RSS

Category Archives: சிறுகதை

எழுதப்படாத டைரி

Lovers

திருமண அழைப்பிதழ் வந்தது. முகவரியில் ராதாவின் கையெழுத்து. என் பெயர் கூட அவள் எழுதும்போது புதுக்கவிதை.

என்ன நடந்திருக்கும்…? ஏன் இந்த திருமணம்…? அவளுக்கு என்னவாயிற்று…? எப்படி மறக்க முடிந்தது…?
‘அரவிந், ஊருக்குப் போறேன். எங்க பாட்டி ரொம்ப ஆசாரம். அவதான் எங்க குடும்பத்துக்கு மகாராணி.

அப்பா இன்னும் தன் தாய்க்குச் சேவகன்தான். அம்மா அடிமை. நம்ம காதலை எப்படியும் சொல்லிடுவேன். பாட்டி சம்மதிக்கணும். இல்லேன்னா…’

அவள் சொன்னது மறு ஒலிபரப்பானது. அழைப்பிதழில் கடிதமாவது வைத்திருப்பாள் என நம்பினேன்.
இல்லை.

கவரை மட்டும் வைத்துக்கொண்டு, அழைப்பிதழைத் தூள் தூளாகக் கிழித்துப் பறக்க விட்டேன். உள்ளம் சிதறியது போல, காற்றில் அது சிதறியது. ஒரு துண்டு மட்டும் என் சட்டையில் ஒட்டிக்கொண்டது.

வேண்டாம், இது கூட வேண்டாம். அந்தக் காகிதத் துண்டை எடுத்தேன். பின்புறம் அவள் பெயர் – பெயர் மட்டும் கிழியாமல் ஒரு துண்டாக…

இன்னும் என்னைப் பிரிய மனமில்லையா ராதா..? நீ மட்டும் குற்றவாளியாக இருக்க முடியாது. எப்படியோ… இனி எல்லாவற்றையும் மறந்துவிடு.

போ… காகிதத்துண்டைப் பறக்க விட்டேன். காற்றும் வீசவில்லை. அதுவும் சதி செய்தது. கவரை மட்டும் பத்திரப்படுத்தி என் டைரியில் வைத்துக் கொண்டேன். அவள் கடைசியாகப் பதித்த கைச்சுவடு. இரவு இமைகள் மூடவில்லை. எழுதும் நாட்குறிப்பில் பல பக்கங்களை அவள் விழுங்கினாள். என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

‘அரவிந்… எல்லாவற்றையும் பாஸிட்டிவா நெனைப்பீங்க. இதையும் அப்படி நெனச்சுக்குங்க.’ திருமணத்துக்கு வருவீங்களா அரவிந்… வந்து வாழ்த்தணும்… வரமாட்டீங்க…

ஒரு காதல் சந்திப்போடு என் நினைவு பசுமையாக இருந்துவிட்டுப் போகட்டும். கல்யாணக்கோலத்தில் இன்னொருவனோடு நிற்கிற அந்தக் காட்சி ஏன் மனதில் பதியணும்..?

புரியுது. இப்ப குற்றவாளிக் கூண்டில் நான். எனக்கு என்ன தண்டணை? காதல்னா தப்பா நினைக்கிற மனிதர்கள் ஒருபுறம்… காதல்னா – தோல்விதான்னு நெனைக்கிற கற்பனை ஒருபுறம்…

கற்பனை நிஜமாகிவிட்டதா அரவிந்…? நாட்குறிப்பில் அவள் பேசிக்கொண்டே இருந்தாள். மறந்துடு ராதா! நம்ம காதல் எவருக்கும் தெரிய வேண்டாம். சொல்லிவிடாதே ராதா… என்னைப்போல் எத்தனை பேர் பாஸிட்டிவா நெனைப்பாங்க..? வேண்டாம் மறந்துடு.

காதலிக்காதவங்க யார்? இதயம் இருக்கிற வரை காதல் இருக்கும். சில சத்தம் போட்டுக் கலக்கும். அல்லது, ஊமையாக இருந்துவிட்டு அழும். பயத்தில் கல்லறை கட்டிவிட்டு நினைவு மண்டபத்தை இடிக்க முடியாமல் தவிக்கும்.

திருமணங்களில் கலந்துகொள்ளும் போதெல்லாம் நான் நினைப்பேன்.

இதில் எந்தக் கதவு திறந்திருந்தது..? எந்தக் கதவு மூடிவிட்டது..?

இந்தப் பெண்ணுக்காக எங்கோ, யாரோ ஒருவன் யாருக்கும் தெரியாமல் அழுதுகொண்டிருக்கிறானோ..? இந்த மணமகனுக்காக எவளோ ஒருத்தி சாபமிட்டுக் கொண்டிருப்பாளோ? எல்லாம் கற்பனைதான். காலம் அப்படி.

காதலிக்கணும். அப்பதான் மனசு மென்மையாகும். எல்லாமே அழகாகத் தோணும். தோற்றாலும் பரவாயில்லை. காதலிக்கணும். கம்பனும், கண்ணதாசனும் எத்தனை முறை தோற்றார்களோ..? தோற்றதில் அவர்களுக்கு வெற்றி.

நம் தோல்வி மறப்பதற்காக. மறக்க முடியுமா?

ஒரு வெள்ளிக்கிழமை கோயிலுக்குச் சென்றோம். பிரகாரத்தில் அமர்ந்து பேசியபோது நீ கேட்டாய் – சாமிகிட்ட என்ன வேண்டிக்கிட்டீங்க..?

எதுவுமே வேண்டலை… வரம் கேட்கத்தான் கோயிலுக்கு வரணுமா? நீ என்ன வேண்டிக்கிட்டே?
எங்களைப் பிரிச்சுடாதேன்னு வேண்டினேன். நான் வாய்விட்டுச் சிரித்தேன்.

உனக்குப் பயம். சேர்த்து வைய்யுன்னு வேண்டியிருந்தா அது நம்பிக்க. பிரிஞ்சிடுவோம்னு ஒரு பயம். அதான், அப்படியொரு வரம் கேட்டிருக்கே.

நான் பெண். பயம் இயற்கை. நீங்க எதையும் நல்லதாகவே பார்ப்பீங்க… அந்தக் குணம்தான் எனக்கு ரொம்பப் பிடிச்சது. கத்துக்கணும்… நிறைய கத்துக்கணும்… என்றாய்.

நினைவிருக்கா ராதா?

இன்று எனக்குப் பிறந்த நாள். நீங்க எனக்கு ஏதாவது வாங்கித் தரணும் என்றாய். ‘நமக்குப் பிறந்த நாள் நாளைக்கு என்றேன்.

உனக்குப் புரியவில்லை. நம்ம காதலுக்கு ஒரு வயசு. எனக்கு என்ன வாங்கித் தர்றீங்க… வளையல்…?
வேண்டாம். சத்தம் போடும். மனசு மிருதங்கமாகும்.
கொலுசு..? மனசு நாட்டியமாடும். அப்போ என்னதான் வாங்கித் தருவிங்க?
பூ… சத்தமில்லாமல் மணக்கும். மனசு நிறையும். உனக்கு எந்தப் பூ பிடிக்கும்?

ரோஜா… உங்களுக்கு?

மல்லிகை. உனக்குப் பிடிச்சதால எனக்கும் இப்போ ரோஜாவும் பிடிச்சிருக்கு.

பூ வாங்கித் தந்தேன். அன்று மட்டுமல்ல, தினமும். பூக்கடைக்காரனே நண்பனாகி விட்டான். நம்மைப் பார்த்ததும் ஒரு ரோஜாவை எடுத்துத் தந்துவிடுவான். ஒரு நாள் அவன் கேட்டுவிட்டான்… என்ன சார் பூவா வாங்குறீங்க… எப்போ மாலை வாங்கப் போறீங்க…?

அவன் நாளைக்கு என்ன கேட்கப் போகிறானோ? ஒரு பூக்கடைக்காரன் கூட உன் நினைவை மறுபதிவு செய்வான். நாம் நடந்து வந்த பாதைகள்… கால்கள் பதித்த கடற்கரை… உண்டு மகிழ்ந்த உணவு விடுதி… எல்லாமே தொல்லை செய்யும். வேண்டாம் இந்த ஊரே வேண்டாம்.

இப்போ நான் சாமியிடம் வேண்டிக்கிறேன். மறுபடியும் உன்னை நான் சந்திக்கவே கூடாது. நீ எங்கிருந்தாலும் நல்லா வாழணும்.

எனக்காக நீ என்ன வேண்டுவாய் ராதா?

ஒரு ரோஜா உதிர்ந்து விட்டது. உங்களுக்குப் பிடித்த மல்லிகை எங்கோ பூத்திருக்கும். ஒன்றை மறக்க இன்னொன்று அவசியம் என்பாய். எனக்கு அவசியமில்லை. அவசரமில்லை… காலம் சொல்லும்.

வீட்டுக்குள் நுழைந்ததும் காயத்ரியைத் தேடினேன். எங்கு போயிருப்பாள்? என் அறைக்குள் கட்டலில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள். என்னவாயிற்று இவளுக்கு? புரியாமல் நெருக்கமாக அமர்ந்தேன்.
என்ன ஆச்சு காயத்ரி? விம்மினாள்.

சொல்லிட்டு அழு. உங்க டைரியைப் படிச்சேன்…. விம்மத் தொடங்கினாள். புரிந்துவிட்டது. காயத்ரியைத் திருமணம் புரிந்துகொண்ட பிறகு சொல்ல வேண்டும் என்ற நினைவு இல்லை. ஏன் சொல்ல வேண்டும்? அந்த ராதாவுக்கு ஒரு சட்டம்.. எனக்கு மட்டும் ஒரு வழக்கா? வீடு என்றிருந்தால் ஜன்னல்கள் இருக்கும். ஜன்னல்கள் இருந்தால் காற்று வரும். காதலும் அப்படித்தான்

ஜன்னலுக்காகச் சண்டை போடப்போகிறாளா? காற்றுக்காகக் கண்ணீரா? எதற்கு இந்த அழுகை? சரி… எதுக்கு அழறே? ‘நீங்களும் காதலிச்சிருக்கீங்களா? என்றவாறு என் மார்பில் சாய்ந்து விம்மினாள். ஒரு டைரி எழுதப்படாமல் படிக்கப்பட்டுவிட்டது.

அவள் கன்னங்களில் வழிந்தோடிய கண்ணீரைத் துடைத்துவிட்டு இறுக்கமாக அணைத்துக் கொண்டேன். அதில் சிறகுகளின் ஆறுதல்.

– சாரதா நாகரத்தினம் 18.02.2001

 

குறிச்சொற்கள்:

ஔவை – சிறுகதை

ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருப்பதில் பல்வேறு இடையூறுகள் இருப்பதை நான் அமுதாவிடம் விளக்கியிருக்கிறேன். அவற்றை ஒரு பொருட்டாகவே அவள் மதித்ததில்லை. அமுதா என் மீதி அளவு கடந்த அன்பும் மரியாதையையும் வைத்திருக்கிறாள்.

ஆரம்பத்தில் இதை நான் உணரவில்லை. ரயில் ஸ்நேகம் போல இதை ஆபீஸ் ஸ்நேகம் என்று நினைத்திருந்தேன். அவள் அப்படி நினைக்கவில்லை.

நான் சுழலில் சிக்கிய சிறிய மரத்துண்டு போல அவளுடைய நட்பில் இழுத்துச் செல்லப்பட்டேன். சார் யூனிவர்சிட்டி வரைக்கும் போயிட்டு வரலாமா? என்றாள். அவளுடைய வண்டியில் இருந்து மழைக்கோட்டை எடுத்துக்கொண்டு என் ஸ்கூட்டரிலேயே வந்தாள்.

அவளுடைய ஹெட் ஆஃப்த டிபார்ட்மெண்ட் வகுப்பெடுத்துக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்கள். வகுப்பு முடிந்து அவர் வரும்வரை நீண்ட படிக்கட்டுகளில் அமர்ந்து காத்திருந்தோம். மழை தூறிக்கொண்டிருந்தது. மழைக்கோட்டுக்குள் ஒருங்கிக்கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். எதிர் பார்க்காத தருணத்தில் ‘சொல்லுங்க சார்’ என்றாள்.

எதைப்பற்றியாவது சொல்லிக்கொண்டே வந்து அதைப் பாதியில் நிறுத்திவிட்டேனா என்று நான் அவசரமாக நினைவுபடுத்திப் பார்த்தேன். ‘ஏதாவது சொல்லுங்க சார்’ என்றாள், கன்னத்தில் கையூன்றி என்னைக் கூர்மையாக கவனித்தபடி.

‘நிகலாய் கோகலின் ‘’ஓவர் கோட்’’ மாதிரி நாம ஆளுக்கு ஒண்ணு மாட்டிக்கிட்டு இருக்கோம்’ என்றேன்.

‘அது யாரு உங்க சித்தப்பாவா?’
நான் நிகலாய் கோகல் எழுதின ‘மேல் கோட்டு’ சிறுகதை பற்றிச்சொன்னேன்.

அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். பெண்கள் மிகவும் நமுபிக்கையானவர்களிடம் மட்டும்தான் இப்படி மனம் விட்டுச் சிரிக்கிறார்கள். இங்கிதம் பார்க்காமல் நாசூக்காகச் சிரிக்கவேண்டும் என்ற முனைப்பின்றிச் சிரிக்கிறார்கள். சிரிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டு அப்புறம் என்று ஆர்வமாகக் கேட்டாள்.

மேல்கோட்டு பற்றி இல்லாமல் அங்கு பட்டாணி விற்பவனைப் பற்றிச் சொன்னாலும் அமுதா ஆர்வமாகக் கேட்பாள். இது அமுதாவின் பாணி.

நேரமாகிக் கொண்டிருந்தது. அவளுடைய மேடம் வகுப்பெடுத்துக்கொண்டிருந்த இடத்திற்கே சென்றோம். பெண்பாற் புலவர்கள் பற்றி பாடம் நடத்திக்கொண்டிருந்தார் அவர்.

‘ஔவையார் என்ற பெயரில் பல பெண்பாற் புலவர்கள் இருந்தார்கள். அதியமான் நீடுவாழ நெல்லிக்கனி கொடுத்த ஔவை வேறு,… ஞானப்பழத்தைப் பிழிந்த ஔவை வேறு. சங்க காலத்தில் காதலைப்பற்றிப் பாடிய ஔவைகளே அதிகம். ஆக ஔவைகள் என்றால் பாட்டி என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க வேண்டும். நிறைய இளம் ஔவைகள் இருந்திருக்கிறார்கள்…’

வகுப்பு நடந்துகொண்டிருந்த அறையின் வராண்டாவில் நடைபோட்டவாறு இருந்தோம். ‘நிஜமாவா சார்?’ ஆமா என்றேன்.

நான் என்ன கேட்டேன், நீங்க ஆமா’னு சொன்னீங்க? என்று சிரித்தாள்.

‘ஔவைதானே?’

ஸாரிசார்… நான் ஏதோ நச்சரிக்கிறதால சும்மாவாவது ‘ஆமா’ன்னு சொல்லிட்டீங்களோனு நினைச்சேன்.’
உங்களைப்போய் நச்சரிப்பதாய் நினைப்பேனா?

நினைக்கமாட்டீங்க… ஆனா, நச்சரிக்கிறேன்னு எனக்கே தெரியும்.

அமுதா, அதியமான் நல்லா இருக்கணும்னு நெல்லிக்கனி கொடுத்த ஔவையை சின்னப்பெண்ணா கற்பனை செஞ்சு பாருங்களேன்.

நல்லாயிருக்கில்ல?!… என்று வியந்தாள்.

சங்க காலத்துல இவ்வளவு பெண்பாற் புலவர்கள் வேறு மொழிகள்ல இருந்தாங்ளானு தெரியலை. இவ்வளவு பேர் இருந்ததிலே இருந்தே ஔவையும் அதியமானும் இன்ட்டலக்சுவல் ஃபரெண்ட்ஸா இருந்திருக்க வாய்ப்பிருக்குனு தோணுது.

இன்னிக்கு நாம இங்கே வராம போயிருந்தா இந்த அருமையான விஷயம் பத்தி பேசாம போயிருப்போம் இல்லையா?

நான் சொல்லுகிற விஷயத்தைக் கேட்டு அளவுக்கு அதிகமாகவே வியந்தாள் அமுதா. அவள் என் மீது வைத்திருக்கிற பிடிவாதமான அனும் மரியாதையும்என்னைக் கவனத்துடன் பேசவைக்கும். ஆழம் தெரியாமல் காலை வைத்துவிட்டது மாதிரி அஞ்சவும் செய்கிறேன் சில நேரம். அவளுடைய வியப்புக்கு உகந்த விஷயங்களையே பேச வேண்டும் என்றும், அவள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு உரியவனாக என்னைத் தகவமைக்க வேண்டும் என்றும் நான் ஓயாமல் போராடுகின்றேன்.

சட்டென்று மேகம் கவிந்து விடிகட்டிய சூரிய ஒளி வளாகம் முழுவதும் சூழ்ந்தது. போஸ்ட் கிராஜூவேட் முடித்து பட்டம் பெறுவதற்காக விண்ணப்பிப்பது குறித்து ஏதோ பேசிவிட்டு வந்தாள். அவளை ஹாஸ்டலில் கொண்டுபோய் விடும்போது நன்கு இருட்டி விட்டது.

திடீரென்று அவளுக்கு மாப்பிள்ளை தேர்வாகிவிடவே ஆபீஸை விட்டும் ஹாஸ்டலை விட்டும் அவள் விலகிக்கொள்ள வேண்டியிருந்தது. எனக்கு அந்த திடீர் தனிமை உலுக்கி எடுத்துவிட்டது. ஆறு மாதம் ஹாஸ்டல் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் என்கூடவே நிழல் மாதிரி வியாபித்திருந்தவள் ஏற்படுத்திய தாக்கம்.

இடையில் ஊரிலிருந்து அவள், ‘எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சார்’ என்று ஃபோன் செய்த போது ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருப்பதில் உள்ள இடைஞ்சலைப் பற்றி விசனப்பட்டேன்.
அவள் வருத்தப்பட்டது எனக்கு மேலும் வருத்தமாகிவிட்டது.

‘அதனால என்ன… நான் வந்து உங்களைப் பார்க்கிறேன்’ எனக்கு கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.
அமுதா நீ ஏன் ஆம்பளையா பிறக்காம்பஃ போனே? என்ன இருந்தாலும் நாம முன்ன மாதிரி பேசிக்க முடியும்னு நினைக்கிறியா?

கொஞ்சமும் நாகரிகமில்லாமல் நான் உணர்ச்சிவசப்படுவதை என்னால் கட்டுப்பட்டுத்த முடியவில்லை.
முடியும் சார்… நாம எப்பவும் போல இருக்கலாம் சார்… கொஞ்ச நாளாகும் அவ்வளவுதான்.

அமுதா அவளுடைய திருமண அழைப்பிதழை எடுத்துக்கொண்டு என் வீட்டுக்கு வந்தாள். அவளுடைய கணவராகப் போகிற அதிர்ஷ்டசாலியும் உடன் வந்திருந்தார். என் மகளுக்கு கரடி பொம்மை, ஸ்வீட் என்று வாங்கி வந்தாள்.

அவர் என்னுடன் கை குலுக்கி அறிமுகம் செய்து கொண்டார். ‘என்னுடைய ஃபரெண்ட் வீட்டுக்கு இவங்க வரணும்னும், இவங்களுடைய ஒரு ஃபரெண்ட் வீட்டுக்கு நான் வரணும்னும் ஒரு ஒப்பந்தம். என்னோட ஒரே ஒரு ஃபரெண்ட் இவர்தான்னு உங்களைச் சொன்னாங்க. அதான் உங்களை இன்வைட் பண்ண வந்தேன்’ என்றார்.

‘ஹாஸ்டல் வெறுப்புகளுக்கெல்லாம் சார்தான் ஒரே ஆறுதல் எனக்கு’ என்றாள் அமுதா குறுக்கிட்டு.
என் கண்கள் கலங்கின. என் நல்ல தோழிக்கு நல்ல கணவர் கிடைக்கப்போகிறார் என்று பூரித்தேன். என் மனைவி டீ எடுத்துக்கொண்டு வந்தாள். எங்கள் வீட்டில் உபசரிப்பு என்றால்தான் டீதான். இரண்டு பேருமே டீ குடிக்கும் பழக்கம் இல்லதவர்கள் எனக்குத் தெரியுமாதலால் நான் பதறிப்போய் அதைத் தடுக்கப் பார்த்தேன்.
அமுதா, இருக்கட்டும் சார்… நான் சில நேரங்களில் டீ குடிப்பேன். சொல்லுங்க சார் என்றாள்.

நான் எதை எங்கிருந்த தொடங்குவது என்று புரியாமல், ‘ கார்ட்டூன் படங்கல்ல டாம் அண்ட் ஜெர்ரி எனக்கு ரொம்ப பிடிக்கும். சி.டி. இருக்கு பார்க்கறீங்களா? என்றேன்.
போடுங்களேன் என்றார் அவர்.

பூனையை எலி தொடர்ந்து வெறுப்பேற்றிக் கொண்டிருந்தது. மனம்விட்டுச் சிரித்தாள். ‘பிரில்லியண்ட் காமெடி’ என வியந்து கொண்டே, அமுதா தன் ஹாண்ட் பேகில் இருந்து எதையோ எடுத்து என் கையில் திணித்தாள்.

நெல்லிக்காய்

தமிழ்மகன்

 
பின்னூட்டமொன்றை இடுக

Posted by மேல் ஒக்ரோபர் 25, 2015 in சிறுகதை

 

கன்னித்தன்மை, கற்பு, கலாச்சாரம்

”என்னால எப்படி இன்னொருத்தனோட கல்யாணங்கிற பேர்ல படுக்க முடியும்? அசிங்கமா இருக்கு. எஜாக்குலேஷன் போது அருவருப்பா இருக்காது? நான் என்ன எச்ச துப்புற தொட்டியா..? செத்துரலாமான்னு தோணுது சங்கர்.” என்றவளின் கண்களில் தளும்பி நின்ற கண்ணீர் சிறிது நேரம் நின்று சட்டென வழிந்தது. வழிந்த கண்ணீரை கைகளால் அழுத்தித் துடைத்தவுடன் ஜெயாவின் முகம் மேலும் சிவந்தது.

பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட வளர்ச்சியுடன், நல்ல ஓவல் சைஸ் முகத்துடன், ஈரானிய சிவப்பாய், அதைவிட சிவப்பான மெல்லிய உதடுகளையும், குட்டிக்கடல் போலக் கண்களுமாய் எப்போதும் துள்ளிக்குதித்தபடி திரியும் ஜெயா இப்படி அழுவது பார்த்து என்ன சொல்வது என்று புரியாமல் அவளையே பார்த்தேன். பாவமாய் இருந்தது. நிஜத்துக்கும், நிழலுக்குமாய் அவள் அலைக்கழிந்து கொண்டிருப்பது நன்றாக புரிந்தது. ஜெயாவுக்கு கல்யாணம் நிச்சயமாகியிருக்கிறது. ஹைதராபாத் மாப்பிள்ளை. எப்போதும் பர்ஸ் பிதுங்குமளவு சம்பளம். எந்நேரமும் அமெரிக்கா கிளம்ப சகல பேப்பர்களையும் வைத்துக் கொண்டு, இவள் மாதிரியான தேவதைகளைக் கவர்ந்து கொண்டு போகத் தயாராகயிருப்பவன். அவன் கையில் அவளைப் பிடித்துக் கொடுக்க ஜெயாவின் அப்பா துரிதத்தில் ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேளையில், இவள் இப்படி வந்து என்னிடம் அழுது கொண்டிருக்கிறாள். அவளின் அழுகைக்கு காரணம் காதல்! ஆனால் அவளின் பிரச்சனை காதலால் இல்லை.
ஏதோ கல்யாணம் செய்து கொள்ளும் வரை ஒரு படிப்பு படிக்க வேண்டும் என்ற இலக்கோடு படிக்கும், அல்லது படிக்க வைக்கப்படும் பல பெண்களில் ஜெயாவும் ஒருத்தி. படிப்பில் பெரியதாய் ஆர்வமில்லாதவள். ஆனால் புத்திசாலி, அழகி, படு சுட்டி, எப்போதும் அந்த பெரிய கண்களில் தேடலுடனேயே பயணப்படுபவள். கொஞ்சம் நெருக்கமாய் பழகிவிட்டால் செக்ஸ் ஜோக்கெல்லாம் சொல்லுவாள். என்னை அவளுக்கு ரொம்ப பிடிக்கும். எப்போதும் ஏதாவது ஒரு விஷயத்தை புதியதாய் பார்த்தது போல ஆச்சர்யத்துடன் சொல்வாள். அவள் சொல்வது அரதப் பழசாயிருந்தாலும் ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பேன்.
“சங்கர் உனக்கொன்னு தெரியுமா? சூர்யாவும் ஜோவும் லவ் பண்றாங்க. ஆனால் வெளியே பொய் சொல்றாங்க! வாட்ஸ் இன் திஸ்.. ஆமாம் அப்படித்தான்னு சொல்லிட்டு போய்ட்டேயிருக்க வேண்டியது தானே?”

 

ஒரு முறை மகாபலிபுரம் பீச்சுக்கு நான்,மீரா,ஜெயா மற்றும் சில நண்பர்களோடு போன போது பீச் ரிஸார்ட்டின் கடலில் உடல் முழுவதும் நனைந்து நின்றபடி, ”என்னைப் பார்த்தால் போட்ரெக் போலிருக்கிறேனா?” என்று கேட்டவளைப் பார்க்கும்போது அப்படியே அவள்மேல் பாய்ந்து கடலோடு கலந்துவிடலாமா என்று தோன்றும், அடுத்த கணம் அவள் அதைப்பற்றி எந்த விதமான சீரியஸ்னெஸும் இல்லாமல் “பசிக்குது எதாவது ஆர்டர் பண்ணு” என்பாள். பொசுக்கென ஆகிவிடும். மீராவுக்கு அவளின் நடவடிக்கைகள் பிடிக்காது. “யூ.. நோ.. ஷி ஆல்வேஸ் ஆக்ட்ஸ் லைக் எ சைல்ட்.. ஒண்ணும் தெரியாத பாப்பா போல் நடிப்பது. டிராயிங் அட்டென்ஷன். உங்களைப் போன்ற ஆண்களுக்கும் அந்த மாதிரி நடிப்பவள் பின்னால் தான் அலைவீர்கள். பெண்கள் அவ்வளவு ஒன்றும் இன்னொசண்ட் அல்ல சங்கர்.” என்பாள்.
அவள் சொல்வது ஒரு விதத்தில் நிஜமெனப் புரிந்தாலும் ஜெயாவுக்காக அவள் பின்னலையும் நாய்க்குட்டியாய்க்கூட இருக்கலாம் என்றுதான் தோன்றும். இப்படி அவள் பின்னால் அலைந்து கொண்டிருந்த காலத்தில் திடீரென ஜெயா என் தொடர்பு எல்லைக்கு வெளியே போக ஆரம்பிக்க, போன் செய்தால் கூட நான் கூப்பிடறேனே சங்கர், என்றோ.. எக்ஸாம் வருதில்ல … அதான் கொஞ்சம் பிஸி என்றோ ‘டபாய்க்க’த் துவங்கினாள்.

தேவிபாரடைசின் அரையிருட்டு ஒளியில் ஜெயாவை ஒரு பையனோடு பார்த்தேன். ஒல்லியாய் சற்று கருப்பாய் ஏறக்குறைய மெகா சைஸ் பல்லி மாதிரி இருந்தான். எனக்குள் ஒரு பந்து தொண்டைக்குள் உருள ஆரம்பித்தது. நான் அவர்களைக் கவனிக்காதது போல வந்த ரெண்டாவது மணி நேரம், ஜெயா எனக்கு போன் செய்தாள். “உடனே வா.. உன்னை மீட் பண்ணனும்” என்றாள்.
“எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு ஜெயா.” என்றேன்.

 

“கட் தட் கிராப் ஒர்க்.. எனக்கு தெரியும் நீ வருவாய். இன்னும் அரை மணிநேரத்தில். லாயிட்ஸ் ரோட் சரவணா கேக் ஷாப். என் செல்லக்குட்டில்ல.. உடனே வருவியாம்” என்று கெஞ்சலாய் சொன்னதும் மனசுக்குள் இருந்த நாய்க்குட்டி வாலாட்ட ஆரம்பிக்க, மறுப்பேதும் சொல்லத் தோன்றாமல் அடுத்த இருபது நிமிடத்தில் அங்கிருந்தேன்.
அதே தியேட்டர் அரையிருட்டுப் பையனுடன் உட்கார்ந்திருந்தாள். வெளிச்சத்தில் இன்னும் மொக்கையாய்த் தோன்றினான். என்னை விட என்ன கண்டு விட்டாள் இவனிடம்? “சங்கர்.. இது ப்ரகாஷ்.. ப்ரகாஷ் இது சங்கர். சங்கர்.. யு..நோ.. உன்னிடம் சொல்லாமல் என் வாழ்க்கையில் எதுவும் இருக்கக்கூடாது. ஐம் இன் லவ்.. வித் ப்ரகாஷ்.. எல்லாமே சட்டென்று நடந்துவிட்டது. மூன்றே மீட்டிங்கில் காதல் வருமா? எனக்கு வந்துவிட்டது. ஐம் ஜஸ்ட் த்ரில்ட். என்ன விஷ் செய்ய மாட்டாயா? அப்படி பார்த்திட்டிருக்கே? ஓகே.. சரி. அப்புறம் என்ன சாப்பிடுகிறாய்?” என்று கேட்டுவிட்டு.. “ ஒரு ப்ளாக் கரண்ட் வாங்கு ப்ரகாஷ்.. ஹி லவ் தட்” என்று ஆர்டர் செய்தாள். “எனக்கு பிடித்ததையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாயே ராட்ஸசி.. என் மனதை தெரிந்து வைக்கவில்லையா?” மனதினுள் புலம்பினேன்.
பையனை எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் எதற்கெடுத்தாலும் போலியாய் ‘யா.. யா.. ஃபக், ஷிட் என்று யாக்கிங் ஆங்கிலம் பேசினான். எரிச்சலாயிருந்தது. கேக்கை என் முன்னால் வைத்துவிட்டு, அவர்கள் இருவர் மட்டும் பேசிக் கொண்டேயிருந்தார்கள்.
அதன் பிறகு நான் ஜெயாவை சந்திக்கும் போதெல்லாம் அவன் கூட இருந்தான் அல்லது ஜெயா அவனைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாள். அது எனக்கு எரிச்சலாய் இருந்தது. ‘என்ன எழவு லவ்வுடா இது! இதற்கெல்லாம் முடிவே வராதா?’ என்று மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருந்த போது ஒரு நாள் ஜெயா அழுது கொண்டே வந்தாள். வீட்டிற்கு தெரிந்துவிட்டதாம். பிரச்சனை ஓவராகி அவளது அப்பா அடித்துவிட்டாராம். பார்க்க பாவமாயிருந்தது. “என்ன முடிவு செய்திருக்கிறாய்?” என்று கேட்டபோது,

”இடியட். வீட்டில் மாட்டிக் கொண்டுவிட்டோம் என்றதும், நான் தான் அவனைத் தொல்லை செய்து காதலித்ததாய் என் அப்பாவிடம் சொல்கிறான். என்னை மோப்பம் பிடித்தலையும் நாயைப்போல மோந்து கொண்டு அலைந்ததை மறந்துவிட்டானா..? இல்லை நான் வேண்டாமென்று நினைத்துவிட்டானா? இவனை மாதிரி பூச்சியைக் காதலித்தேன் பார் என்னை செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும்” என்று மூச்சு வாங்கப் பேசிவிட்டு அழ ஆரம்பித்தாள். மனசுக்குள் சந்தோஷமாய் இருந்தாலும், அவள் அழுவதைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை. அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டேன். நிமிர்ந்து என்னைப் பார்த்தவள் என்னை அணைத்து “தேங்க்ஸ் சங்கர்” என்று சொல்லிவிட்டு எதுவும் சொல்லாமல் போனாள். என் மனதினுள் “தம்தன் தம் தன” என்று பாட ஆரம்பித்தது.
பிறகு ஒரு நாள் மதியம் போன். பதட்டமான குரலில் “உடனே உதயம் தியேட்டருக்கு வா… ஒரு ப்ராப்ளம்” என்றாள். போன போது அவளும் சில சிநேகிதிகளுமாய் நின்றிருந்தார்கள். பக்கத்தில் அவன் நின்றிருந்தான். என்ன விஷயம் என்று கேட்டபோது, கடந்த சில நாட்களாய் அவன் தன்னைத் தொடர்வதாகவும், கேட்டால் மீண்டும் தன் காதலைப் புதுப்பிக்க, தன்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளும்படி துரத்துகிறான் என்றாள். நான் அவனைப் பார்த்தேன். பாவமாயிருந்தது. தோள்மீது கைபோட்டு அவனை தனியே அழைத்துச் சென்றேன். அவன் வர மறுக்க, அழுத்தித் தள்ளிப் போனேன். அழுத்தம் தாங்காமல் வந்தான். காதருகில் “வேணாம் விட்ரு தம்பி.. அவதான் உன்னைப் பிடிக்கலைன்னு சொல்லிட்டால்ல” என்றேன்.
“இல்ல..சார்.. நாங்க ரொம்ப க்ளோஸா பழகியிருக்கோம்” என்றான்.
”சரி.. விடு.. பொண்ணுங்களை நாம பாலோ பண்ணக்கூடாது. அவளுங்கத்தான் நம்மளை பாலோ பண்ணனும். என்ன புரியுதா?. இன்னொரு வாட்டி அவ உன்னைப் பத்தி கம்ப்ளெயிண்ட் பண்ணா.. சரி விடு” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் சட்டென திமிறி, “முடியாது என்ன செய்வே?” என்று எகிற, தூரத்திலிருந்து ஜெயா பார்த்துக் கொண்டிருந்தாள். பளீரென அவன் கன்னத்தில் ஒர் அறை அறைந்தேன். அவன் அதை எதிர்ப்பார்க்கவில்லை. விதிர்த்துப்போய் ஏதும் சொல்லாமல் பின்வாங்கி கூட்டத்தில் கலந்து போனான். சுற்றியிருந்தவர்கள் எல்லோரும் என்னையே பார்ப்பதை உணர்ந்து “ சும்மா பொண்ணுங்களை கிண்டல் பண்ணிட்டேயிருக்கானுங்க” என்று சொல்லியபடி ஜெயாவைப் பார்த்து நகர்ந்தேன்.
ஜெயா என்னை ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கு பெருமையாய் இருந்தது. தோழிகள் கூட என்னை ஒரு ஹீரோவாக பாவித்து “தாங்கஸ் சங்கர்” என்று கைகுலுக்கிப் போனது அந்த ‘தம்தன தம்தன’ இன்னும் கொஞ்சம் கூடுதல் வால்யூமில் கேட்டது.
அதன் பிறகு அவனிடமிருந்து எந்தவிதமான தொந்தரவுமில்லை என்று சொன்னாள். ஆனால் தொந்தரவில்லை என்று சொன்னாளே தவிர, அடிவாங்கியதை வைத்து சிம்பதி தேடிக் கொண்டு மீண்டும் அவனோடு சேர்ந்து அலைவாள் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவர்களின் காதல் மீண்டும் மலர்வதற்கு என் ஹீரோயிசமே காரணமானது வருத்தமாக இருந்தது. இம்முறை நான் அவர்களை மேலும் நெருக்கமாய் பெசண்ட் நகர் பீச்சில் பார்த்தேன். கோபம் கோபமாய் வந்தது. அவளை நிறுத்தி வைத்து பளீர் பளீரென அறையலாமா? என்று தோன்றியது. ஆனால் அதெல்லாம் ஒரு கணம்தான். அடுத்த நொடி ஜெயாவின் அழகு முகம் வாடுவதை, மனக்கண்ணிலும் கூட பார்க்கச் சகிக்காமல் விட்டுவிடுவேன்.
அதன்பிறகு நான் அவர்களைப் பற்றி பெரியதாய்க் கவலைப்படவில்லை. “நமக்கில்லை… கிடைக்கமாட்டாள்” என்று தெரிந்துவிட்டதால் அவளின் மேல் நாட்டம் குறைந்தது என்றே சொல்ல வேண்டும். இந்த இடைப்பட்ட நாட்களில் அவர்களின் காதல் மீண்டும் பிரசசினைக்குள்ளாகி, இரண்டு குடும்பமும் அடிதடி வரை போனதாய் செய்தி வந்தது. ஜெயாவின் அப்பா தீவிரமாய் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து எல்லாம் நிச்சயமான நேரத்தில்தான் ஜெயா அப்படி ஒரு கேள்வியை கேட்டாள்.


என்னால எப்படி இன்னொருத்தனோட கல்யாணங்கிற பேர்ல படுக்க முடியும்அசிங்கமா இருக்கு. எஜாக்குலேஷன் போது அருவருப்பா இருக்காது? நான் என்ன எச்ச துப்புற தொட்டியா..? செத்துரலாமான்னு தோணுது சங்கர்.
”அப்படின்னா..?”
தலை குனிந்தபடி.. “ஆமா.. எங்களுக்குள்ள செக்ஸ் நடந்துவிட்டது மூன்று முறை.”
நான் கொஞ்ச நேரம் ஏதும் பேசாமலிருந்தேன். “சரி.. இப்ப உனக்கென்ன பிரச்சனை உனக்கு? எஜாக்குலேஷன்… எச்ச துப்புற தொட்டி அது இதுன்னு பேசறே? என்ன வேணும் உனக்கு?”
“என்னால வேறொருத்தனைக் கல்யாணம் செஞ்சிட்டு வாழ முடியாது சங்கர்”
“பின்ன அவனையேதான் கல்யாணம் செய்யணுமின்னு நினைச்சா உங்கப்பாகிட்ட சொல்லு. இல்லை வா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வைக்கிறேன். பண்ணிட்டு கால்ல விழுந்திரு.”
“சே.. அவனோட கல்யாணமா.. இம்பாஸிபிள். ஒரு நிரந்தர வேலையில்லை. அதோடு இரண்டாவது முறை பிரச்சனையில் ஒரு பெரிய விரிசல் விழுந்துவிட்டது. அது மீண்டும் சேராது. உன்னால் கூட என்னைப் புரிந்துகொள்ள முடியவில்லையா சங்கர்?.”
“புரியுது ஜெயா.. யூ ஆர் கில்டி. ஒரு வேளை இந்த கன்னித்தன்மை, கற்பு போன்ற தமிழ்க் கலாச்சாரம் சார்ந்த விஷயங்கள் உன்னை தமிழ்ப் பெண்ணாக மாத்திருச்சோன்னு தோணுது” என்றேன்.
ஒரு மாதிரி விரக்தியாய் சிரித்தாள். “உனக்கு புரியலை.. உனக்கு புரியலை” என்று திரும்பத்திரும்ப புலம்பிக் கொண்டேயிருந்தவள், சட்டென டேபிளின் மேல் இருந்த ஒரு பென்சில் சீவும் ப்ளேடை எடுத்து கையை கட் செய்ய முயல, சடுதியில் அதை கவனித்து, அவளின் கையைப் பிடித்திழுத்து, தடுத்தேன்.
“முட்டாளா நீ..? என்ன ப்ரச்சனை? செத்தா சரியாயிருமா? எதுவாயிருந்தாலும் எல்லாத்துக்கும் ஒரு ஆன்சர் இருக்கு. ஓகே. முட்டாள்.. முட்டாள்” என்று மீண்டும், மீண்டும் திட்டினேன். அதில் என் பதட்டம் தெரிந்தது. ஒரு மணி நேரம் வரை ஏதும் பேசாமல் அழுது கொண்டிருந்தாள். எனக்கு அவள் பிரச்சனையின் சீரியஸ்னெஸ் புரிந்தது. நிச்சயம் ஒரு கவுன்சிலிங் தேவை. டாக்டரிடம் கூட்டிப் போகலாமா? என்று யோசித்து “ஜெயா.. நாம வேணுமின்னா.. டாக்டர் கிட்ட ஒரு கவுன்சிலிங் போகலாமா?” என்றதும், எதிரில் உட்கார்ந்திருந்த என்னை அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள். நான் ஏதும் சொல்லாமல் அவளை அணைத்துக் கொண்டு, தலையைக் கோதிவிட்டேன், கண்ணீரை துடைத்துக் கொண்டேயிருந்தேன். அவளின் அழுகை கொஞ்சம் கொஞ்சமாய் ஓய்ந்தது.
“ஜெயா நான் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு”
ஏதும் பதில் சொல்லாமல் என் மேல் சாய்ந்தபடி மேலண்ணத்தில் பார்த்தாள்.
“நான் யாரு உனக்கு?”
சட்டென யோசிக்காமல் என்னை மேலும் இறுக்கி ”என் ப்ரெண்ட். என்னை எப்போதும் உள்ளங்கையில் வைத்துக் கொண்டாடும் என் இனிய நண்பன். ஏன்?” என்றவள் சொன்னதும், எனக்கு துணுக்கென்று கண்ணீர் தளும்பியது. என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு,
”ஓகே.. அப்ப நான் சொன்னா கேட்பேயில்லை?”
“ம்”
“இதெல்லாத்தையும் மறந்துட்டு அப்பா சொல்ற பையனை கல்யாணம் செய்திட்டு நிம்மதியா இரு.”
“முடியலை.. நினைக்க நினைக்க என்னைப்பத்தி அசிங்கமா ஃபீல் செய்யறேன்.”
“தபாரு ஜெயா.. உங்களுக்குள்ளே நடந்தது இயல்பான செக்ஸ்.. இரண்டு பேரோட சம்மதத்தின் பேர்ல நடந்திருக்கு. அதுல கிடைச்ச சந்தோசம், த்ரில் எல்லாமே ரெண்டு பேருக்குமே ஒரு இனிமையான அனுபவம். ரெண்டு பேருக்கும் சந்தோஷமாத்தானே இருந்தது. செக்ஸ் இஸ் எ டூல் ஃபார் எக்ஸ்பிரசிங் யுர் லவ். அவ்வளவுதான். இதோ நீ என்னை இப்ப கட்டிப்பிடிச்சிருக்க, ரெண்டு பேருக்குமிடையே எந்த விதமான செக்‌ஷுவல் உணர்வுகள் இல்லை. ஆனா நான் உன்னை அணைச்சிருக்கிறதும் ஒருவிதமான எக்ஸ்பிரஷன் தான். டேக்கிங் கேர் ஆப் யூ.. உன்னோட அணைப்பில இருக்கிற உணர்வு அதை தேடுறது. இதே செக்ஸ் உன் விருப்பமில்லாம நடந்திருந்தா அதோட விஷயமே வேற. அவனோட செக்ஸ் வச்சிக்கும் போது உனக்கு அவனைத்தான் கல்யாணம் செய்யப் போறோமேன்னு ஒரு நம்பிக்கையிருந்திருக்கும். ஆனா அது இப்ப உடைஞ்சி போனதும் உனக்குள்ள குற்ற உணர்ச்சி ஜாஸ்தியாயிருச்சு. அதை ஏத்திவிடத்தான் கற்பு, தமிழ்க் கலாச்சாரம், அது இதுன்னு இன்னும் நிறைய.. விஷயம் இருக்கவேயிருக்கு.. ஸோ… தேவையில்லாம கன்ப்யூஸ் ஆகாதே.. அப்படியும் உனக்கு உறுத்திச்சின்னா.. இப்படி யோசிச்சிப் பாரு.. மரத்துக்கீழே நிக்கும்போது காக்கா எச்சமிட்டு போயிரும். நமக்கு உடம்பே ஒரு மாதிரி அருவருப்பா இருக்கும். ஆனா அதுக்காக அடுத்த நாள் மரத்தடியில நிக்காமத்தான் இருக்கோமா? திரும்பவும் எச்சம் பட்டா கீழக் கிடக்குற பேப்பரை எடுத்து துடைச்சுப் போட்டுட்டு போகாமத்தான் இருக்கோமா? பீ…க்ளியர். செக்ஸ் இஸ் நாட் எ டாபூ.. இஸ்ட் எ எக்ஸ்பீரியன்ஸ். இதை நீ புரிஞ்சிக்க ஆரம்பிச்சா.. உன்னோட வாழ்க்கை நல்லாருக்கும்.”.
அன்றைய பேச்சுக்கு பிறகு ஜெயாவிடம் அமைதி தென்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் மீண்டும், மீண்டும் இதைப் பற்றி பேசிக் கொண்டேயிருந்ததில் நார்மலாக ஆரம்பித்தாள். கல்யாணத்தன்று திருமணம் முடிந்து ரிஷப்ஷனில் அவளை விஷ் செய்ய கை குலுக்கிய போது அதில் ஒரு அழுத்தம் இருந்தது. “என் க்ளோஸ் ப்ரெண்ட்” என்று அவள் கணவனிடம் அறிமுகப்படுத்தினாள்.
அடுத்த நாள் காலையில் எனக்கு ”நத்திங் ஹேப்பெண்ட்” என்று மெசேஜ் அனுப்பினாள். சிரித்துக் கொண்டேன். ஒரு வாரம் கழித்து ஹனிமூன் போய்விட்டு வந்து “தேங்க்யூ” என்று அடுத்த மெசேஜ் அனுப்பினாள். அதற்கு பிறகு எங்களுக்குள் பெரிய தொடர்பு இல்லை என்றாலும், அவளின் நினைப்பு எனக்குள் வந்து கொண்டேயிருக்கும். அவளும் அமெரிக்கா போய் ரெண்டு வருஷமாகிவிட்டது. எப்போதாவது மின்னஞ்சல் மட்டுமே தொடர்பிலிருந்த நேரத்தில் தான் அவள் சென்னை வருவதாய் ஒரு மின்னஞ்சல் வந்தது. முக்கியமான விஷயமாய் சென்னை வருவதாகவும், ‘உன் ஹெல்ப் வேண்டியிருக்கு நிச்சயம் நான் உன்னை மீட் செய்யணும்” என்றிருந்தாள்.
பெசண்ட்நகரில், பீச் ரெஸ்டாரண்டில் சந்தித்தோம். முன்னைக்கு ஒரு சுற்று பெருத்திருந்தாள். அதே ஈரானிய சிவப்பு அமெரிக்க செழுமை மேலும் சிகப்பாக்கியிருந்தது. புடவை கட்டி, உச்சியில் பொட்டிட்டிருந்தாள். மிகவும் ட்ரெடிஷனலாய் இருப்பதாய்ப் பட்டது. கூடவே கண்களில் மென் சோகத்துடன் ஓர் இளம் பெண்ணை அழைத்து வந்திருந்தாள். இன்றைய இளைஞிகளின் அத்துனை பாடி லேங்குவேஜுகளும் இருக்க, என்னை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் எனக்கென்ன என்று வேறெங்கோ பார்த்தபடி ஐபாட்டை நோண்டிக் கொண்டிருந்தாள்.
“எப்படி இருக்கே?”
“எனக்கென்ன.. ரொம்ப நல்லாருக்கேன். நீ தான் இன்னும் குண்டடிச்சிட்டே.. “
“எதோ முக்கியமான விஷயமாய் பேசணுமின்னு சொன்னே?”
“யா.. இட்ஸ் அபவுட் ஹர். ரோஷ்ணி. என் மச்சினி. முளைத்து மூணு இலை விடவில்லை.. காதலாம். பைனல் இயர் படிக்கிறதுக்குள்ளே என்ன காதல் வேண்டியிருக்கு. யு.. நோ.. தே ஹேட் செக்ஸ்.. கொஞ்சம் கூட உறுத்தலேயில்லாம சொல்றா.. வீட்டுல என் மாமியார் ரொம்பவும் ட்ரெடிஷனல். அவனோ வேற ஜாதி. நமக்கு ஒத்து வராதுன்னு சொன்னப்ப.. ஷி அட்டெம்டெட் ஸூசைட். ஓ. காட்.. அதுலேர்ந்து உடனே இந்தியா…வா..இந்தியாவான்னு ஒரே பிடுங்கல். நீயே சொல்லு சங்கர்.. இவளை எப்படி டீல் செய்யறது? எல்லாம் வயசு கோளாறு.. கிடந்து அலையுறாங்க..” என்று படபடவென பேசியவளை ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டேயிருந்தேன். ரோஷ்ணி இன்னமும் வேறு திசையில் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

நன்றி; cablesankar.blogspot.com

 
3 பின்னூட்டங்கள்

Posted by மேல் பிப்ரவரி 1, 2012 in சிறுகதை

 

குறிச்சொற்கள்: , , , ,

பாலியல் தொழிலாளி!

“எப்படி இந்த விஷயத்தைக் கணவனிடம் சொல்லப் போகிறோம்…’ என்று, திகைத்துப் போய் அமர்ந்திருந்தாள், சப்-இன்ஸ்பெக்டர் மாலதி.
காவல் துறையில், இடமாற்ற உத்தரவு வாங்குவது, அவ்வளவு சுலபம் இல்லை; அதற்கு, பல லட்ச ரூபாய் செலவாகும் என்று அவளுக்கு தெரியும். மதுரையில், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பணிபுரியும் அவள் கணவன், கை நிறைய சம்பளமும், பை நிறைய, “கிம்பளமும்’ வாங்குபவன். எத்தனை லட்ச ரூபாய் ஆனாலும், தானே கொடுத்து விடுவதாகச் சொல்லி இருந்தான்.

திருமணமாகி, ஓர் ஆண்டு தனி தனியாக வாழ்ந்து, வார இறுதி நாட்களில், “சந்திப்பு’ என்ற நிலைக்குப் பழகிக் கொண்ட பின், எல்லா நாளும் கணவனுடன் இருக்கலாம் என்ற செய்தி, மாலதிக்கு இனிக்கத்தான் செய்தது; ஆனால், அதற்கு இப்படி ஒரு விலையா?
தன்னுடைய இடமாற்ற உத்தரவுக்காகக் கேட்கப்பட்ட விலையை, கணவனிடம் சொல்வதா, வேண்டாமா என்ற குழப்பமும் இருந்தது. மாலதியின் புருஷன் மணி, இயற்கையிலேயே கோபக்காரன். இதைக் கேட்டு ஏதாவது அசம்பாவிதமாகச் செய்து விட்டால்…
மாலதியின் அலைபேசி அழைத்தது.

“ஏ.டி.எஸ்.பி., சேகர் பேசறேன்…’
“குட் மார்னிங் சார்!’
“சாஸ்திரி நகர்ல, ஒரு அபார்ட்மென்ட்ல மசாஜ்ங்கற பேர்ல, விபச்சாரம் நடக்கறதா தகவல் வந்துருக்கு!’
“எஸ் சார்!’
“பகல்லேயே நடத்தறாங்களாம். நீங்க சரியா, 11:00 மணிக்கு அங்க போங்க. கையும், களவுமா ஆளுங்களப் பிடிச்சிட்டு வந்துருங்க…’
“எஸ் சார்!’

மணி, 10:30 ஆகியிருந்தது. ஹெட் கான்ஸ்டபிள் பாண்டி வந்தவுடன் போகலாம் என்று தீர்மானித்தாள் மாலதி.
இந்தப் பாண்டிதான் அவளுக்கு ஆதரவாக இருக்கிறான். “மதுரைக்குப் பணி மாற்றம் வேண்டும்…’ என்ற அவள் விண்ணப்பம், பல நாட்கள் கிடப்பிலேயே கிடந்தது. பாண்டிதான் அது இருக்கும் இடத்தை மோப்பம் பிடித்து, அதைக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே நகர்த்தினான். அந்த உத்தரவில் கையெழுத்து போடும் வல்லமையுடைய அதிகாரியின் மேஜைக்கு, அந்த விண்ணப்பம் போனவுடன், அவளை அழைத்துக் கொண்டு, அந்த அதிகாரியைப் பார்க்கப் போனான்.
அவனை வெளியே இருக்கச் சொல்லி, மாலதியிடம் தனியாகப் பேரம் பேசினார், அந்த உயர் அதிகாரி.
“நீங்க மதுரைக்கு டிரான்ஸ்பர் கேட்டிருக்கீங்க. பொதுவா, இதுக்கு இன்னிக்கு ரேட், இருபது லட்சம் ரூபாய்; ஆனா, உங்ககிட்ட நான் அதக் கேக்கப் போறதுல்ல!’

“அத’ என்பதில், அவர் கொடுத்த அதிகப்படி அழுத்தம், அவர் எதைக் கேட்கப் போகிறார் என்பதை, அவளுக்குக் கோடிட்டு காட்டியது.
அசிங்கமாகச் சிரித்தபடி, அதைவிட அசிங்கமாகப் பேசினார் அதிகாரி…
“நான் அந்த விஷயத்துல கொஞ்சம் வீக். இல்ல, இல்ல… அந்த விஷயத்துல நான் ரொம்பவே, “ஸ்ட்ராங்!’ சந்தேகம்ன்னா… பீச் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், செண்பகலட்சுமிகிட்ட கேட்டுப் பாருங்களேன்…

“அடுத்த வாரம் நான் கொடைக்கானல் போறேன். நீங்க என் கூட வரணும்; நாலே நாள் தான். உங்களுக்கு, “டூட்டி மார்க்’ பண்ணச் சொல்லிடறேன். திரும்பி வந்தவுடன், உங்க, “டிரான்ஸ்பர் ஆர்டர்’ ரெடியா இருக்கும்; என்ன சொல்றீங்க?’
என்ன சொல்வது?
“இப்போ ஒண்ணும் சொல்ல வேண்டாம்; ரெண்டு நாள் யோசிங்க. டிரான்ஸ்பர் வேணும்ன்னா இந்த நம்பருக்குப் போன் பண்ணுங்க. இப்ப நீங்க போகலாம்!’

பேய் அறைந்ததைப் போல் வெளியே வந்தாள் மாலதி. இதை யாரிடமும் சொல்லக் கூடாது என, கங்கணம் கட்டிக் கொண்டாள்.
அவள் சொல்லாமலேயே, கண்டுபிடித்து விட்டான் பாண்டி.
“பணம் தவிர, வேற எதாவது கேட்டாரா மேடம்?’

உயிரில்லாமல், தலையாட்டி, நடந்ததைச் சொன்னாள்.
“யதார்த்தமா யோசிச்சிப் பார்த்து முடிவெடுங்க மேடம். இந்தாளு சொன்னா, கரெக்டா செஞ்சிடுவாரு; அந்த விஷயத்துல நேர்மையான ஆளு!’

“என்ன எழவு நேர்மையோ…’ என்று அலுத்துக் கொண்டாள் மாலதி.
“என்ன மேடம் யோசனையில இருக்கீங்க?’
பாண்டியின் பேச்சு, அவள் நினைவலைகளைக் கலைத்தது.
“பாண்டி… நாலு லேடி கான்ஸ்டபிள்களைக் கூட்டிக்கிட்டு, உடனே கிளம்பணும். “பிராத்தல்’ ரெய்டு செய்யப் போறோம்…’
“எங்க மேடம்?’
“அடையாறு சாஸ்திரி நகர்ல…’ விலாசத்தைச் சொன்னாள்.
“அங்க வேண்டாமே மேடம்’ வழிந்தான் பாண்டி.
“ஏன்யா…’
“நான் அவங்க கஸ்டமர் மேடம்… எனக்கு ரெகுலரா ஒரு ஆள் வரும். சரோஜான்னு பேரு. சூப்பர்…’
“த்தூ… உனக்கெல்லாம் எவன்யா போலீஸ்ல வேலை கொடுத்தது?’
தன்னைத் தகாத உறவுக்கு அழைத்த உயரதிகாரியிடம் சொல்ல முடியாத வார்த்தைகளை, பாண்டியிடம் சொன்னாள் மாலதி.

மதியம், 1:00 மணி —

சாஸ்திரி நகரில், சற்று ஒதுக்குப்புறமாக இருந்த வீட்டில் நடத்திய அதிரடி சோதனையின் விளைவாக, நான்கு, “அழகி’கள் மற்றும், “தொழில்’ நடத்திக் கொண்டிருந்த நடுத்தர வயதுப் பெண்மணியையும் ஜீப்பில் அள்ளிப் போட்டு, அழைத்து வந்தனர்.
மற்றவர்கள் அடங்கி, ஒடுங்கியிருக்க, பாண்டியின் ஆளான சரோஜா தான், துள்ளிக் கொண்டிருந்தாள்.

“யோவ் என்னய்யா… யாரும் வரமாட்டங்கன்னு சொன்ன?’
நெளிந்து கொண்டிருந்தான் பாண்டி.
“ஏய் மரியாதையாப் பேசு… அவரு, ஹெட் கான்ஸ்டபிள் தெரியும்ல?’
“அவரு என்னோட கஸ்டமர்; அது, உங்களுக்குத் தெரியும்ல?’
“வாய மூட்றி!’
“ஏன்க்கா கோச்சிக்கறீங்க?’

முன் சீட்டில் அமர்ந்திருந்த மாலதி திரும்பி, சரோஜாவின் முகத்தில் அடித்தாள். அடியின் வேகத்தில் நிலைகுலைந்து விழப் போனவளை, மற்ற பெண்கள் தாங்கிப் பிடித்தனர்.
“யாருக்கு யாருடி அக்கா? இன்னொரு தரம் அந்த வார்த்தையச் சொன்ன, அறுத்துருவேன்…’
“சரிக்கா…. இனிமே அப்படிச் சொல்லல…’
மீண்டும் ஒரு முறை, திரும்பி தன் பலத்தை எல்லாம் திரட்டி, சரோஜாவை அடித்தாள் மாலதி.
“இன்னொரு தரம் அந்த வார்த்தையக் கேட்டேன், கொலையே செஞ்சுருவேன்…’

ஸ்டேஷனுக்கு வந்தவுடன், மாலதி முன், தலையைச் சொறிந்தபடி நின்றான் பாண்டி.
“என்னய்யா?’ மாலதியின் குரலில் எரிச்சல் இருந்தது.
“மேடம்… அந்தப் பொண்ண மட்டும் விட்ருவோம்… எனக்காக, ப்ளீஸ்!’
“ஏன்…’ உன் ஆளுங்கறதுனாலயா? அப்படின்னா, அவள இங்கேயே வச்சி, மாலை மாத்தி, கல்யாணம் பண்ணிக்கோ. அவள விட்டுடறேன்; என்ன சொல்ற?’

லாக்-அப்பில் இருந்த சரோஜா, பலமாக கை தட்டினாள்.
“சூப்பர் யக்கோவ்!’
தன் கையில் இருந்த தடியை, சரோஜாவைப் பார்த்துத் தூக்கியெறிந்தாள் மாலதி.

தொய்ந்து போன முகத்துடன், விலகிச் சென்று விட்டான் பாண்டி.

“பாண்டி… எல்லாருக்கும் பிரியாணிப் பொட்டலமும், டீயும் வாங்கிக் கொடுத்துரு. நாளைக்குக் காலையிலதான் கோர்ட்டுக்கு கூட்டிக்கிட்டுப் போக போறோம். சாயங்காலமா எப்.ஐ.ஆர்., போட்டுக்கலாம்…’

சுரத்தில்லாமல், “சரி’ என்றான் பாண்டி.

அவன் கையில், தனியாக, நூறு ரூபாயை வைத்தாள் மாலதி.

“உன் ஆளுக்கு ஏதாவது ஸ்பெஷலா வாங்கிக் கொடு…’
பாண்டியின் முகம் மலர்ந்தது.

“ஸ்டேஷன பார்த்துக்கோய்யா… நான் சாப்ட்டுட்டு வந்துடறேன். உன் ஆளோட பேசு; ஆனா, அத்துமீறாமல் பாத்துக்க… சரியா?’
“எஸ் மேடம்…’

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, மாலதியின் கணவன் அவளை அழைத்தான்.

“போன விஷயம் என்னாச்சு?’
“அது, வந்து… வந்து…’

“ஏன் இழுக்கற… விஷயத்தச் சொல்லு. பணம் நிறையக் கேட்டாங்களா… எவ்வளவு கேட்டாலும் கொடுத்துருவோம்!’

“பணம் கேக்கலைங்க…’
“அப்புறம்?’

தட்டுத் தடுமாறி விஷயத்தைச் சொன்னாள் மாலதி. தன் கணவன் கோபம் வந்து, “காச் மூச்’ என்று கத்தப் போகிறான் என்று நினைத்தாள். ஒரு வேளை, “இந்த போலீஸ் வேலையே வேண்டாம்; நான் சம்பாதிப்பதே நமக்குப் போதும்…’ என்று சொல்லி விடுவான் என, எதிர்ப்பார்த்தாள். அப்படிச் சொன்னால், உடனே வேலைக்குத் தலை முழுகி, மதுரைக்கு ரயில் ஏறிவிட வேண்டியதுதான் என்றும் தீர்மானித்தாள்.

“அப்பா… என் வயத்துல பால வார்த்த செல்லம். 20 – 30 லட்ச ரூபாய் கேட்டிருவாங்களோன்னு பயந்து போயிட்டேன். நான் வீடு வாங்கறதுக்காக வச்சிருந்த பணத்தக் கொடுக்கணுமேன்னு நெனச்சேன். பைசா செலவில்லாம காரியம் முடியணும்ன்னு இருக்கு. வண்டியூர் மாரியம்மன நல்லாக் கும்பிட்டுக்கிட்டு, ஆபீசர் கூட போயிட்டு வந்துரும்மா!’

தன் சாப்பாட்டு இலையிலேயே வாந்தி எடுத்து விட்டாள் மாலதி.
அது எப்படி… ஒரே வாக்கியத்திலேயே, “சோரம் போ… மாரியம்மனைக் கும்பிட்டுக்கோ…’ என்று, தன் கணவனால் பேச முடிகிறது?

கல்லாவில் அமர்ந்திருந்த ஓட்டல் முதலாளி ஓடி வந்தார்.

“நீங்க வேற இடத்துல போய் உக்காருங்க மேடம். உங்களுக்குப் புதுசா இலை போட்டு, சாப்பாடு போட சொல்றேன்…’
“வேண்டாம் சார்… என்னால சாப்பிட முடியாது; வயிறு சரியில்ல. நான் வர்றேன்…’

மாலை, 4:00 மணி வாக்கில், தன் காவல் நிலையத்துக்கு வந்து சேர்ந்தாள் மாலதி. லாக்-அப்பில் இருந்த சரோஜாவுடன், சல்லாபம் செய்து கொண்டிருந்த பாண்டி, அவளைப் பார்த்ததும், சட்டென்று விலகி ஓடி வந்து, விறைப்பாக ஒரு சல்யூட் வைத்தான்.

“என்ன மேடம்… சோர்ந்து போயிருக்கீங்க; சாப்பிடலையா?’

“சாப்பிட முடியல பாண்டி!’

“ஏன் மேடம்?’

தன் கணவன் சொன்னதை கூறினாள்.

“அப்புறம் என்ன மேடம்… அவரே ஓ.கே., கொடுத்துட்டார்ல, ஆபீசருக்குப் போனப் போட்டு, விஷயத்தச் சொல்லுங்க. காரியத்த முடிங்க மேடம். ஆபீசர்கிட்ட பேசும் போது, என்னப் பத்தி நாலு நல்ல வார்த்த சொல்லுங்க மேடம்…’

மாலதிக்கு வெறுப்பாக இருந்தது; ஸ்டேஷனுக்குள் இருக்கவே பிடிக்கவில்லை.

பால் வியாபாரிகள், சாலை மறியல் செய்து கொண்டிருப்பதாகத் தகவல் வரவே, உடனே கிளம்பிப் போய் விட்டாள் மாலதி.

இரவு, 7:00 மணிக்கு திரும்பி வந்த போது, லாக்-அப் கதவோடு ஒட்டி நின்றபடி, சரோஜாவைக் கொஞ்சிக் கொண்டிருந்தான் பாண்டி.

இந்தக் கழுதைகளை நாலு தட்டுத் தட்டி, விசாரித்து, எப்.ஐ.ஆர்., போடுவோம் என்று தீர்மானித்தாள் மாலதி.

விஷயத்தைச் சொன்னவுடன், லாக்-அப் அறைக்குள் மாலதிக்கு ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து போட்டான் பாண்டி.

“சரியா சாப்பிடலையாக்கா… முகத்துல சுரத்தேயில்லையே!’
சரோஜா, “அக்கா பாட்டு’ பாட ஆரம்பித்தவுடன், மாலதிக்கு எங்கிருந்துதான் அந்த கொலை வெறி வந்ததோ தெரியவில்லை. பாண்டி கையில் இருந்த லத்தியைப் பிடுங்கி, சரோஜாவின் வாயிலேயே போட்டாள்.

சரோஜாவின் சில பற்கள் உடைந்து, உதடு கிழிந்து, ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. நல்ல வேளையாக, சரியான சமயத்தில் தடுத்து நிறுத்தி விட்டான் பாண்டி. இல்லாவிட்டால், மாலதிக்கு இருந்த ஆத்திரத்துக்கு,சரோஜா, லாக்-அப்பிலேயே சமாதி ஆகியிருப்பாள்.

“காசுக்கு முந்தி விரிக்கிற கழுதைக்கு, என்னோட என்னடி அக்கா உறவு? இனி ஒரு தரம் அக்காங்கற வார்த்தையக் கேட்டேன், கொலை செய்துருவேன்…’

சரோஜாவுக்குத் தாங்க முடியாத வலி; கண்கள் நிரம்பி விட்டன. தன் கைகளால் அடிபட்ட வாயை மூடியபடி, மாலதியைக் கோபத்துடன் முறைத்துப் பார்த்தாள்.

“வேசித்தனம் செய்யறவளுக்கு அக்கா உறவு கேக்குதாக்கும்?’
அதற்கு மேல் சரோஜாவால் பொறுக்க முடியவில்லை. கையை வாயிலிருந்து எடுத்தாள்.

“நீ செய்யறது என்னவாம்?’

பூட்ஸ் அணிந்த தன் கால்களால், சரோஜாவின் இடுப்பில் மாறி, மாறி உதைத்தாள் மாலதி.

“சும்மா இரு கழுதை!’ சரோஜாவை அடக்க முயன்று கொண்டிருந்தான் பாண்டி.

“நான் காசுக்காகப் படுக்கறது வேசித்தனந்தான்; நீ டிரான்ஸ்பருக்காக, ஆபீசரோட படுக்க நினைக்கிறது, பத்தினி விரதமா? நானாவது சோத்துக்கில்லாம செய்யறேன்; நீ இன்னும் சொகமா வாழணும்ன்னு செய்யற. அதுக்கு உன் புருஷனே உடந்தை!’

“த்தூ…’ என்று சரோஜா துப்பிய போது, ரத்தத்தோடு சேர்ந்து அவளது உடைந்த பற்களும் கீழே விழுந்தன.
அவளை மிதிப்பதற்காக மாலதி தூக்கிய கால், அப்படியே அந்தரத்தில் நின்று கொண்டிருந்தது.

பின் மாலதி விடுவிடுவென்று வெளிய போய் விட்டாள்.

“”பாண்டி… எல்லாத்தையும் வெளிய விட்ருய்யா. எப்.ஐ.ஆர்., போட வேண்டாம். மதியம் நாம அங்க போகும் போது, யாருமேயில்லன்னு சொல்லிரு; புரியுதா?”

மற்றவர்கள், விட்டால் போதும் என்று ஓடி விட்டனர். சரோஜா மட்டும் தயங்கி, தயங்கி மாலதியின் இருக்கைக்கு வந்தாள்.

நிமிர்ந்து பார்த்தாள் மாலதி. சரோஜாவின் உடம்பு அந்தத் தொழிலுக்கே உரித்தான வாளிப்புடன் இருந்தது என்றாலும், முகத்தில் அதீதமான வாட்டம் இருந்தது.

“”புருஷன் தான் சொல்றானேன்னு ஏடாகூடமா எதுவும் செஞ்சிராதே; ஆம்பிளைங்க அத மறக்கவே மாட்டாங்க. நீங்க ரெண்டு பேரும் தனியா இருக்கும் போது, “ஆபீசர் உன்ன அங்க தொட்டானா… இங்க தொட்டானா…’ன்னு அசிங்கமா கேட்டுக்கிட்டே இருப்பான்; நான் வர்றேன்க்கா!”

இந்த முறை சரோஜா, “அக்கா…’ என்று அழைத்த போது, மாலதிக்குக் கொஞ்சம் கூடக் கோபம் வரவில்லை.

நன்றி; தினமலர் – வாரமலர்.

 
3 பின்னூட்டங்கள்

Posted by மேல் ஒக்ரோபர் 18, 2011 in சிறுகதை

 

குறிச்சொற்கள்: ,

ஒரு ஆண் காதலில் தோற்றுவிட்டால்…

சென்ற பதிவின் தொடர்ச்சி….

சிகரெட்டை நிறுத்தினா எனக்கு ஹார்ட் அட்டாக் வந்திடும், என்று நான் சொல்ல, வலது கை ஆள்காட்டி விரலைத் தன் மேலுதட்டின் மேல் குவித்துக்கொண்டு சிரிக்கும் தனது பிரத்யேகமான அந்த அழகுச் சிரிப்பை உதிர்த்தாள் வித்யா.

‘அழகான பெண்கள் அதை நினைவூட்ட, ஓர் அசைவை வைத்திருக்கிறார்கள்’ என்று வண்ணதாசன் ஒரு கதையில் எழுதியது ஞாபகத்துக்கு வந்தது. எனக்கு மனசு படபடவென அடித்துக்கொண்டது. எப்போது வேண்டுமானாலும் வித்யா எங்கள் காதலைப் பற்றிய பேச்சை எடுப்பாள்… எனது பிரிவால் ஏற்பட்ட துயரங்களைச் சொல்வாள்… நானும் மிகவும் வேதனையான அந்தக் காதல் தோல்வி பற்றிப் பேசலாம் என்று காத்திருந்தேன்.

‘உனக்கு இப்போ முப்பத்திரண்டு முடிஞ்சிருக்குமே… சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ பாலு!’ என்றாள் வித்யா.

‘ம்… பார்க்கலாம். உன் ஹஸ்பெண்ட்…?’

‘துபாய்ல இருக்கார். ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறை வந்துட்டுப் போவார்.’

‘குழந்தைங்க…?’

‘ஒரே ஒரு பையன்.’

இப்படி குடும்ப விஷயங்கள், பழைய நண்பர்கள் குறித்தெல்லாம் பேசிக்கொண்டிருந்தாளே தவிர, எங்கள் காதல் குறித்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.

ஜூஸ் குடித்துவிட்டு திரும்ப பேங்க் வந்து, பணத்தை வாங்கிக் கொண்டு நான் புறப்பட்டபோது, ‘தங்கச்சிக்கு எப்ப டெலிவரி ட்யூ டேட்’ என்றாள்.

இந்த வாரத்துக்குள்ளேன்னு சொல்லியிருக்காங்க. அதுக்குத்தான் பணம் ரெடி பண்றேன்.’

‘குழந்தை பிறந்ததும் ஃபோன் பண்ணு பாலு’ என்று அனுப்பி வைத்தாள். எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

ஹூம்… திருமணமானவுடன் பெண்கள் சகலத்தையும் மறந்து விடுகிறார்கள்… துறந்துவிடுகிறார்கள். எனக்கு வேதனையாக இருந்தது. அந்தந்த நிமிடங்களில் வாழ்பவர்களா பெண்கள்?

பத்துநாள் பெபுடேஷன் முடிந்து ஊருக்குப் புறப்படுவதற்கு முன்பு, வித்யா எனக்குப் ஃபோன் செய்தாள். அவளை வழியனுப்ப ரயில்வே ஸ்டேஷன் சென்றேன்.

வானம் இருட்டிக்கொண்டு வந்தது. எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம்!

‘அப்புறம் பாலு சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ.’

‘சரிங்க பாட்டி..’ என்று புன்னகைத்தபடி சிக்னலைப் பார்த்தேன்.

வானம் மெலிதாக தூற ஆரம்பித்தது.

‘மழை பெய்யுது வித்யா, ட்ரெயின்ல உட்கார்ந்துக்கோ!’

‘பரவாயில்ல பாலு!’

ஒன்றிரண்டு மழைத்துளிகள் வித்யாவின் நெற்றியில் விழுந்து தெறித்தன.’

சிக்னல் மஞ்சளுக்கு மாறியது. ‘வித்யா… ட்ரெயின் கிளம்பப்போகுது. ஏறிக்கோ என்றேன்’.

‘ம்… என்ற வித்யாவின் முகம் சட்டென்று மாறியது. என் கண்களை உற்று நோக்கினாள். நான் சிலிர்த்துப் போனேன். அதே பார்வை. முதன்முதலாக எங்கள் காதலைப் பறிமாறிக்கொண்ட போது பார்த்த அதே காதல் வழியும் பார்வை.

இப்போது மழை சற்று வேகமாகப் பெய்ய ஆரம்பித்தது. வித்யா என்னை அப்படியே பார்த்துக்கொண்டு இருந்தாள். ‘கடவுளே…’ என்று நான் தவித்துப் போனேன். வித்யாவின் கண்கள் கலங்கின.

கார்டின் விசில் சத்தம் கேட்டது. ‘ட்ரெயின் கிளம்புது, வித்யா. சீக்கிரம் ஏறு’ என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ரயில் நகர ஆரம்பித்தது.

வேகமாக நான் வித்யாவின் இடது கையைப் பிடித்து, ட்ரெயினில் ஏற்றிவிட்டேன். வித்யா அவசரமாக தன் ஹாண்ட்பேகைத் திறந்து, ஒரு காகிதப் பொட்டலத்தை எடுத்து, என் கையில் திணித்தாள். என் ஈரக்கையினை இறுக்கமாக அழுத்தி, ‘வர்றேன் பாலு’ என்று விடைபெற்றுக் கொண்டாள்.

ரயில் வேகமாக நகர, நான் நின்றுவிட்டேன். கையை அசைத்தபடி சில விநாடிகளில், புள்ளியாக மறைந்து போனாள் வித்யா.

பொட்டலம் நனைந்துவிடாமல் இருப்பதற்காக வேகமாக ஓடி, கேன்டீன் வாசலுக்குச் சென்று நின்று, பொட்டலத்தைப் பிரித்தேன். உள்ளே நான் அடகு வைத்த சங்கிலியும், கூடவே ஒரு கடிதமும். தவிப்புடன் பிரிக்க ஆரம்பித்தேன்…

‘அன்புள்ள பாலு,

ஒரு ஆண் காதலில் தோற்றுவிட்டால், கவிதை எழுதலாம், கதை எழுதலாம். சினிமா எடுக்கலாம். ஏன் மனைவியிடம் தன் பழைய காதலைக் கூறி, என் புருஷன் எதையும் எங்கிட்ட மறைக்க மாட்டாரு’ என்று நல்ல பெயர் கூட எடுக்கலாம். ஆனால் பெண்கள்…?

ஊர் உறங்கிவிட்ட இரவில், ஜன்னல் வழியே தெரியும் ஆகாயத்தை வெறித்தபடி கண்ணீர் விடுவதைத் தவிர, வேறொன்றும் செய்ய இயலாது.

நீண்ட காலம் கழித்து உன்னைப் பார்த்தவுடன், உன் மடியில் விழுந்து கதறி, நமது காதல் பற்றி ஆயிரமாயிரம் விஷயங்கள் பேச என் மனது துடித்தது. ஆனால் செய்யவில்லை. காரணம் நம் காதல் பற்றி உன்னிடம் பேச ஆரம்பித்தால், நான் உடைந்துவிடுவேன், பாலு! உன் கழுத்தைக் கட்டிக்கொண்டு கதறிவிடுவேன். பிறகு அந்த உறவு எங்கே கொண்டுபோய் விடுமோ?

பிறகு… உன் செயினை அணிந்துகொள். நானே மீட்டுவிட்டேன். தயவு செய்து அதை மீண்டும் அடகு வைக்காதே! நம்மைப் போன்ற தோற்றுப்போன காதலர்களுக்கெல்லாம், இது போன்ற காதல் சின்னங்கள்தானே சின்னச்சின்ன சந்தோஷ நினைவுகளை அசைபோட வைக்கின்றன! நீ வாங்கிக் கொடுத்த கொலுசை, அது கறுத்துப் போனாலும் இன்னமும் நான் பத்திரமாக வைத்திருக்கிறேன். வருகிறேன் பாலு! மீண்டும் என்றேனும், எங்காவது சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன்,

உன் வித்யா.’

நான் கண் கலங்க, நெகிழ்ச்சியுடன் அந்தச் சங்கிலியை கழுத்தில் அணிந்து கொண்டேன். அருகிலிருந்த ஆலமரம் காற்றில் அசைய, ஒன்றிரண்டு மழைத்துளிகள் என் மீதும் விழுந்தன.

-ஜி.ஆர். சுரேந்தர்நாத்.

 
பின்னூட்டமொன்றை இடுக

Posted by மேல் ஒக்ரோபர் 16, 2011 in சிறுகதை

 

குறிச்சொற்கள்:

என் மேல் விழுந்த மழைத்துளியே…..

காதலியை அதுவும் முன்னாள் காதலியை, எத்தனையோ இடங்களில் சந்தித்திருக்கலாம்.

மழைக்கு ஒதுங்கிய மரத்தடியில், மஞ்சள் பூக்கள் சிதறி விழுந்த ஈர நிமிடங்களில் சந்தித்திருக்கலாம்… திருவிழாக்கடை பெட்ரோமேக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் கண்ணாடி வளையல் வாங்கும் பெண்களுக்கு நடுவே சந்தித்திருக்கலாம்… இன்னும் இதுபோன்று வேறு எங்கு வேண்டுமானாலும் சந்தித்திருக்கலாம். நகையை அடகு வைக்கப்போன இடத்தில் சந்தித்திருக்க வேண்டாம்.

தங்கையின் பிரசவ செலவுகளுக்காக, எனது கழுத்துச் சங்கிலியை அடகு வைக்க கோ-ஆபரேடிவ் பேங்க் சென்றபோதுதான் அந்த வேதனையான சந்திப்பு நிகழ்ந்தது.

‘ஜூவல் லோன் வாங்க வந்திருக்கிறது யாரு?’ என்று சத்தமாகக் கேட்டு மானத்தை வாங்கினான் பியூன். வேகமாக எழுந்து சுற்றிலும் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தபடி, கழுத்திலிருந்த சங்கிலியைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டு மேனேஜர் அறையினுள் நுழைந்த நான் அதிர்ந்தேன். மேனேஜர் நாற்காலியில் உட்கார்ந்திருந்தது என்முன்னாள் காதலி வித்யா. அதிர்ச்சியில் என் கால்கள் நடுங்கின. ஆனாலும், உலகம் இவ்வளவு சின்னதா? வித்யா தன் திருமணத்துக்கு முன் எனக்கு கடைசீயாக எழுதிய கடிதத்தில், ‘பூமி உருண்டைதானே…. சாவதற்கு முன் எங்காவது சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன், வித்யா’ என்று முடித்திருந்தாள். பூமி உருண்டை எனக்கு இந்த விதமாக நிரூபணம் ஆகியிருக்க வேண்டாம்.

அலட்சியமாக நிமிர்ந்து பார்த்த வித்யா, என்னைப் பார்த்ததும் ஆச்சர்யத்தில் சட்டென எழுந்துவிட்டாள். ‘பாலு…’ என்ற வித்யாவுக்கு மேற்கொண்டு பேச்சு வரவில்லை. நான் பிரமிப்பு விலகாமல், எதிரிலிருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.

‘நீ இந்த ஊர்லயா இருக்கே?’ என்றேன்.

‘இல்ல… இந்த பிராஞ்ச் மேனேஜர் பத்து நாள் லீவு. என்னை பெபுடேஸன்ல போட்டிருக்காங்க. கடவுளே… இஸ் இட் ட்ரூ?’ என்றாள் வித்யா.

‘என்னாலயும் நம்ப முடியலை. மத்தியானம் பன்னிரெண்டு மணி வெயில்ல, ஒரு கோ-ஆபரேடிவ் பேங்க் ரூம்ல, ஒரு டிஃபிக்கல் தமிழ் சினிமா ஓடும்னு யார்தான் நினைப்பாங்க?’ என்றேன்.

‘நீ எங்கேயோ ஸ்கூல் டீச்சரா இருக்கிறதா மாலதி சொன்னா!’

‘ஆமா இங்கதான்!’

‘கல்யாணம்…?’ என்று இழுத்தாள்.

‘ஆகலை. கடைசி தங்கச்சிக்கு கல்யாணம் முடிச்சிட்டுதான்…’

‘உன்னோட கடமைகள் இன்னும் முடியலையா பாலு?’

‘பச்…’

‘ஜூவல் லோனுக்கு வந்திருந்தது…’

‘நான்தான்!’

‘ம்… இஃப் யூ டோன்ட் மைன்ட்… எதுக்குன்னு தெரிஞ்சிக்கலாமா பாலு?’

‘என் இரண்டாவது தங்கையின் பிரசவ செலவு.’

‘ராதிகாவுகா?’

‘ஆமாம்.’

‘ம்…ஓ.கே. என்ன நகை?’

நான் தயக்கத்துடன் அந்தச் சங்கிலியை மேஜையில் வைக்க, வித்யாவின் முகம் மாறிவிட்டது. ‘எப்பவும் இதைக் கழட்டவே கூடாது’ என்று வித்யா எனக்கு அளித்த காதல் பரிசு, அந்தச் சங்கிலி.

ஒரு விநாடி, ஒரே விநாடி… அதைக் கண் கலங்கப் பார்த்த வித்யா, உடனே சுதாரித்துக்கொண்டு பியூனைக் கூப்பிட்டு, ‘அப்ரைஸரை வரச்சொல்லுங்க’ என்றாள்.

நகையை மதிப்பிடும் அப்ரைசர் வந்ததும், ‘இதை எடை போட்டு, ஃபார்ம் ஃபில்லப் பண்ணி எடுத்துட்டு வாங்க. மூணு பவுன் இருக்கும். எவ்வளவு பாலு வேணும்? ஒரு கிராமுக்கு ஏழுநூறு தருவோம்’ என்றாள் வித்யா.

‘மேக்ஸிமம்’ என்றேன்.

‘நாம் வெளியே போய் ஜூஸ் சாப்பிட்டு வருவோம்’ என்று எழுந்தாள். கூட்டம் அந்த ஜூஸ் கடையின் மூலையில் அமர்ந்தோம். சட்டென்று, பத்து வருடங்களுக்கு முன்பு அழகான தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்ட அந்தக் காதல் காலத்துக்கே சென்றுவிட்டது போல் இருந்தது எனக்கு.

எங்கள் கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு, எனக்கு வேலை கிடைத்தாலும் எனக்கு மூன்று தங்கைகளுக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டிய கடமை காரணமாகவும், முறிந்துபோன காதல் அது. இருப்பினும் வித்யா, எப்போதும் என் அடி மனதில் ஒரு சுடராக ஒளிர்ந்து கொண்டுதான் இருந்தாள்.

வித்யாவிடம் ஆயிரம் விஷயங்கள் பேசவேண்டும் என்று மனது துடித்தது. எனது காதோர வியர்வையை நீ ஊதி ஊதி உலரவைத்த நிமிடங்கள் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறதா வித்யா? ஒற்றைக் குடைக்குள் நாம் நடந்த அந்த மழைக்கால மாலையை மறக்க முடியுமா வித்யா? என்றெல்லாம் பேச மனது துடித்தது.

ஆனாலும் பேசாமல் அமர்ந்திருந்தேன். ஏற்கனவே நெகிழ்ந்து போயிருந்த என்னைத் தூண்டுவதுபோல், ஜூஸ் கடை ரேடியோவிலிருந்து ‘பூங்காற்றிலே…’ பாடல் ஒலிக்கத் தொடங்கியது.

துக்கத்தில் எனக்குத் தொண்டை அடைத்தது. பாக்கட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டேன்.

‘இன்னும் சிகரெட்டை விடலையா?’ என்றாள் வித்யா.

இன்னும் இருக்கு…..

 
பின்னூட்டமொன்றை இடுக

Posted by மேல் ஒக்ரோபர் 12, 2011 in சிறுகதை

 

குறிச்சொற்கள்: ,

ஞாபகங்கள் தீமூட்டும்

உன்னைப் பார்த்துட்டு வந்ததுமே, உனக்கொரு லெட்டர் எழுதிடணும்னு பேனாவும் கையுமா உட்கார்ந்துட்டேன். ஆனா எழுதத்தான் தைரியம் வரலே! ‘எதுக்கு தயங்கணும்? மனசில் இருக்கிறதையெல்லாம் மறைக்காம சொல்லிடவேண்டியதுதானேனு’ உள்ளுக்குள்ள ஒரு போராட்டம் நடக்கத்தான் செஞெசுது. ஆனாலும், தோத்துதான் போனேன். முடியலை. எழுத முடியலை.

ஆனா என்னவெல்லாம் எழுத நினைச்சேனோ அதெல்லாம் இன்னமும் மனசு முழுக்க வட்டமடிச்சிக்கிட்டேதான் இருக்கு. எதுக்கு இந்த நினைப்பெல்லாம்னு ஒதுக்க நினைச்சாலும் முடியலே. உனக்கு நினைவிருக்கா ரவி, கோயமுத்தூர் அன்னபூர்ணா ஓட்டல் ஆடிட்டோரியத்திலே, நீ எழுநிய சிறுகதைப் புத்தகத்துக்குப் பரிசு கொடுத்தப்போதான் நான் முதன்முதலா உன்னைப் பார்த்தேன். பார்த்தப்பவே ‘இவன் யார் மனசிலும் சட்டுனு சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துக்குவான்’னு தோணுச்சு. அதிலும் பரிசு வாங்கிட்டு நீ நிகழ்த்தின நன்றியுரை இருக்கே… சத்தியமா யாராலேயும் மறக்க முடியாது. அப்போ நீ சொன்ன ஒரு விஷயம்…

‘ஒரு நாள் அவசரமா ஆபீஸூக்குப் புறப்பட்டுட்டிருந்தேன், நசநசன்னு மழைத்தூறல்! ‘சடக்கென்று ஒரு பெரிய சத்தம் கேட்டு வெளியே எட்டிப் பார்த்தேன். மினி லாரி ஒண்ணு ஒரு பன்னிக்குட்டியோட இடுப்பில் ஏறி நசுக்கிட்டு ஓடிப்போயிடுச்சு. அந்தப் பன்னிக்குட்டியின் மரண ஓலம் என் இதயத்தை ரெண்டாக் கிழிச்சுது. சாலைக்கு ஓடினேன். உயிருக்குப் போராடிக்கிட்டிருந்த அந்தக்குட்டியைத் தூக்கிட்டேன். இல்லேன்னா, பின்னால வர்ற வேறொரு வாகனம் அதை இன்னும் கூழாக்கிடுமே! ஆனா சாலை ஓரத்துக்கு வர்றதுக்குள்ளே, அந்தக்குட்டி எப்படியோ என் கையிலிருந்து நழுவிடுச்சு. விழுந்த வேகத்துல அது அலறின அலறல், என் உயிரையே உறைய வெச்சிடுச்சு. என்னை மீறி அது எப்படி விழுந்தது? என் கையிலே பலம் இல்லையா?

அது இல்லை காரணம். அடிபட்ட பன்னிக்குட்டி மேல, என் மனசுக்குளே ஒரு பக்கம் இரக்கம் சுரந்தாலும், அது ஆழமானதா இல்லே. ‘ அய்யோ… கேவலப்பிறப்பான பன்னிக்குட்டியைக் கையால தூக்கிட்டோமே’ங்கிற அசூயை உணர்வுதான் அதிகம் இருந்தது. அதனாலதான் அந்தக் குட்டி என் கையிலிருந்து நழுவிடுச்சு. இந்த உண்மையை உணர்ந்த பிறகு நான் பட்ட வேதனை ரொம்ப காலத்துக்கு மாறவே இல்லை..!

உன்னோட இந்தப் பேச்சைக் கேட்டதும், நான் ஒரேயடியா திகைச்சுப் போயிட்டேன். ‘இப்படி ஒரு ஈர மனசா!’னு பிரமிச்சுப் போயிட்டேன். இதுக்கப்புறமும் உன் கிட்ட ஒரு வார்த்தையாவது பேசலைன்னா மூச்சே நின்னுடும் போலிருந்தது எனக்கு. ரொம்பத் தயக்கமா ‘உங்க பேச்சேக் கேட்டேன். இப்படி ஒரு மனசு யாருக்கும் இருக்காது. இனிமே உங்க கதைகளை தவறாம படிச்சிடவேன்’னு உன்கிட்ட சொன்னது மட்டுமில்லாம, மறக்காம உன்னோட அட்ரஸையும் கேட்டு வாங்கிக்கிட்டேன்.

அப்புறமென்ன… எப்பெல்லாம் நேரம் கிடைக்குதோ, அப்பெல்லாம் உனக்கு லெட்டர் எழுதறதுதான் எனக்கு வேலையா போச்சு!

முதன்முதலா எனக்கு நீ எழுதின பதில் லெட்டரைப் பார்த்ததும் எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை. ஆகாயத்தில் பறக்கிற மாதிரி அப்படி ஒரு சந்தோஷம். அதிலே என்னைக் குறிப்பிட்டு நீ எழுதியிருந்த ‘பிரியமுள்ள சிநேகிதிக்கு…’ என்கிற வார்த்தைகளை மட்டுமே ஆயிரம் தடவைக்கு மேல திரும்பத் திரும்ப படிச்சிருப்பேன்.

ரொம்ப வருந்திக் கூப்பிட்ட பிறகு, எங்க வீட்டுக்கு ஒரு தடவை வந்தே. எங்க ஊரும், எங்க வீடும், அந்தச் சாய்ங்கால நேரமும் உனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. வீட்ல அப்ப யாரும் இல்ல. பேசினோம்… பேசினோம்… அப்படிப் பேசினோம். என் ஆயுசு முழுக்கச் சேர்த்து வெச்சிருந்த பேச்சையெல்லாம் அன்னிக்கு ஒரே நாள்லயே நான் பேசித் தீர்த்துட்ட மாதிரி இருந்துச்சி.

அப்போதான் நான் சொல்லித் தெரியும் உனக்கு, நான் 27 வயசுக்காரி. பி.காம். படிச்சவள். ஒரு ஜவுளிக்கடையில் மாசம் எண்ணூறு ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்க்கிறவள். இந்தக் குறைஞ்ச சம்பளத்துலதான் நான், என் அம்மா, தம்பி எல்லோரும் காலம் தள்ளிகிட்டிருக்கோம்’கிற விஷயம். எனக்கு இப்படி ஒரு கஷ்டமானு சொல்லிச் சொல்லி மறுகிப் போனே!

என் கல்யாணம் என்னச்சுன்னு நீ கேட்டப்போ, மாரியம்மன் கோயில் பூஜாரி ஒருத்தர், பாகவதர் மாதிரி கிராப் வச்சிக்கிட்டு, கடுக்கன் போட்டுகிட்டு, நெத்தி நிறைய விபூதி, குங்குமத்தோட பெண் கேட்டு வந்தாரு. ‘மாசம் முன்னூறு ரூபா சம்பளம். தட்டுல ஒரு ஐநூறு விழும். விஷேஷ நாள்ல கொஞ்சம் அதிகம் விழலாம். கோயிலுக்குச் சொந்தமான வீடு ஒண்ணு இருக்கு. சந்தோஷமா வச்சிக்குவேன்’னாரு. அம்மாவுக்கு இஷ்டமில்லே. பேண்ட், ஷர்ட் போட்ட மாப்பிள்ளையா பார்ப்போம்னாங்க. அப்புறம் என்னடான்னா, லங்கோடு கட்டின்ன் கூட வரலை’னு சொல்லிவிட்டு, நான் கண்ணில் நீர் ததும்ப சிரிச்சதைப் பார்த்து, நீ திகைச்சுப் போய் உட்கார்ந்திருந்தே.

மறுநாள் அதிகாலையிலேயே, பொள்ளாச்சி போய் சின்னார் வனப்பகுதியிலே உள்ள கோயிலுக்குப் போனோம். பஸ் நெரிசல்ல ஒருத்தரோடோருத்தர் ஒட்டி நசுங்கிக்கிட்டிருந்தாலும் நம்ம பேச்சு மண்ணும் ஓயலே. சுட்டெரிக்கிற வெயில்ல மூணு கிலோ மீட்டர் நடந்து, ஆத்துல குளிச்சு, பயபக்தியா சாமி கும்பிட்டுத் திரும்பியதும், நீ ஊருக்குப் புறப்பட்டுட்டே, எனக்கோ உசிரே போறது மாதிரி இருந்திச்சு.

அதுக்குப் பிறகு நமக்குள்ள நிறைய கடிதப்போக்குவரத்து, ஒருநாள் அம்மா கேட்டா… ‘இப்படி ஒருத்தருக்கொருத்தர் உருகி மாயறீங்களே… ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சிக்கிட்டா என்ன?’னு.

என்னகோ தாங்க முடியாத கோபம் வந்திடுச்சு. ‘அப்படியா பழகறோம் நாங்க? நட்பு மாதிரி உயர்வான விஷயம் உண்டா உலகத்துல? ஏம்மா! உனக்குப் புத்தி இப்படிப்போகுது?’ன்னு கத்தி தீர்த்துட்டேன்.

கொஞ்ச நாள் கழிச்சு, உன்னைத் தேடி வரும்படியான நெருக்கடி ஒண்ணு வந்துடுச்சு எனக்கு. வந்தேன். உன்னைப் பார்த்ததும் ஏனோ வழக்கமா பேசற மாதிரி என்னால பேச முடியலே. இயல்பா சிரிக்க முடியலே.

நீ கூட கேட்ட, ‘என்ன ஆச்சு உனக்கு? சளசளன்னு பேசிட்டிருப்பியே! ஏன் இப்ப எதையோ முழுங்கிட்ட மாதிரி ஊமையா இருக்கே?’னு.

கொஞ்ச நேரம் பொறுத்து, மெதுவா வந்த விஷயத்தைச் சொன்னேன். ‘போன மாசம் திடீர்னு எனக்கு அப்பெண்டிஸைடிஸ் ஆபரேஷன். பத்தாயிரத்துக்கும் மேல செலவு. வீடு வாங்கிறதுக்காக எங்க அக்கா வீட்டுக்காரர் வெச்சிருந்த பணத்தை எடுத்து, அவருக்குந் தெரியாம எனக்குச் செலவு பண்ணிட்டா அக்கா. அதுக்குள்ள எப்படியாவது சமாளிச்சிடலாம்னு நினைச்சா. ஆனா, அடுத்த வாரமே பணம் கொடுத்து பத்திரம் பண்ணிடலாம்னு திடீர்னு சொல்லிட்டாரு அத்தான். விஷயம் தெரிஞ்சா கொலையே விழும். அவ்வளவு கோபக்காரர் எங்க அத்தான். அக்கா வாழாவெட்டியா எங்க வீட்டுக்கு வரவேண்டியதிதான். இந்த நிலைமையிலே எனக்கு வேற வழி தெரியலே…’

அதுக்கு மேல என்னால பேசமுடியலே. நீயும் கொஞ்ச நேரம் எதுவுமே பேசாம இருந்தே. அப்புறம் வெளியே எங்கேயோ போயிட்டு வந்தே நீ. ஒரு நூறு ரூபா நோட்டுக்கட்டை என் கையிலே கொடுத்துட்டு, உன் பைக்ல என்னை அழைச்சுட்டு வந்து பஸ் ஸ்டாண்டில் விட்டுட்டு, திரும்பிப் பார்க்காம விருட்டுனு கிளம்பிப் போயிட்டே.

‘பத்திரமா போ!’னு ஒரு வார்த்தையாவது சொல்வேனு நினைச்சேன். இல்லை. ஒரு சின்ன சிரிப்பாவது..? ம்ஹூம்!

என் கையில நீ கொடுத்த நூறு ரூபாய் நோட்டுக்கட்டு, தூக்கக்கூட முடியாத கருங்கல்லா கனத்துச்சு.

பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தேன். கண்களை மூடிக்கிட்டேன். மூடிய கண்ணுக்குள் கடுக்கன் போட்ட, பாகவதர் கிராப் வெச்ச, நெத்தி நிறைய விபூதி குங்குமம் பூசிய, மேல் சட்டை போடாத கோயில் பூசாரி வந்து நின்னான்.

என்னை அறியாமல் கண்ணீர் சுரந்து வழிஞ்சுது. நான் துடைக்கவே இல்லை!

– உத்தமசோழன்.                                                                                                                     நன்றி; ஆ.வி.

 
1 பின்னூட்டம்

Posted by மேல் ஓகஸ்ட் 21, 2011 in சிறுகதை

 

குறிச்சொற்கள்: , ,