RSS

கதவைத் தட்டும் காமம்

10 மார்ச்

இருபது வயதில் காமம் ஏற்படுத்தும் வலியை விடவும் ஐம்பது வயதில் காமம் ஏற்படுத்தும் வலி உக்கிரமானது. முறிந்த கிளை ஒன்று மரத்திலே தொக்கிக்கொண்டு நிற்பதுபோல வயோகத்தின் காமம் விடுபடமுடியாமலும், அதே நேரம் சுகிக்கச் சாத்தியமற்றும் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

இந்தியக் குடும்பங்களில் ஆணோ, பெண்ணோ ஐம்பது வயதைத் தொடத்துவங்கியதுமே, புலன் இச்சையிலிருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டு வாழவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

குறுந்தொகையில், மிளைபெருங்கந்தன் என்ற கவிஞரின் பாடல் ஒன்று காமத்தைப்பற்றிப் பாடுகையில், ‘முற்றிவளராத இளம் புல்லைக் கடித்துத் தின்ன முடியாமல், முதிய பசு தன் நாவால் தடவிக்கொடுத்து மகிழ்வதைப் போன்றதே  காமம்’ என்கிறார். இந்த நிலைதான் வயதேறியவர்களின் இச்சை.

சில வருடங்களுக்கு முன்பு, புனலூர் அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு ஒரு வைத்தியரைக் காணப்போயிருந்தேன். அவரோடு உரையாடிக் கொண்டிருக்கும்போது பேச்சு காமத்தைச் சுற்றத் துவங்கியது.

வயதானவனுக்கு பெண்ணோட நெருக்கம் மட்டும்தான் தேவைப்படுது. உடம்பில்லே! அந்த நெருக்கம் வார்த்தைகளாக இருந்தாக்கூட போதும். குழந்தைகள் உறங்கிட்டு இருக்கும்போது நடு ராத்திரியில் அப்பவோ அம்மாவோ எழுந்து குழந்தைக்குப் போர்வையை நல்லா இழுத்துப் போர்த்தி விடுவாங்களே, அதில் ஒரு நெருக்கமும் அக்கறையும் இருக்கு போருங்க, அவ்வளவு கிடைச்சா போதும் என்றார்.

ஒவ்வொரு வீட்டிலும் கண்ணுக்குத்தெரியாத பல திரைகள் தொங்குகின்றன. இந்தத் திரைகளுக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்று வீட்டில் இருப்பவர்களே ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்வதில்லை.

கடவுளும் குழந்தைகளும் இல்லாமல் போயிருந்தால் பெரும்பான்மைக் குடும்பங்களிலிருந்து பெண்கள் வெளியேறிப் போயிருப்பார்கள். இந்த அரண்டின் மீதுள்ள நம்பிக்கையால் மட்டுமே பெண் தன் சொந்த துயரங்களை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

அடிநிலை மக்களின் வாழ்க்கைப்பாடுகள் குறித்தும், பெண்கள் மீது சுமத்தப்படும் கலாச்சார ஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும் தன் எழுத்தின் வழியே தீவிர எதிர்வினைகள் தந்தவர் தமிழின் மூத்த படைப்பாளி ஜெயகாந்தன்.

அவரது ‘மௌனம் ஒரு பாஷை’ தமிழ்ச் சிறுகதைகளில் ஒரு தனித்துவமானதாகும்.

இக்கதை, தற்கொலை செய்ய முயன்ற அம்மாவைக் காண்பதற்காக வரும் மகனிடமிருந்து துவங்குகிறது. மருத்துவம் படித்து பட்டணத்தில் பணியாற்றும் ரவி, தன்னோடு பணிபுரியும் ஒரு ஐரோப்பிய பெண்ணைக் காதலித்து அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகின்றான். இது ஆசாரமான அந்தக் குடும்பத்தில் எதிர்ப்புக்கு உள்ளாகிறது.

ஆனால், ரவி தான் விரும்பிய ஐரோப்பிய பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். அன்றிலிருந்து அவன் தன் பிள்ளையே இல்லை என்று ஒதுக்கி வைத்துவிடுகிறார் சிங்காரம்பிள்ளை. இது நடந்து ஐந்து வருடமாகிறது. இடையில் ரவியின் தம்பிகளான முத்துவுக்கும்  சோமுவுக்கும் திருமணம் நடக்கிறது. ரவிக்கு அழைப்பு இல்லை.

இரண்டு மாதங்களுக்கு முன், சிங்காரம்பிள்ளைக்கு சஷடியப்த பூர்த்தி விழா நடந்தது. அப்போதாவது ரவியை அழைக்கலாம் என்று, அம்மா விரும்புகின்றாள். சிங்காரம்பிள்ளை அதையும் மறுத்து விடுகிறார்.

இப்போது ஐம்பது வயதைக்கூட நெருங்காத அம்மா, திடீரென அரளிவிதையை அரைத்துக் குடித்துவிடவே, எதற்காக இப்படி நடந்துகொண்டாள் என்று தெரியாமல் வீடே திகைக்கிறது. அவளைப் பரிசோதித்த வைத்தியர், பல்வேறு காரணங்களை ஆராய்ந்து எதுவும் இல்லை என்றதும், ஒருவேளை ரவியைப் பார்க்காமல் இருக்கும் ஏக்கத்தில்தான் இப்படிச் செய்திருக்க வேண்டும், அவனை வரவழையுங்கள் என்கிறார்.

அம்மா தற்கொலை செய்தி கேட்டு, அவளைப் பார்ப்பதற்காக மகளும் மருமகன்களும் வந்து சேர்கிறார்கள். ஆனால் அவர்களைப் பார்த்ததும் அம்மா, ‘எதற்காக இப்படி என் மானத்தை வாங்குகிறீர்கள்?’ என்று தன் கணவனிடம் கோபித்துக்கொள்கிறாள்.

ரவி நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருப்பதால், அவன் தன் தம்பிகளின் மனைவிகளிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான். எல்லாரும் அவரவர் குறையை அவனிடம் கொட்டித் தீர்க்கிறார்கள். அவனும்ஆறுதல் சொல்கிறான்.

ஆனால் ரவி வந்த நிமிஷத்திலிருந்து அம்மா வெளியே வராமல் குமுறி அழுதபடியே படுக்கையில் புரள்வதை அவர்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

ரவி அம்மாவை பரிசோதனை செய்து பார்க்கிறான். அம்மா கர்பமாக இருப்பது தெரியவருகிறது. அம்மா, ‘என் மானத்தைக் காப்பாத்துடா ரவி. இதை யாரிடமும் சொல்லிவிடாதே’ என்று கதறுகிறாள். ரவியோ, இதில் என்னம்மா தவறு இருக்கிறது? குழந்தைப்பேறு என்பது பெருமைக்குரிய ஒன்று.நீங்கள் நிம்மதியாக ஓய்வு எடுங்கள்’ என்று சமாதானம் செய்துவிட்டு, வீட்டில் உள்ளவர்களிடம் இந்தச் செய்தியைச் சொல்கிறான்.

இதைக்கேட்ட வீட்டு மாப்பிள்ளைகள், ‘அம்மாவுக்கும் பெண்ணுக்கும் ஒன்றாக வளைகாப்பு நடத்திவிடலாம்’ என்று கேலி செய்கிறார்கள். அதன்பிறகு, வீட்டில் நீண்ட மௌனம் படர்கிறது. வேறு வழியில்லாமல் ரவி அப்பாவிடம் பேசுகிறான்.

‘அப்பா! நம்ம ஜனங்கள் இன்னும் வளரலை. தாய்மையை மதிக்கக்கூடத் தெரியாத நிலையில் இருக்காங்க. பெத்த தாயை கேலி செய்யும் கீழ்த்தரம் தான் இங்கே இருக்கு. அதனால, அம்மா என்னோட வந்து இருக்கட்டும். நான் அவங்களைப் பாத்துக்கறேன்’ என்று அனுமதி கேட்கிறான். அவரும் சம்மதிக்கிறார்.

ஊருக்குப் பறப்படும் நாளில், கனத்த இதயத்தோடு, பேச வார்த்தைகள் இன்றி, அவர்கள் வண்டி தெரு முனையைக் கடக்கும் வரை பார்த்துக்கொண்டு இருக்கிறார் சிங்காரம்பிள்ளை.

சமூகத்தில் உள்ள வன்முறைக்கு எவ்விதத்திலும் குறைவானதில்லை குடும்பத்தில் உள்ள வன்முறை. ரத்தம் சிந்தாத இந்த வன்முறைக்கு ஆயுதம் சொற்கள்தான். கூர் தீட்டப்பட்ட கத்திகளைப்போல சொற்கள் நம் உடலில் ஆழமாகப் பாய்கின்றன. அதன் வலி மிக அந்தரங்கமானது. ஆறாத ரணமுடையது.

கதவுகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால், குடும்ப யுத்தத்தின் கூப்பாடு நம் தெருக்கள், நகரங்கள் முழுவதும் எதிரொலிக்ககூடும். வீடுகளுக்கு கதவுகளையும் ஜன்னல்களையும் கண்டுபிடித்தவன் ஒரு குடும்பஸ்தனாகத்தான் இருக்கக்கூடும். நம் வீட்டுக் கதவுகள் வெளியிலிருந்து எதுவும் உள்ளே நுழையாமல் பாதுகாப்பதைவிடவும் உள்ளிருந்து எதுவும் வெளியே செல்லாமல் இருக்கத்தான் அதிகம் உதவுகின்றன. சரி, கதவு எங்கு இருக்கிறது? வீட்டுக்கு உள்ளேயா? வெளியிலா?

— எஸ்.ராமகிருஷ்ணன் – கதாவிலாசத்தில்

 
6 பின்னூட்டங்கள்

Posted by மேல் மார்ச் 10, 2012 in கட்டுரை

 

குறிச்சொற்கள்: , ,

6 responses to “கதவைத் தட்டும் காமம்

 1. உமா

  மார்ச் 12, 2012 at 12:59 பிப

  “சமூகத்தில் உள்ள வன்முறைக்கு எவ்விதத்திலும் குறைவானதில்லை குடும்பத்தில் உள்ள வன்முறை. ரத்தம் சிந்தாத இந்த வன்முறைக்கு ஆயுதம் சொற்கள்தான். கூர் தீட்டப்பட்ட கத்திகளைப்போல சொற்கள் நம் உடலில் ஆழமாகப் பாய்கின்றன.”

  (1) என்ன அப்பட்டமான உண்மை, ஆழமான வரிகள். தினம் தினம் நாம் சொற்கள் என்ற ஆயந்த்தால் நம்மை அறியாமலேயே காயப்படுத்திக் கொண்டிருக்கிறோம் மற்றவரையும் நம்மையும்.

  (2) இந்த கதயை படித்த பின்பாவது வீட்டில் உள்ள பெரியவர்களின் உணர்வுகளை மதித்து அவர்களுக்கு ஒரு தனி அறை ஒதுக்குவோமாக.

  நன்றி
  – உமா…

   
 2. PERUMAL KARUR

  மார்ச் 17, 2012 at 11:29 முப

  nice..

   
 3. Nc Durai

  ஜூலை 15, 2012 at 12:42 முப

  மிகவும் சரி. சில வீடுகளில் பெரியவர்கள் செய்யும் அக்கிரமங்கள் சொல்லி மாளாது.
  இந்த கதையின் தொடர்ச்சியாக சிலரை பார்க்கிறேன்.
  கடைசி குழந்தையாக பிறந்தாலும் கஷ்டம் தான்.

   
 4. karutha machan

  திசெம்பர் 21, 2012 at 5:25 முப

  nice thought..

   
 5. guru

  ஜூன் 22, 2013 at 12:41 பிப

  நன்றி

   
 6. guru

  ஜூன் 22, 2013 at 12:44 பிப

  பெண்களுக்கு மட்டும் தான் ஒழுக்கம் கலாச்சாரம் உண்டா ஆண்களுக்கு கிடையாதா?

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: