RSS

யாரும் தப்ப முடியாது……

10 டிசம்பர்

மரபுரீதியாக பெண்ணுக்கு உருவாகியிருக்கும் பிம்பத்தை உடைத்தால் பழிப்பது சமூகத்தின் பழக்கம்


திலகவதி ஐபிஎஸ்
முன்னாள் காவல்துறை உயரதிகாரி

என் காவல்துறைப் பணியில் முதன்முதலில் ஒரு கணவனைக் கொன்ற மனைவியை வேலூர் அருகிலுள்ள தொரப்பாடி மகளிர் சிறையில் சந்தித்தேன். என்னிடம் சில உண்மைகளை அந்தப் பெண் சொன்னார். “அந்த ஆளு தெனமும் குடிச்சிட்டு வந்து என்னை அடிப்பான். எதுத்துக் கேட்கமுடியாது. ஒருகட்டத்தில் எம் பொண்ணுகிட்ட தவறான முறையில நடக்க முயன்றான். இதுக்குப் பயந்துகிட்டு நான் எந்த வேலைக்கும் போகலை. நான் இல்லாத நேரத்தில் ஏதாவது அவங்கள செஞ்சுடுவானோனு பயந்தேன். இப்படியான ஒரு கொடூர மனுஷன் இந்த உலகத்துல இருக்கக்கூடாதுன்னு நினைச்சேன். நானும் எம் பொண்ணும்  சேர்ந்துதான்  உலக்கையில் அடிச்சு அவனைக் கொன்னோம்” என்று சொன்னார். அதே பெண் காவல்துறையினரிடம் வேறுமாதிரி சொல்லியிருக்கலாம். யாருக்கும் வன்முறையை கையில் எடுக்க உரிமையில்லை. ஒரு கருத்தை இங்கே சொல்லியாகவேண்டும். எந்த நோக்கத்திற்காக  எந்தப்  பயன்பாட்டிற்காக அரசுத் துறைகள் தொடங்கப்பட்டனவோ அந்த இலட்சியத்திற்காக அவை உழைத்தால் பிரச்னைகள் குறைந்துவிடும்.

ஆனால் எதார்த்தம் வேறுமாதிரியாக அல்லவா இருக்கிறது.  அந்தப் பெண்மணி காவல்நிலையத்தில் புகார் செய்திருக்கலாம். அல்லது தம் பெண்களை உறவினர் வீட்டுக்கு அனுப்பியிருக்கலாம். சில காலம் பிரிந்து வாழ்ந்திருக்கலாம். எங்கே போவது? எப்படி இந்த சங்கடத்திலிருந்து தப்புவது? என்று தவிக்கும்போதுதான் குற்றவாளிகளாக பெண்கள் மாறுகிறார்கள்.

பெண்கள் தியாக¤கள். மெழுகுவர்த்திகள். தன்னை உருக்கிக்கொண்டு ஒளி கொடுப்பவர்கள். அன்பும் கருணையும் மன்னிக்கும் சுபாவமும் இயல்பில் கொண்டவர்கள்  என்று  ஆதிகாலந்தொட்டே பெண்களை சமூகம் வார்த்தெடுத்து வந்திருக்கிறது. அந்தப் பண்புகளிலிருந்து விலகி நிற்கிறவர்களை சமூகம் சும்மாவிடாது. பழித்துப் பேசும். ஆனால் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியில் பெண்கள் மாறுபட்டிருப்பதற்கான சான்றுகள் உள்ளன.
தமிழின் பிரபல எழுத்தாளராக விளங்கிய லட்சுமியின் கதைகளில் பெண்கள் ரொம்பவும் பொறுமைசாலிகளாக இருந்து சாதிப்பார்கள். கணவன் குடித்துவிட்டு வந்து அடிப்பான். குடிகாரக் கணவனை பொறுத்துக்கொண்டு அவனைத் திருத்துவாள் மனைவி. சிலப்பதிகாரத்தில் கண்ணகியும் அப்படித்தான் இருந்தாள். கணவனே தெய்வம் என்பதால் அவள் கோயிலுக்குக்கூடச் செல்லவில்லை. வேறொரு தெய்வம் தேவையில்லை என்று மறுக்கிறாள். இன்றும்கூட பெண்மையின் வடிவமாக சித்திரிக்கப்படுகிறாள். இவர்கள்தான் தமிழ்ச் சமூகத்தின் அடையாளங்களாக இருந்துவரும் நிலையில் ஒரு பெண், பழகியவற்றிலிருந்து மாறும்போது புதிராகப் பார்க்கப்படுகிறாள்.

இப்போது அதுதான் நடக்கிறது. கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் நாம் அயரும்போது சாய்ந்துகொள்ள அங்கே மடிகள் இருந்தன. தனிக் குடும்பங்களில் சுவர்களில் சொல்லித்தான் அழமுடியும். இது காலமாற்றம். அதன் விளைவுகள்தான் இப்போது வெடித்துக் கிளம்புகின்றன.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். அறம் செய்ய விரும்பு என்ற குரலை பள்ளிகளில் கேட்கமுடிகிறதா? நவீன கல்விமுறையில் வாழ்க்கை மதிப்பீடுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது கவலையளிக்கிறது. மறுபக்கத்தில் தொலைக்காட்சித்  தொடர்களும்  ஊடகமும் பெண்களை வெடிகுண்டு வைப்பவர்களாக உருப்பெருக்கிக் காட்டுகின்றன.

மாமியாரை எப்படி விஷம் வைத்துக் கொல்வது? தவறாக நடக்கும் கணவனை எப்படி கூலிப்படை வைத்து அடிப்பது? சக தோழியை எப்படி தீர்த்துக்கட்டுவது? என்பது போன்ற ஆலோசனைகளை தொடர்கள் காட்சிகளாக வீட்டின் நடுவே தினமும் திகட்ட  திகட்டச்  சொல்கின்றன. யாருமே தப்பமுடியாது. அதுவொரு பல்கலைக்கழகம் போல செயல்படுகிறது. ரத்தக்களறி மட்டுமே வன்முறை என்று சொல்லிவிட முடியாது. இன்று வன்முறையில் பல தளங்களும் வெகு சகஜமாகவே பார்க்கப்படுகின்றன.

ஒரு பெண்ணுக்கு கணவனுடன் வாழப் பிடிக்கவில்லை என்றால் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் இந்தியாவில் மிகப்பெரிய சிக்கலான நடைமுறையாக அதுவே இருப்பது சங்கடம்தான். திருமணத்தை  ஒரு  சௌகரியமாக நினைத்தால், நீ அதற்கு நேர்மையாக இருக்கவேண்டும். அல்லது அதிலிருந்து வெளியேற வேண்டும். அதிலேயே இருந்துகொண்டு எல்லா தவறுகளையும் செய்ய முனைந்தால் குற்றமே நிகழும்.

 
பின்னூட்டமொன்றை இடுக

Posted by மேல் திசெம்பர் 10, 2011 in கட்டுரை

 

குறிச்சொற்கள்: ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: