வேகமாக எழுந்து சுற்றிலும் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தபடி, கழுத்திலிருந்த சங்கிலியைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டு மேனேஜர் அறையினுள் நுழைந்த நான் அதிர்ந்தேன். மேனேஜர் நாற்காலியில் உட்கார்ந்திருந்தது என்முன்னாள் காதலி வித்யா. அதிர்ச்சியில் என் கால்கள் நடுங்கின. ஆனாலும், உலகம் இவ்வளவு சின்னதா? வித்யா தன் திருமணத்துக்கு முன் எனக்கு கடைசீயாக எழுதிய கடிதத்தில், ‘பூமி உருண்டைதானே…. சாவதற்கு முன் எங்காவது சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன், வித்யா’ என்று முடித்திருந்தாள். பூமி உருண்டை எனக்கு இந்த விதமாக நிரூபணம் ஆகியிருக்க வேண்டாம்.

அலட்சியமாக நிமிர்ந்து பார்த்த வித்யா, என்னைப் பார்த்ததும் ஆச்சர்யத்தில் சட்டென எழுந்துவிட்டாள். ‘பாலு…’ என்ற வித்யாவுக்கு மேற்கொண்டு பேச்சு வரவில்லை. நான் பிரமிப்பு விலகாமல், எதிரிலிருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.

‘நீ இந்த ஊர்லயா இருக்கே?’ என்றேன்.

‘இல்ல… இந்த பிராஞ்ச் மேனேஜர் பத்து நாள் லீவு. என்னை பெபுடேஸன்ல போட்டிருக்காங்க. கடவுளே… இஸ் இட் ட்ரூ?’ என்றாள் வித்யா.

‘என்னாலயும் நம்ப முடியலை. மத்தியானம் பன்னிரெண்டு மணி வெயில்ல, ஒரு கோ-ஆபரேடிவ் பேங்க் ரூம்ல, ஒரு டிஃபிக்கல் தமிழ் சினிமா ஓடும்னு யார்தான் நினைப்பாங்க?’ என்றேன்.

‘நீ எங்கேயோ ஸ்கூல் டீச்சரா இருக்கிறதா மாலதி சொன்னா!’

‘ஆமா இங்கதான்!’

‘கல்யாணம்…?’ என்று இழுத்தாள்.

‘ஆகலை. கடைசி தங்கச்சிக்கு கல்யாணம் முடிச்சிட்டுதான்…’

‘உன்னோட கடமைகள் இன்னும் முடியலையா பாலு?’

‘பச்…’

‘ஜூவல் லோனுக்கு வந்திருந்தது…’

‘நான்தான்!’

‘ம்… இஃப் யூ டோன்ட் மைன்ட்… எதுக்குன்னு தெரிஞ்சிக்கலாமா பாலு?’

‘என் இரண்டாவது தங்கையின் பிரசவ செலவு.’

‘ராதிகாவுகா?’

‘ஆமாம்.’

‘ம்…ஓ.கே. என்ன நகை?’

நான் தயக்கத்துடன் அந்தச் சங்கிலியை மேஜையில் வைக்க, வித்யாவின் முகம் மாறிவிட்டது. ‘எப்பவும் இதைக் கழட்டவே கூடாது’ என்று வித்யா எனக்கு அளித்த காதல் பரிசு, அந்தச் சங்கிலி.

ஒரு விநாடி, ஒரே விநாடி… அதைக் கண் கலங்கப் பார்த்த வித்யா, உடனே சுதாரித்துக்கொண்டு பியூனைக் கூப்பிட்டு, ‘அப்ரைஸரை வரச்சொல்லுங்க’ என்றாள்.

நகையை மதிப்பிடும் அப்ரைசர் வந்ததும், ‘இதை எடை போட்டு, ஃபார்ம் ஃபில்லப் பண்ணி எடுத்துட்டு வாங்க. மூணு பவுன் இருக்கும். எவ்வளவு பாலு வேணும்? ஒரு கிராமுக்கு ஏழுநூறு தருவோம்’ என்றாள் வித்யா.

‘மேக்ஸிமம்’ என்றேன்.

‘நாம் வெளியே போய் ஜூஸ் சாப்பிட்டு வருவோம்’ என்று எழுந்தாள். கூட்டம் அந்த ஜூஸ் கடையின் மூலையில் அமர்ந்தோம். சட்டென்று, பத்து வருடங்களுக்கு முன்பு அழகான தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்ட அந்தக் காதல் காலத்துக்கே சென்றுவிட்டது போல் இருந்தது எனக்கு.

எங்கள் கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு, எனக்கு வேலை கிடைத்தாலும் எனக்கு மூன்று தங்கைகளுக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டிய கடமை காரணமாகவும், முறிந்துபோன காதல் அது. இருப்பினும் வித்யா, எப்போதும் என் அடி மனதில் ஒரு சுடராக ஒளிர்ந்து கொண்டுதான் இருந்தாள்.

வித்யாவிடம் ஆயிரம் விஷயங்கள் பேசவேண்டும் என்று மனது துடித்தது. எனது காதோர வியர்வையை நீ ஊதி ஊதி உலரவைத்த நிமிடங்கள் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறதா வித்யா? ஒற்றைக் குடைக்குள் நாம் நடந்த அந்த மழைக்கால மாலையை மறக்க முடியுமா வித்யா? என்றெல்லாம் பேச மனது துடித்தது.

ஆனாலும் பேசாமல் அமர்ந்திருந்தேன். ஏற்கனவே நெகிழ்ந்து போயிருந்த என்னைத் தூண்டுவதுபோல், ஜூஸ் கடை ரேடியோவிலிருந்து ‘பூங்காற்றிலே…’ பாடல் ஒலிக்கத் தொடங்கியது.

துக்கத்தில் எனக்குத் தொண்டை அடைத்தது. பாக்கட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டேன்.

‘இன்னும் சிகரெட்டை விடலையா?’ என்றாள் வித்யா.

இன்னும் இருக்கு…..

 
பின்னூட்டமொன்றை இடுக

Posted by மேல் ஒக்ரோபர் 12, 2011 in சிறுகதை

 

குறிச்சொற்கள்: ,

இளம் வயதினருக்கு ஆண்மைக் குறைவு அதிகரிப்பு

இளம் வயதினருக்கு ஆண்மைக் குறைவு அதிகரிப்பு: எஸ். ராமசாமி

சென்னை: சுற்றுச் சூழல் பாதிப்பு, அதிக ரசாயனங்கள் கலந்த உணவு, மன அழுத்தம், வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால், இளம் வயதினருக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுவது அதிகரித்துள்ளதாக, புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக, 30 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், ஆண்மை குறைவால் பாதிக்கப்படுவது அதிகரித்து இருப்பதும், இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.ரசாயனங்கள் மிகுந்த உணவு தானியங்கள் மற்றும் சுற்றுச் சூழல் மாசு காரணமாக, புற்றுநோய் உட்பட, பல்வேறு உடல் உபாதைகள் அதிகரித்து வருவது நிரூபிக்கப்பட்டிருப்பது போல், ஆண்மைக் குறைவு, மலட்டு தன்மைக்கும், இது முக்கிய காரணமாக உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக நகர்ப்புறங்களில், இளம் வயதிலேயே ஆண்மை குறைவு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. வாகனங்கள் பெருகி வருவதால், அவற்றிலிருந்து வெளியேறும், பெட்ரோலிய பொருட்களின் கழிவு, காற்றில் கலந்து சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறது. இதனால், ஆண் ஹார்மோனான “டெஸ்டோஸ்டிரான்’ குறைந்து, பெண் ஹார்மோன் “ஈஸ்ட்ரோஜன்’ அதிகரிப்பது கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து, சென்னை ஆகாஷ் மருத்துவமனை டாக்டர் காமராஜ் கூறியதாவது:

அனைவரது உடலிலும் “டெஸ்டோஸ்டிரான்’ மற்றும் “ஈஸ்ட்ரோஜன்’ ஆகிய இரு ஹார்மோன்களும் இருக்கும். ஆண்களுக்கு, “டெஸ்டோஸ்டிரான்’ ஹார்மோன் அதிகமாக இருப்பதால், அதை ஆண் ஹார்மோன் என அழைக்கிறோம். பெண்களுக்கு, “ஈஸ்ட்ரோஜன்’ அதிகமாக இருப்பதால், அது பெண் ஹார்மோன் என அழைக்கப்படுகிறது. ஆண்களுக்கு, ஆண் ஹார்மோன் குறைந்து, பெண் ஹார்மோன் அதிகரிப்பது ஆண்மை குறைவுக்கு ஒரு காரணம்.சமீபகாலமாக, சென்னை போன்ற நகர்ப்புறப் பகுதிகளில், ஆண்மை குறைவுக்காக சிகிச்சைக்கு வரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு, பல்வேறு காரணங்கள் உள்ளன. வாழ்க்கை முறை மாற்றம், மன அழுத்தம், இளம் வயதில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள், ஆண்மை குறைவுக்கு காரணம்.

இதுபோல், பிளாஸ்டிக் பொருட்கள், காய்கறி, உணவு தானியங்களில் உள்ள ரசாயனத்தால், ஆண் ஹார்மோன் குறைந்து, பெண் ஹார்மோன் அதிகரிக்கும் என்பது, ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.முறையற்ற உணவு பழக்கத்தால் உடலில், அளவுக்கு அதிகமாக சேரும் கொழுப்பு சத்து, ஆண் ஹார்மோனை குறைத்து, பெண் ஹார்மோன் அதிகரிக்க வழி செய்கிறது. உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு, ஆண்மை குறைவோடு, மலட்டுதன்மையும் ஏற்பட வாய்ப்புள்ளது. உடலிலுள்ள, கெட்ட கொழுப்பே இதற்கு காரணம்.

ஆண்மைக் குறைவுக்கும், மாரடைப்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆண்மை குறைவுக்கு, ரத்தக் குழாய் பாதிப்பும் ஒரு காரணம் என்பதால், ஆண்மைக் குறைவு ஏற்பட்டால், அதை மாரடைப்புக்கு எச்சரிக்கை மணியாக கருதி, டாக்டரின் ஆலோசனைப்படி பரிசோதனை செய்வது அவசியம். இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் பாதிப்பு இருந்தால், மாரடைப்பு வர வழி வகுக்கும். அதேபோல், மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் பாதிப்பு இருந்தால், பக்கவாத நோய் வர வாய்ப்புள்ளது. எனவே, ஆண்மை குறைவு இருந்தால், சிகிச்சை பெறுவதற்கு தயக்கமும் அலட்சியமும் கூடாது. உரிய மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

வாசகர் கருத்துக்கள்:

ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சி, யோகா போன்றவற்றின் மூலம், இந்த குறைகளை போக்க முடியும்.

1. ஆண்மை குறைவுக்கு இன்றைய இளைஞர்களின் தீய பழக்கமும், திருமணத்துக்கு முன்பு அவர்களின் தவறான தொடர்பும் காரணம். மன அழுத்தம் உள்ளவர்கள் யோகா செய்வதால், இதிலிருந்து தப்பிக்க வழி உண்டு. மற்றபடி, சிட்டுக்குருவி லேகியம், மாத்திரைகள், வயாக்ரா அயிட்டங்கள் நரம்பு தளர்ச்சியை உண்டு பண்ணி, உள்ளதும் போச்சு லொள்ளகண்ணா என்று ஆகி விடும். எனவே, திருமணம் செய்வதற்கு முன்பு, ஆண்மை குறைவு இல்லை என்று சான்றிதழ் வாங்காமல், யாரும் இவர்களுக்கு பெண் கொடுக்க கூடாது. இப்படி குறைபாடு உள்ளவர்கள், திருமணம் செய்து, ஒரு பெண்ணின் வாழ்க்கையை வீணாக்குவதை விட்டு விட்டு,சாமியாராகி போவது நல்லது.

2. இளமையில் பலான படங்களை பார்த்து, சக்தியை மட்டும் இழக்காமல் இருந்தால் சாதிக்கலாம். மோடி மஸ்தான் வைத்தியர்களின் பத்திரிக்கை விளம்பரத்தை பார்த்து, ஆண்மை இல்லாத அன்பர்கள் ஏமாந்து போகாமல் இருக்க பழகி கொள்ள வேண்டும்.

நன்றி: தினமலர்.

 
2 பின்னூட்டங்கள்

Posted by மேல் செப்ரெம்பர் 7, 2011 in பாலியல்

 

குறிச்சொற்கள்:

ஞாபகங்கள் தீமூட்டும்

உன்னைப் பார்த்துட்டு வந்ததுமே, உனக்கொரு லெட்டர் எழுதிடணும்னு பேனாவும் கையுமா உட்கார்ந்துட்டேன். ஆனா எழுதத்தான் தைரியம் வரலே! ‘எதுக்கு தயங்கணும்? மனசில் இருக்கிறதையெல்லாம் மறைக்காம சொல்லிடவேண்டியதுதானேனு’ உள்ளுக்குள்ள ஒரு போராட்டம் நடக்கத்தான் செஞெசுது. ஆனாலும், தோத்துதான் போனேன். முடியலை. எழுத முடியலை.

ஆனா என்னவெல்லாம் எழுத நினைச்சேனோ அதெல்லாம் இன்னமும் மனசு முழுக்க வட்டமடிச்சிக்கிட்டேதான் இருக்கு. எதுக்கு இந்த நினைப்பெல்லாம்னு ஒதுக்க நினைச்சாலும் முடியலே. உனக்கு நினைவிருக்கா ரவி, கோயமுத்தூர் அன்னபூர்ணா ஓட்டல் ஆடிட்டோரியத்திலே, நீ எழுநிய சிறுகதைப் புத்தகத்துக்குப் பரிசு கொடுத்தப்போதான் நான் முதன்முதலா உன்னைப் பார்த்தேன். பார்த்தப்பவே ‘இவன் யார் மனசிலும் சட்டுனு சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துக்குவான்’னு தோணுச்சு. அதிலும் பரிசு வாங்கிட்டு நீ நிகழ்த்தின நன்றியுரை இருக்கே… சத்தியமா யாராலேயும் மறக்க முடியாது. அப்போ நீ சொன்ன ஒரு விஷயம்…

‘ஒரு நாள் அவசரமா ஆபீஸூக்குப் புறப்பட்டுட்டிருந்தேன், நசநசன்னு மழைத்தூறல்! ‘சடக்கென்று ஒரு பெரிய சத்தம் கேட்டு வெளியே எட்டிப் பார்த்தேன். மினி லாரி ஒண்ணு ஒரு பன்னிக்குட்டியோட இடுப்பில் ஏறி நசுக்கிட்டு ஓடிப்போயிடுச்சு. அந்தப் பன்னிக்குட்டியின் மரண ஓலம் என் இதயத்தை ரெண்டாக் கிழிச்சுது. சாலைக்கு ஓடினேன். உயிருக்குப் போராடிக்கிட்டிருந்த அந்தக்குட்டியைத் தூக்கிட்டேன். இல்லேன்னா, பின்னால வர்ற வேறொரு வாகனம் அதை இன்னும் கூழாக்கிடுமே! ஆனா சாலை ஓரத்துக்கு வர்றதுக்குள்ளே, அந்தக்குட்டி எப்படியோ என் கையிலிருந்து நழுவிடுச்சு. விழுந்த வேகத்துல அது அலறின அலறல், என் உயிரையே உறைய வெச்சிடுச்சு. என்னை மீறி அது எப்படி விழுந்தது? என் கையிலே பலம் இல்லையா?

அது இல்லை காரணம். அடிபட்ட பன்னிக்குட்டி மேல, என் மனசுக்குளே ஒரு பக்கம் இரக்கம் சுரந்தாலும், அது ஆழமானதா இல்லே. ‘ அய்யோ… கேவலப்பிறப்பான பன்னிக்குட்டியைக் கையால தூக்கிட்டோமே’ங்கிற அசூயை உணர்வுதான் அதிகம் இருந்தது. அதனாலதான் அந்தக் குட்டி என் கையிலிருந்து நழுவிடுச்சு. இந்த உண்மையை உணர்ந்த பிறகு நான் பட்ட வேதனை ரொம்ப காலத்துக்கு மாறவே இல்லை..!

உன்னோட இந்தப் பேச்சைக் கேட்டதும், நான் ஒரேயடியா திகைச்சுப் போயிட்டேன். ‘இப்படி ஒரு ஈர மனசா!’னு பிரமிச்சுப் போயிட்டேன். இதுக்கப்புறமும் உன் கிட்ட ஒரு வார்த்தையாவது பேசலைன்னா மூச்சே நின்னுடும் போலிருந்தது எனக்கு. ரொம்பத் தயக்கமா ‘உங்க பேச்சேக் கேட்டேன். இப்படி ஒரு மனசு யாருக்கும் இருக்காது. இனிமே உங்க கதைகளை தவறாம படிச்சிடவேன்’னு உன்கிட்ட சொன்னது மட்டுமில்லாம, மறக்காம உன்னோட அட்ரஸையும் கேட்டு வாங்கிக்கிட்டேன்.

அப்புறமென்ன… எப்பெல்லாம் நேரம் கிடைக்குதோ, அப்பெல்லாம் உனக்கு லெட்டர் எழுதறதுதான் எனக்கு வேலையா போச்சு!

முதன்முதலா எனக்கு நீ எழுதின பதில் லெட்டரைப் பார்த்ததும் எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை. ஆகாயத்தில் பறக்கிற மாதிரி அப்படி ஒரு சந்தோஷம். அதிலே என்னைக் குறிப்பிட்டு நீ எழுதியிருந்த ‘பிரியமுள்ள சிநேகிதிக்கு…’ என்கிற வார்த்தைகளை மட்டுமே ஆயிரம் தடவைக்கு மேல திரும்பத் திரும்ப படிச்சிருப்பேன்.

ரொம்ப வருந்திக் கூப்பிட்ட பிறகு, எங்க வீட்டுக்கு ஒரு தடவை வந்தே. எங்க ஊரும், எங்க வீடும், அந்தச் சாய்ங்கால நேரமும் உனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. வீட்ல அப்ப யாரும் இல்ல. பேசினோம்… பேசினோம்… அப்படிப் பேசினோம். என் ஆயுசு முழுக்கச் சேர்த்து வெச்சிருந்த பேச்சையெல்லாம் அன்னிக்கு ஒரே நாள்லயே நான் பேசித் தீர்த்துட்ட மாதிரி இருந்துச்சி.

அப்போதான் நான் சொல்லித் தெரியும் உனக்கு, நான் 27 வயசுக்காரி. பி.காம். படிச்சவள். ஒரு ஜவுளிக்கடையில் மாசம் எண்ணூறு ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்க்கிறவள். இந்தக் குறைஞ்ச சம்பளத்துலதான் நான், என் அம்மா, தம்பி எல்லோரும் காலம் தள்ளிகிட்டிருக்கோம்’கிற விஷயம். எனக்கு இப்படி ஒரு கஷ்டமானு சொல்லிச் சொல்லி மறுகிப் போனே!

என் கல்யாணம் என்னச்சுன்னு நீ கேட்டப்போ, மாரியம்மன் கோயில் பூஜாரி ஒருத்தர், பாகவதர் மாதிரி கிராப் வச்சிக்கிட்டு, கடுக்கன் போட்டுகிட்டு, நெத்தி நிறைய விபூதி, குங்குமத்தோட பெண் கேட்டு வந்தாரு. ‘மாசம் முன்னூறு ரூபா சம்பளம். தட்டுல ஒரு ஐநூறு விழும். விஷேஷ நாள்ல கொஞ்சம் அதிகம் விழலாம். கோயிலுக்குச் சொந்தமான வீடு ஒண்ணு இருக்கு. சந்தோஷமா வச்சிக்குவேன்’னாரு. அம்மாவுக்கு இஷ்டமில்லே. பேண்ட், ஷர்ட் போட்ட மாப்பிள்ளையா பார்ப்போம்னாங்க. அப்புறம் என்னடான்னா, லங்கோடு கட்டின்ன் கூட வரலை’னு சொல்லிவிட்டு, நான் கண்ணில் நீர் ததும்ப சிரிச்சதைப் பார்த்து, நீ திகைச்சுப் போய் உட்கார்ந்திருந்தே.

மறுநாள் அதிகாலையிலேயே, பொள்ளாச்சி போய் சின்னார் வனப்பகுதியிலே உள்ள கோயிலுக்குப் போனோம். பஸ் நெரிசல்ல ஒருத்தரோடோருத்தர் ஒட்டி நசுங்கிக்கிட்டிருந்தாலும் நம்ம பேச்சு மண்ணும் ஓயலே. சுட்டெரிக்கிற வெயில்ல மூணு கிலோ மீட்டர் நடந்து, ஆத்துல குளிச்சு, பயபக்தியா சாமி கும்பிட்டுத் திரும்பியதும், நீ ஊருக்குப் புறப்பட்டுட்டே, எனக்கோ உசிரே போறது மாதிரி இருந்திச்சு.

அதுக்குப் பிறகு நமக்குள்ள நிறைய கடிதப்போக்குவரத்து, ஒருநாள் அம்மா கேட்டா… ‘இப்படி ஒருத்தருக்கொருத்தர் உருகி மாயறீங்களே… ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சிக்கிட்டா என்ன?’னு.

என்னகோ தாங்க முடியாத கோபம் வந்திடுச்சு. ‘அப்படியா பழகறோம் நாங்க? நட்பு மாதிரி உயர்வான விஷயம் உண்டா உலகத்துல? ஏம்மா! உனக்குப் புத்தி இப்படிப்போகுது?’ன்னு கத்தி தீர்த்துட்டேன்.

கொஞ்ச நாள் கழிச்சு, உன்னைத் தேடி வரும்படியான நெருக்கடி ஒண்ணு வந்துடுச்சு எனக்கு. வந்தேன். உன்னைப் பார்த்ததும் ஏனோ வழக்கமா பேசற மாதிரி என்னால பேச முடியலே. இயல்பா சிரிக்க முடியலே.

நீ கூட கேட்ட, ‘என்ன ஆச்சு உனக்கு? சளசளன்னு பேசிட்டிருப்பியே! ஏன் இப்ப எதையோ முழுங்கிட்ட மாதிரி ஊமையா இருக்கே?’னு.

கொஞ்ச நேரம் பொறுத்து, மெதுவா வந்த விஷயத்தைச் சொன்னேன். ‘போன மாசம் திடீர்னு எனக்கு அப்பெண்டிஸைடிஸ் ஆபரேஷன். பத்தாயிரத்துக்கும் மேல செலவு. வீடு வாங்கிறதுக்காக எங்க அக்கா வீட்டுக்காரர் வெச்சிருந்த பணத்தை எடுத்து, அவருக்குந் தெரியாம எனக்குச் செலவு பண்ணிட்டா அக்கா. அதுக்குள்ள எப்படியாவது சமாளிச்சிடலாம்னு நினைச்சா. ஆனா, அடுத்த வாரமே பணம் கொடுத்து பத்திரம் பண்ணிடலாம்னு திடீர்னு சொல்லிட்டாரு அத்தான். விஷயம் தெரிஞ்சா கொலையே விழும். அவ்வளவு கோபக்காரர் எங்க அத்தான். அக்கா வாழாவெட்டியா எங்க வீட்டுக்கு வரவேண்டியதிதான். இந்த நிலைமையிலே எனக்கு வேற வழி தெரியலே…’

அதுக்கு மேல என்னால பேசமுடியலே. நீயும் கொஞ்ச நேரம் எதுவுமே பேசாம இருந்தே. அப்புறம் வெளியே எங்கேயோ போயிட்டு வந்தே நீ. ஒரு நூறு ரூபா நோட்டுக்கட்டை என் கையிலே கொடுத்துட்டு, உன் பைக்ல என்னை அழைச்சுட்டு வந்து பஸ் ஸ்டாண்டில் விட்டுட்டு, திரும்பிப் பார்க்காம விருட்டுனு கிளம்பிப் போயிட்டே.

‘பத்திரமா போ!’னு ஒரு வார்த்தையாவது சொல்வேனு நினைச்சேன். இல்லை. ஒரு சின்ன சிரிப்பாவது..? ம்ஹூம்!

என் கையில நீ கொடுத்த நூறு ரூபாய் நோட்டுக்கட்டு, தூக்கக்கூட முடியாத கருங்கல்லா கனத்துச்சு.

பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தேன். கண்களை மூடிக்கிட்டேன். மூடிய கண்ணுக்குள் கடுக்கன் போட்ட, பாகவதர் கிராப் வெச்ச, நெத்தி நிறைய விபூதி குங்குமம் பூசிய, மேல் சட்டை போடாத கோயில் பூசாரி வந்து நின்னான்.

என்னை அறியாமல் கண்ணீர் சுரந்து வழிஞ்சுது. நான் துடைக்கவே இல்லை!

– உத்தமசோழன்.                                                                                                                     நன்றி; ஆ.வி.

 
1 பின்னூட்டம்

Posted by மேல் ஓகஸ்ட் 21, 2011 in சிறுகதை

 

குறிச்சொற்கள்: , ,

எழுத நினைத்து… மூன்று முடிச்சிற்கு

தலை குனிந்த பின்

குதிரை கொம்பாகிவிட்டது

பேனா பிரித்து காத்திருப்பது.

 

கிடைத்த வினாடிகளை

பயன்படுத்தி

காத்திருக்கும் போதுதான்

எங்கோ போய்

தொலைந்து விடுகிறது.

 

பசித்த குழந்தைக்கு

பால் தரும்போதோ…

கட்டிலில் அவருடன்

உடன்படும் போதோ…

வந்து நிற்கும் வரிசையாய்…

உள்ளே…

எழுந்து போய்

குறித்து வைக்க முடியாத

அவஸ்தைகளுடன்

எழுத நினைத்த விஷயங்கள்!

ஆங்கரை பைரவி.

இலால்குடி.

 
1 பின்னூட்டம்

Posted by மேல் ஓகஸ்ட் 14, 2011 in கவிதைகள்

 

குறிச்சொற்கள்:

காதல் யானை வருகுது ரெமோ

நான் சஞ்சனா. வயசு 23. கோயமுத்தூர் கிளைக்கு மாற்றலாகி வந்து இரண்டு வாரமாகிறது. அப்பா அம்மா மதுரையில்! இருவரும் அங்குள்ள கல்லூரியில் பணியாற்றுகிறார்கள். நான் மட்டும் இங்கே மகளிர் விடுதியில் தங்கியிருக்கிறேன். அலுவலகத்தில் என்னையும் சேர்த்து மொத்தம் ஆறே ஆறு பெண்கள். என்னைத் தவிர மற்றவர்கள் திருமணமானவர்கள். ஆண்களில் பெரும்பாலும் இளைஞர்கள். எனவே என் வருகை அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்ததில் ஆச்சர்யம் இல்லை.

எனக்கு எதிர் இருக்கையில் ரமேஷ். முதல் நாள் அவர் பார்த்த பார்வையிலேயே அவருள் மின்சாரம் தாக்கியதை உணர்ந்தேன். என்னிடம் பேசும் போதெல்லாம் அவர் முகத்தில் ஒருவித தவிப்பும், படபடப்பும் மின்னுவதைக் கவனித்தேன்.

‘ரோஜா ஒன்று

நடந்து போனது

முள்ளை மட்டும்

என் இதயத்தில்

விட்டுவிட்டு!

– என ஒரு கவிதை எழுதி, தன் மேஜையில் ஒட்டி வைத்திருந்தார். ‘வாவ்… சூப்பர்! இது நீங்க எழுதிய கவிதையா ரமேஷ்?’ என்று கேட்டதற்கு, தர்மசங்கடமாகி, அசடு வழிய சிரித்தார். அவருக்கு என் மேல் காதல் என்பது தெளிவாகவே புரிந்தது. அதை எத்தனையோ முறை அவர் வெளிப்படுத்த முயன்று, கடைசி வினாடியில் தைரியமிழந்து, மௌனமாகி, பின்பு எப்படியோ ஒரு நாள் என்னிடம் துணிச்சலாக, சஞ்சனா ஐ லவ் யூ! என்று சொல்லிவிட்டார், அதற்குள் அவர் முகம் வியர்த்துக்கொட்டி, விரல்கள் நடுங்கின.

நான் புன்னகைத்தேன். ‘மிஸ்டர் ரமேஷ்! உங்க எண்ணத்தை என்கிட்ட வெளிப்படுத்தினதுக்காக நான் சந்தோஷப்படறேன். ஆனா என் மனசுல காதல்ங்கிற வார்த்தைக்கே இடமில்லை!’

‘ஏன்?’

‘காதல்ங்கிறது என்ன… வெறும் உடல்ரீதியான ஈர்ப்புதானே!  இதுவே நான் கொஞ்சம் அழகில்லாம இருந்திருந்தா, உங்க மனசுக்குள் இப்படி ஒரு எண்ணம் வந்திருக்குமா?’

அழகுங்கிறதுக்கு  நிலையான அளவுகோல் கிடையாது மிஸ்.சஞ்சனா! ஒருத்தருக்கு அழகா தெரியறது இன்னொருத்தருக்கு அசிங்கமா தெரியலாம்! எனிவே நீங்க சொல்றபடியே வெச்சுக்கலாம். ஒருத்தர் மேல ஆரம்பகட்ட ஈர்ப்பு ஏற்படவேணா புறத்தோற்றம் காரணமாயிருக்கலாம். அது வெறும் இனக்கவர்ச்சியா… இல்ல, அதையும் தாண்டின ஆத்மார்த்தமான அன்பாங்கிறதுதான் முக்கியம். நான் உங்க மேல வெச்சிருக்கிறது ஆத்மார்த்தமான அன்பு!’

‘நான் உங்க உணர்வுகளை கொச்சைப்படுத்த விரும்பலை மிஸ்டர் ரமேஷ்! எனக்குள்ளே அப்படி ஒரு எண்ணம் இல்லைன்னுதான் சொல்றேன். ஐ யம் வெரி ஸாரி!’

ரமேஷ்

இரவு உறக்கம் வரவில்லை. சஞ்சனாவின் வார்த்தைகள் நெஞ்சில் இடறிக்கொண்டே இருந்தன.

எத்தனையோ பெண்கள் என்னைக் காதலிப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒருவர்கூட என் மனதை ஊடுருவியதில்லை. முதன்முதலாக என் மனதை ஆக்ரமித்தவள் சஞ்சனாதான். ஆனால்…

‘விடுறா! அவ என்ன பெரிய இவளா! அவளைவிட சூப்பர் ஃபிகர் உனக்கு மாட்டப்போவுது பார்! என் நண்பர்கள் கூறிய ஆறுதல் வார்த்தைகள் என்னை சமாதானப்படுத்தவில்லை. எதிலும் சுரத்தின்றி அலுவலகம் சென்று வந்தேன். சஞ்சனா எப்போதும் போல் மிகவும் இயல்பாகத்தான் என்னோடு பேசினாள். எனக்குத்தான் அவளோடு பேசுவதில் மெல்லிய சங்கடமும், குற்ற உணர்வும் இருந்தது. இந்நிலையில்தான், விதி தனது விளையாட்டைக் காட்டியது.

எங்கள் அலுவலகத்தில் மொத்தம் 120 பேர் பணிபுரிகிறோம். வருடா வருடம் எங்களில் இருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, குடும்பத்துடன் ஊட்டி, கொடைக்கானல் என டூர் அனுப்புவது வழக்கம். மூன்று  நாள் பயணம். மொத்தச் செலவும் நிர்வாகத்தைச் சேர்ந்தது.

இந்த வருடம் நடந்த குலுக்கலில் தேர்வானது நானும் சஞ்சனாவும். இதை என்னவென்று சொல்ல?

எனக்கு பதிலாக வேறு யாரையாவது தேர்ந்தெடுத்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டேன். இதையறிந்த சஞ்சனா நேரே என்னிடம் வந்தாள்.

‘ஏன் ரமேஷ்… என்னோடு ஊட்டிக்கு வர உங்களுக்கு விருப்பமில்லையா?’

நீங்களும் தனி. நானும் தனி. ரெண்டு பேரும் ஒண்ணாப் போறது அவ்வளவு நல்லதில்லை!’

‘நட்பு ரீதியில் ஒரு ஆணும் பெண்ணும் வெளியூர் பயணம் போறது தப்பா?’

நமக்கு தப்பில்லாம இருக்கலாம். ஆனா மத்தவங்க தப்பா பேச இடமிருக்கே?

‘நம்ம மனசு சுத்தமா இருந்தா, அடுத்தவங்க பேச்சை பொருட்படுத்த வேண்டியதில்லை’ என்றாள். நான் மௌனம் காத்தேன்.

‘ஸோ உங்க மேலேயே உங்களுக்கு நம்பிக்கை இல்லை . பயப்படறீங்க!’

‘நோ… நோ…!’

‘பின்னே… பொம்பளை நானே தைரியமா வர்றப்ப உங்களுக்கென்ன சங்கடம்?’

இதற்கு மேலும் மறுத்தால், அவளின் வார்த்தைகளை ஒப்புக்கொண்டதைப் போலாகிவிடும் என்பதால் சம்மதித்தேன்.

சஞ்சனா

வெள்ளிக்கிழமை காலையில் நானும் ரமேஷூம் ஊட்டிக்கு கிளம்பினோம். பேருந்தில் வேறு இருக்கையில் அமரப்போனவரை நான்தான் அழைத்து என் அருகில் அமரச்செய்தேன். என்றாலும், வழியெங்கும் பசுமையாக் காட்சியளித்த மலைத்தொடர்களை ரசிக்கும் பாவனையில் என்னிடம் பேசுவதைத் தவிர்க்க முயன்றார். நானாக வலியப்பேசினாலும் தத்தித் தயங்கிய பதில்தான்.

கோடை ஆரம்பித்திருந்த்தால், ஊட்டியில் கணிசமான கூட்டமிருந்தது. ஓட்டல் க்வீன் கார்டனில் அறை எடுத்துக்கொண்டோம். இருவரும் தனித்தனி அறைகளில் தங்கிக்கொள்ளலாம் என ரமேஷ் சொன்னார். நான் மறுத்து ஒரே அறையாக எடுக்கச்சொன்னேன்.

தரை முழுக்க மெத்தென்ற கார்பெட். குழாயைத் திறந்தால் வெந்நீர், குளிருக்கு இதமாக ஹீட்டர், தொலைக்காட்சி என அறை சகல வசதிகளுடன் இருந்தது.

குளித்து முடித்து, டிபன் சாப்பிட்டுவிட்டு பக்கத்தில் ரோஸ் கார்டன், பொட்டானிகல் கார்டன் எனக்காலார நடந்துவிட்டுத் திரும்பினோம்.

ரமேஷ் இன்னமும் இருக்கமாகவே இருந்தார். அவரைப்பார்க்கையில் ஒரு பக்கம் பாவமாகவும், மறுபுறம் சிரிப்பாகவும் இருந்தது.

அறைக்குத் திரும்பியதும் சற்று நேரம் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தோம். பின்பு லுங்கிக்கு மாறிய ரமேஷ், பயணக் களைப்பு கண்ணை அசத்துவதாகச் சொல்லிப் படுத்துக்கொண்டார்.

இரட்டைக்கட்டில் ஒன்றாகத்தான் போடப்பட்டிருந்தது. இடைவெளி மனதில் இருந்தால் போதும் என நான்தான் சொல்லியிருந்தேன். நிமிடத்தில் ரமேஷிடமிருந்து குறட்டை ஒலி எழுந்தது. சிறிது நேரம் நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். இடுப்புவரை கம்பளி மூடியிருக்க, அவரது திண்ணென்ற புஜம் இரவு விளக்கு வெளிச்சத்தில் பளபளத்தது. அடர்த்தியான மார்பு முடியின் நடுவே தங்கச் சங்கிலி.

என்னுள் பெண்மைக்கே உரிய சிலிர்ப்பு ஏற்பட்டது. என் உணர்வில் ஏதோ ரசாயன மாற்றம். சொல்லி வைத்தாற்போல, தூக்கத்தில் புரண்ட ரமேஷின் கை தற்செயலாக என் மேல் படர, ஏற்கனவே நெகிழ்ந்திருந்த என் உணர்வுகள் தீப்பற்றிக்கொண்டன.

ரமேஷின் கைகளை எடுத்து கன்னத்தில் வைத்துக்கொண்டேன். நெஞ்சில் இனம் புரியாத பரவசம். அவரின் அருகே நெருங்கி, அவர் தோளில் முகம் புதைத்தேன். அவரின் உஷ்ணமூச்சு என் புறங்கழுத்தில் மோதி கிறங்கடிக்க, அவரது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டேன்.

ரமேஷ் திடுக்கிட்டு விழித்து, ‘சஞ்சனா…!’ என்றார் அதிர்ச்சி கலந்த குரலில். நான் அதைப் பொருட்படத்தாமல், அவரை இறுக அணைத்துக்கொண்டேன். என் உடலும் உள்ளமும் கட்டுப்பாட்டை இழந்திருந்தன.

‘சஞ்சனா… என்ன இது!? எ ன்றவாறே, என்னை வலுக்கட்டாயமாக உதறிவிட்டு எழுந்தார்.

நான் சுய நினைவுக்கு மீண்டேன். பொங்கிவரும் பாலில் தண்ணீர் தெளித்ததும் சட்டென அடங்குவதுபோல என் தகிப்பு அடங்கியது.

‘ஸாரி ரமேஷ்!’ மேனி முழுவதும் கூச, தலைகுனிந்து நின்றேன். சே…! நானா இப்படி நடந்து கொண்டேன்! கடவுளே… எப்படி மதிகெட்டுப் போனேன்? அழுகை சுரந்து வந்தது.

ப்ளீஸ் சஞ்சனா… இப்ப என்ன நடந்துடுச்சு… ஏன் அழறீங்க? ஃபர்கெட் இட்!’ என்றார் ரமேஷ்.

சில நிமிடங்கள் அங்கே அவலமான மௌனம் நிலவியது.

‘ரமேஷ் ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?’

‘கேளுங்க!’

‘என் மீது உங்களுக்கு காதல் இருந்தும்…இந்தச் சந்தர்ப்பத்தைப் பசன்படுத்தி, நீங்க என்னை முழுசா ஆக்கரமிச்சருக்கலாமே! ஆனா நீங்க அப்படிச் செய்யலயே ஏன்?’

‘ ஏன்னா நான் உங்க மேல வச்சிருக்கிறது உண்மையான காதல்!’

‘காதல்ல காமமும் ஒரு அங்கம்தானே?’

‘ஒப்புக்கறேன். காமம் கலக்காத காதல் இல்லை. ஆனா கட்டுப்படுத்த முடியாத காமத்தில் காதலே இல்லை. நானும் என் கட்டுப்பாட்டை இழந்து செயல்பட்டிருந்தா, உங்க மேல நான் வச்சிருக்கிற காதல் வெறும் இனக்கவர்ச்சிதான்னு அர்த்தமாகி இருக்கும் இல்லையா?’

‘ அப்ப நான் நடந்துகிட்ட விதம்…?’

என்னைப் பார்த்தா இப்போ உங்களுக்கு அருவருப்பா இருக்கில்ல?’ சொல்லிவிட்டுக் கண்களில் நீர் துளிக்தலையைக் குனிந்து கொண்டேன்.

‘இல்லை சஞ்சனா! ஆண்களுக்குத்தான் காதல் கலந்த காமம், காதல் கலக்காத காமம்னு ரெண்டு வகை உண்டு. பெண்களுக்கு அப்படியல்ல. காதல் உணர்வு எழுந்த பின்னால்தான் காம உணர்வு எழும். நீ என் காதலை ஏத்துக்கிட்டேங்கிறதுக்கான அடையாளம்தான் நீ இப்போ நடந்துகிட்ட விதம். அதனால எந்தக்குற்ற உணர்ச்சியும் இல்லாமல் படுத்துத் தூங்கு. குட் நைட்!’- சொல்லிவிட்டு, இழுத்துப் போர்த்திப் படுத்துக்கொண்டார் ரமேஷ். நான் அவரையே பார்த்தபடி நெடுநேரம் அமர்ந்திருந்தேன்.

என்னுள் மணிச்சத்தம் எழுப்பியபடி திடமாக்க் கால் பதித்து நடக்கத் தொடங்கியது காதல் யானை!

– உதா பார்த்திபன்.

நன்றி; ஆ.வி.

 
1 பின்னூட்டம்

Posted by மேல் ஜூலை 30, 2011 in சிறுகதை

 

குறிச்சொற்கள்: , , ,