RSS

அப்படி என்னதான் எழுதியிருந்தாள்?

29 பிப்

பத்மினி, பத்மேஷ் இருவரையும் சாப்பிடக் கூப்பிட்டுக் கொண்டேயிருக்கிறாள் சாரதா. அவர்கள் வரக்காணோம். ஒவ்வொரு முறையும் மைக்ரோவேவ் அவனில் இருந்து எடுத்த விநாடிகளிலேயே சூடு ஆறிப்போய் விடுவதால், இத்தோடு மூன்று முறை சாம்பாரைத் திரும்பத் திரும்ப சூடு பண்ணிக்கொண்டிருக்கிறாள்.

சாரதாவின் அம்மா வழியில் பாட்டி, பழைய நாட்களில் காலையில் கல் சட்டியில் குழம்பு வைத்து, கரி அடுப்பில் விடியற்காலையில் வைப்பாள். இப்போதெல்லாம் ‘மைக்ரோவேவ்’. மூன்றே நிமிடங்களில் கொதித்து விடுகிறது. ஆனால் அதே மாதிரி வெளியே எடுத்து வைத்த மூன்றே நிமிடங்களில் ஆறிழும் விடுகிறது!

சாரதா யோசித்தபடியே மகளின் மூடியிருந்த அறைக் கதவைப் பார்த்தாள். அவளும், அவளுடைய ஃபியான்ஸே பத்மேஷூம் கடந்த இரண்டு மணி நேரங்களாக அவளுடைய மூடிய அறையில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது பத்மினியின் குரல்தான் கேட்கிறது.

இப்போதெல்லாம் ‘இன்ஸ்டென்ட் மெஸேஜ்’ செய்யாத ஒரு டீன் ஏஜரைக்காட்டுங்களேன்! ஏன்? பத்மினியையே எடுத்துக்கொள்ளுங்கள். அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறவனையே அப்படித்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாள்.

நான்கு மாதங்களுக்கு முன்னால் ஒரு இரவு ஒன்பது மணிக்கு மேல் கம்ப்யூட்டரில் ‘சாட்’ பகுதியில் கண்களை மேய விட்டுக்கோண்டிருந்தாள் பத்மினி. அமெரிக்க வாழ்க்கையில் மற்றவர்கள் வாயில் சுலபமாக நுழைய வேண்டும் என்பதற்காக தன் பெயரை பாட் (PAT)  என்று கூப்பிட வசதியாக சுருக்கியும் வைத்திருக்கிறாள்.

அதே பெயரில் சாட் செய்யும் போதுதான் இன்னொரு பாட் கண்களில் பட்டது. சட்டென்று ஒரு உந்துதலில் தன்னுடைய பெயரையே கொண்டிருக்கும் நபர் என்ற ஒரே காரணத்திற்காக ‘சாட்’ பண்ண ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் அவன் ஆண்மகள் என்றும் பாட்ரிக் (PATRIC) என்ற பெயரைச் சுருக்கி ‘பாட்’ என்று வைத்துக்கொண்டிருக்கிறான் என்றும் தெரிந்தது.

‘உன்னுடைய என்று முழுப்பெயர் என்ன?’ என்று கேட்டபோது ஒரு கணம் தயங்கிவிட்டு ‘பாட்ரிசியா’ என்று எழுதினான். அவனோடு மணிக்கணக்கில் அரட்டை அடிப்பதும் அவளுக்குப் பழக்கமாகிவிட்டது. ஆறு மாதங்களாக முகம் தெரியாமல், தெரிவிக்காமல் அவனோடு பேசிக்கொண்டிருந்தாள்.

அது சரி…. இதுவரை உனக்கு வாழ்க்கையில் யாரிடமாவது காதல் வந்திருக்கிறதா? உனக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா?

அவனிடமிருந்து இப்படி ஒரு கேள்வி வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை. சிறிது தயங்கிவிட்டு ‘காரல் வந்திருக்கிறது, ஆனால் கல்யாணம் ஆகவில்லை. என்னுடைய அம்மாவும் அப்பாவும்தான் பார்த்து எனக்குத் தகுந்தவனாக கல்யாணம் செய்து கொடுக்கவேண்டும் என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள்…’ இதை டைப் பண்ணிவிட்டு ‘சென்ட்’ பட்டனைத் தொட்டவுடனே கடிதம் அவனுக்குச் சென்றுவிட்ட அந்த நொடியே அவள் தன் நாக்கைக் கடித்துக்கொண்டாள்.

‘தப்பு செய்துவிட்டேன். என் பெற்றோர் பார்த்து ஜோடி சேர்க்க வேண்டும் என்று படித்தவுடனேயே பாட்ரிக் நான் அமெரிக்கன் இல்லை என்று தெரிந்துகொண்டிருப்பானே!’

அவன் தெரிந்து கொண்டுவிட்டடான். ‘அப்ப நீ அமெரிக்கப் பெண் இல்லையா? இந்தியனா? பாகிஸ்தானியா? என்று உடனே பதில் கேள்வி வந்தது.

அவளுக்கு இப்போது வேறு வழியில்லை. ‘நான் தென்னிந்தியப் பெற்றோருக்குப் பிறந்தவள். அவர்களுக்குச் சென்னை என்பது ஊர். அவர்கள் பேசுவது தமிழ் என்ற மொழி. என் பெயர் பத்மினி. ஆனால் நான் இந்த நாட்டிலேயே பிறந்து வளர்ந்த பெண்…’ என்று தன் பின்னணியைத் தெரிவித்தாள்.

ஏனோ அதற்குப்பிறகு பாட்ரிக்கிடமிருந்து ஒரு வாரத்திற்கு எந்தவித செய்தியும் இல்லை. ஒருவாரம் கழிந்து ஞாயிறு காலையில் ‘ நானும் உன்னை மாதிரி இரண்டாவது தலைமுறை தென் இந்தியன்தான். அம்மா அப்பா வைத்த பெயர் பத்மேஷ். பாட் என்று மாற்றிக்கொண்டது, என்னுடன் வேலை செய்யும் அமெரிக்கர்கள் வாயில் சீக்கிரம் நுழையும் என்ற காரணத்தினால். நான் கலிஃபோர்னியாவில் சாண்டியேகோ என்ற இடத்தில் இருக்கிறேன். நீ எங்கிருந்தாலும் உன்னைஇர நேரில் வந்து சந்திக்க ஆசையாய் இருக்கிறது.’

பத்மினிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அவளுடைய வீடு இருப்பது லாஸ்ஏஞ்சல்ஸில். நீ என்னிடமிருந்து வெகு தொலைவில் இல்லை. காரில் ஒரு மணி நேரத்தில் வந்துவடலாம். எப்போது சந்திக்கலாம் என்று பதில் கடிதம் எழுதினாள்.

‘இரண்டு வாரங்களில். ஞாயிறு அன்று சந்திக்கலாமா?’

‘சாரி, அன்று என் ஸ்நேகிதியின் திருமணத்திற்குப் போகவேண்டும்.’

‘எங்கே? யாருக்குக் கல்யாணம்?’

‘லாங்பீச் என்ற இடத்தில் ரமாடா இன்னில் என் தோழி சங்கரி என்பவளுக்கு. நான் சின்ன வயதிலிருந்தே அவளுடன் பழகியிருக்கிறேன். காலை திருமணத்திலிருந்து ரிஷப்ஷன் வரை நான் அங்கே இருந்தாக வேண்டும்…’

‘ இது டூ மச். நானும் அதற்காகத்தான் எல்.ஏ. வரப்போகிறேன். அதனால் ஒரே கல்லில் இரண்டு பறவைகள் என்றுதான் உன்னைப் பார்க்கலாம் என்றேன். இப்போது நாம் இருவரும் கல்யாணத்திலேயே சந்தித்துக் கொள்வோம். உன்னை நான் எப்படி அடையாளம் கண்டுபிடிப்பது?

‘ஒன்று செய்யலாம் உண்மையாகவே நம் இருவரிடமும் ‘கெமிஸ்ட்ரி’ இருக்கிறது என்றால் ஒருவரை ஒருவர் கண்டுபிடிக்க முடியும். என்ன சொல்கிறாய்?’

‘ஓ.கே. சைன் ஆஃப் பண்ணுவதற்கு முன் ஒரு விஷயம்… எனக்கும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. வீட்டில் பெண் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பை…’

பத்மேஷூம், பத்மினியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றவர்கள் சட்டென்று சரித்தும் விட்டார்கள். அம்மாக்கள் இருவரும் புரியாமல் நிற்க ‘மாம்… நான் சொல்லலை? அந்த பாட்ரிக், என்னுடைய சாட்ரூம் ஃப்ரெண்ட், சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து ஒரு மூலையில் நின்று கொண்டு பேச ஆரம்பித்தார்கள்.

‘இன்ஸ்டண்ட் மெஸேஜிங்’ மூலம் வந்த ‘இன்ஸ்டண்ட் காதல்’  நாளுக்கு நாள் வளர, திருமணத்துக்கு நாள் குறிக்க ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்கள், அந்த சனிக்கிழமை வரை.

வார இறுதி விடுமுறை. லேசான தூறல் காரணமாக வழ க்கம்போல் டென்னி!ஸ் விளையாடாமல் பத்மேஷ் காலையில் சீக்கிரமாக பதிமினி வீட்டுக்கு வந்துவிட்டான். ஆனாள் அவள் இல்லை. ‘ஆன்டி… நான் பத்மினி வரும்வரைக்கும் அவளுடைய கம்ப்யூட்டரை உபயோகித்துக்கொள்ளலாமா?’ என்று மரியாதைக்காக கேட்டுவிட்டு அவளுடைய அறைக்குச் சென்றான்.

ஒரு அரை மணி நேரம் கழிந்திருக்கும். பத்மினி இன்னும் வரவில்லை. அவன் சமையலறைக்கு வந்தான். ‘ஆன்டி… உங்களுடன் கொஞ்சம் பெர்சனலாக பேசலாமா?’ என்று கேட்டான். மதிய உணவுக்கு காய்கறி திருத்திக் கொண்டிருந்த சாரதா தலையாட்ட, கொஞ்சம் வருத்தமாகச் சொன்னான்.

‘பத்மினியுடைய கம்ப்யூட்டரில் அவளுடைய ஈ-மெயில் பக்கம் திறந்தே இருந்ததா? அதில் அவளுடைய ஸ்நேகிதிக்கு எழுதின கடிதம் எதேச்சையாக என் கண்ணில் பட்டது. அதில் அவள் எழுதியிருக்கும் விஷயம் என்னைக் கோவப்பட வைக்கிறது…’ என்றான் வேகமான அமெரிக்கனில்.

‘அப்படி என்னதான் எழுதியிருந்தாள் என் பெண்?’

மத்த எல்லா விஷயத்திலும் பொருத்தம் பார்க்கும் பெற்றோர், பெட்ரூமிலும் ஒருத்தருக்கொருத்தர் பொருத்தமா என்று பார்க்க வேண்டாமா? ஒரு ட்ரயல் பார்த்துவிட்டு அப்புறம்தான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அது முடியாத காரியம் என்று எழுதியிருக்கிறாள்.

அது மட்டும் இல்லை ஆன்டி… என்றவன் தயங்கியபடியே. நான் எய்ட்ஸ் டெஸ்ட் எடுகணுமாம். இது எனக்குத் தேவையா? இப்போது நான் என்ன செய்வது? என்றான்.

‘அவளுடன் இதைப்பற்றி தெளிவாக நீயே பேசிவிடேன். அதுதான் நல்லது.’ என்று ஆலோசனை கூறினாள். அவனுக்கும் அதுதான் சரி என்று பட்டது. பத்மினி வீட்டுக்குள் வந்த உடனேயே ‘உன்னுடன் கொஞ்சம் தனியே பேச வேண்டுமே!’ என்றான்.

இருவருமாக அவள் அறைக்குச் சென்றார்கள். சில நிமிடங்களில் பத்மேஷ் மட்டும் தனியே வெளியே வந்தான். அவன் முகம் பேய் அறைந்த மாதிரி இருந்தது. ‘ஆன்டி… நான் போயிட்டு வரேன். நைஸ் நோயிங் யூ…’ என்றான். சட்டென்று வெளியேறிவிட்டன்.சாரதாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. மகளின் அறைக்கதவைத் தட்டினாள். என்ன ஆச்சு டார்லிங்? என்ன நடந்தது? என்று சந்தேகமாகக் கேட்டாள். நான் இந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டேன்.

‘அவன் கேட்டதும் கோபப்பட்டதும் தப்பு இல்லை மாம். என்னுடைய அனுமதி இல்லாம என் ஈ-மெயிலைப் படிச்சான் பாரு அதுதான் தப்பு. என்னுடைய ப்ரைவஸியைக் கல்யாணத்துக்கு முன்னாடியே மதிக்காதவன் அப்புறம் எப்படி நடந்துப்பான்? என்னாலே இதை ஏத்துக்கவே முடியாது. அதுதான் போயிட்டுவான்னு அனுப்பிச்சிட்டேன்.’ என்று சொல்லிவிட்டு ‘எனக்குப் பசிக்கிறதும்மா… சுடச்சுட எனக்கு சாம்பார் ரைஸ் வேணும்’ என்றாள் கூலாக.

சாரதா அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்துவிட்டு மறுபடி மைக்ரோ அவனில் சாப்பாட்டை சுட வைக்க ஆரம்பித்தாள்.

சிறுகதை; கீதா பென்னட்

 

குறிச்சொற்கள்: , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: