RSS

கொலையும் செய்வாள்…

04 டிசம்பர்

கடந்த ஆறு மாதத்தில் தமிழின் முன்னணி செய்தித்தாள்களில் வெளிவந்த செய்திகள் இவை:

இவர்களின் ஆயுதம் கிரைண்டர் கற்கள், உயர் அழுத்த மின்சாரம், மயக்க மருந்து. சிலருக்கு கூலிப்படை. சமூகத்தின் பல்வேறு அடுக்குகளைச் சேர்ந்த தமிழ்ப் பெண்கள் தங்கள் கணவர்களைக் கொலைசெய்யும் செய்திகள் சதா பத்திரிகைகளில் இடம் பிடிக்கின்றன. என்ன நடக்கிறது?

• உசிலம்பட்டியில் கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்ததால் கூலிப்படையை வைத்து கணவர் வேலுவைக் கொன்றார் மனைவி செல்வி. இச்சம்பவத்துக்கு முன்பாகவே இரண்டுமுறை கொலை செய்ய முயன்றுள்ளார்.

• தண்டையார்பேட்டையில்  சரவணன் என்ற வாலிபரைக் குத்திக்கொலை செய்தார்  இந்திரா.  இந்திரா திருமணமானவர். திருமணம் ஆனபிறகும் அவருக்கு தனது காதலர் சரவணனுடன் உறவு தொடர்ந்துள்ளது.   தன்னுடன் இந்திராவை ஓடிவரச் சொன்னதால் ஏற்பட்ட தகராறில் குத்திக்கொலை செய்யப்பட்டார் சரவணன்.

• ராயப்பேட்டையில்  செக்ஸ் தொல்லை கொடுத்த காதலரைக் கொல்ல முயற்சி. மயக்க மது கொடுத்து வசந்தகுமார் என்பவரைக் கடத்திக் கொல்ல முயன்றார் ரேகா. வசந்தகுமாரும் சரி; ரேகாவும் சரி; இருவருமே மணமானவர்கள்.

• சிவகாசியில் மதுரைப்பாண்டி என்ற தன் கணவர்மீது உள்ள  ஆத்திரத்தால் ஒன்பது மாதக் குழந்தையைக் கொன்ற  துர்காதேவி கைது செய்யப்பட்டார்.

• கும்மிடிப்பூண்டியில் அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுத்ததால் தூங்கும்போது கல்லைப்போட்டு கணவர் கொலை. கணவர் பெயர் அசோக்.  மனைவியின் பெயர் அமுதா. பெண் குழந்தை வளர்ந்த பிறகும் அவர்கள் கண் முன்னால் செக்சுக்கு வலியுறுத்தியதால் இந்தக் கொலை நடந்துள்ளது.

• தன் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனின் தலையில் கிரைண்டர் கல்லைப் போட்டு கொலை செய்தார் திருவள்ளூரைச் சேர்ந்த தபேதா. இவர் திருமணத்திற்குப் பின்னர் இன்னொருவருடன் ஓடிப்போய் விட்டவர். குழந்தைகளின் காரணமாக திரும்ப வந்து கணவருடன் குடித்தனம் நடத்தினார். அந்த துரதிருஷ்டசாலி கணவரின் பெயர் எம்.ஜி.ஆர்(!).

• சென்னை வடபழனியில் குடி, பெண்கள் தொடர்பால் சொத்துகளை கண்டபடி விற்று மனைவியையும் சித்திரவதை செய்த கணவன் பிரசன்னா. உடலில் மின்சாரம் பாய்ச்சி கூலிப்படை உதவியுடன் கொலைசெய்தார் மனைவி உமா மகேஸ்வரி.

• திருமணமானவரை காதலித்த பூவரசி, தான் ஏமாற்றப்பட்டதாக நினைத்ததால் காதலன் ஜெயக்குமாரின் மகனை கொலை செய்தார்.

• நடத்தையில் சந்தேகப்பட்ட 57 வயது கள்ளக்காதலனைக் குத்திக்கொன்றுவிட்டார் 45 வயதான கள்ளக்காதலி மேகலா. கும்மிடிப்பூண்டியில் நடந்த இச்சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் கார்த்திகேயன்.

• நாகப்பட்டினத்தில் கள்ளக் காதலனை மணப்பதற்காக 2 குழந்தைகளை ஆற்றில் மூழ்கடித்துக் கொன்றார் கலா. அவரின் வயது 28. கூலித்தொழிலாளி ஜெயராமனின் மனைவி கலாவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனார் அன்பழகனிடம் காதல் உண்டானது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு குழந்தைகள் இடைஞ்சலாக இருப்பதாக உணர்ந்ததால் அவர்களைக் கொலைசெய்தனர்.

•திருவள்ளூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் கூலிப்படை வைத்து கணவனைக் கொன்றார் ஜோதி. கணவர் பெயர் செல்வகுமார், ரியல் எஸ்டேட் அதிபர். இந்தக் கொலைக்கு கூலிப்படையை ஏற்பாடு செய்தவர் அவரது கள்ளக்காதலர் தைரியநாதன்.

வரதட்சணைக் கொடுமை யால் ஸ்டவ் வெடித்து பெண்கள் சாவதென்பது நம் சமூகத்தில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக நடைபெற்ற கொடூரம். ஆனால் மேலே சொன்ன செய்திகள், நிலைமை மாறிக்கொண்டிருப்பதைக் காட்டுவதாக  எடுத்துக்கொள்ளலாமா? பலவீனமான பாலினமாகக் கருதப்பட்ட பெண்கள் வலிமையான பாலினமாக  மாறிக்கொண்டிருக்கிறார்களா?

ஆண்களுக்கு நிகராக இக்காலப் பெண்கள் உயர்கல்வியில் சாதித்து மிக உயர்ந்த பதவிகளை அலங்கரிக்கிறார்கள். பேருந்து ஓட்டுனர் உட்பட ஆண்களுக்கென்றே ஒரு காலத்தில்  ஒதுக்கப்பட்ட  பணிகளையும் பெண்கள் தற்போது நிரப்பியுள்ளனர்.  ஆட்சி செய்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செய்பவர்களாக உருவாகியுள்ளனர்…ஆனால் அவர்கள் தங்கள் எதிர் பாலினரைப் போலவே  கொலையிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளனரா?

திருமணத்திற்கு வெளியிலான உறவு,  குடும்ப வன்முறை மற்றும் பல்வேறு காரணங்களால் மனைவி அல்லது காதலிகளால் ஆண்கள் கொலைசெய்யப்படும் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளன என்பதை அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர்.  ஏமாற்றிய காதலனைப் பழிவாங்க காதலனின் சின்னஞ்சிறு மகனை அழைத்துச் சென்று கழுத்தை இறுக்கிக் கொலைசெய்த பூவரசி, தொடர்ந்து சித்திரவதை செய்த கணவனை மின்சாரம் பாய்ச்சிக் கொன்ற உமா மகேஸ்வரி, காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கூலிப்படை வைத்து கொலைசெய்த ஜோதி போன்றவர்கள் தமிழ்ப் பெண் இப்படித்தான் இருப்பாள் என்னும் மரபான சித்திரத்தை குலைத்துப் போட்டுள்ளனர்.

எல்லாக்  கொலைக்குற்றங்களையும் போலவே கணவன்கள், காதலர்களைக் கொன்ற இந்தப் பெண்கள் குற்றவாளிகள். தினசரிச் செய்தித் தாள்களைப் பொறுத்தவரை இது ஒரு சூடான செய்தி. அவ்வளவுதான். ஆனால் திருமணம், காதல் என்ற பந்தத்துக்குள் இணைந்திருக்கும் சகமனிதனை அல்லது அவனின் உறவுகளை, குழந்தைகளை ஏன் இந்த உமா மகேஸ்வரிகளும், பூவரசிகளும் கொலை என்ற கடைசி ஆயுதத்தை எடுக்கத் தூண்டும் நெருக்கடியான சூழ்நிலை எது? இவர்கள் தங்கள் கொலைகளின் வழியாக  நமது சமூகத்துக்குக் கூறும் செய்தி என்ன?

இந்தக் கொலைகளைச் செய்ததாகக் கூறப்படும் பெண்களின் புகைப் படங்களை பார்த்தால், அவர்கள் சாதாரணத்திற்கும் சாதாரணமான, நம்மைப் போன்ற அல்ப ஆசைகள் கொண்ட மனுஷிகளாகவே தெரிகிறார்கள். அவர்களின் பிரச்னை என்ன?

முன்னாள் சமூகநல வாரியத் தலைவியும், கவிஞருமான சல்மாவிடம் தசஇ பேசியபோது, “பெண்களுக்கு சமமான வாய்ப்புகள் உருவாகி யிருக்கின்றன. அவர்கள் வேலைக்குப் போய் சுயச்சார்பு அடைந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் மேலோட்டமான பார்வைகளே. என்னுடைய அனுபவத்தில் பெண்களுக்குப் புதிது புதிதாக பிரச்னைகள் உருவாகிக் கொண்டிருக்கும் சூழலில்தான் நாம் வாழ்வதாக நினைக்கிறேன். குடும்பங்களுக்குள் அவர்கள் இன்னும் பலவிதமான அவமதிப்புகள், பாதுகாப்பின்மை மற்றும் மன அழுத்தங்களை எதிர் கொள்கிறார்கள். ஒருகட்டத்தில் அந்த அழுத்தம் தாழாமல் அவர்கள் இதுபோன்ற அதீதமான முடிவுகளை எடுக்கிறார்கள் என்று கருதுகிறேன்” என்கிறார்.

‘‘முந்தைய தலைமுறைப் பெண்கள் தங்களது துன்பங்களை ஏற்று அனுசரித்து வாழவேண்டும் என்ற நிலையில் இருந்தார்கள். ஆனால் இப்போதுள்ள பெண்களுக்கு மாற்றுவழிகள் இருப்பது புலப்பட ஆரம்பித்துவிட்டது. அம்மாதிரியான சூழ்நிலையில் அதிலிருந்து விடுபடவேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்ற தவறான முடிவுகளையும் எடுத்துவிடுகிறார்கள்” என்கிற சல்மா, இன்னொரு விஷயத்தைக் கோடிட்டுக் காட்டுகிறார். ‘‘முன்பெல்லாம் பிறழ்வான உறவுகளுக்குள் போகும் இச்சை இருந்தாலும் அதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை. தற்போது செல்போன் மற்றும் தகவல் தொடர்பு மூலம் அதிகபட்ச சாத்தியங்கள் உருவாகிவிட்டன.

ஆனால் திருமணம், தாம்பத்தியம் ஆகியவற்றில் இருந்து ஒரு பெண் நினைத்தால் அவ்வளவு சீக்கிரம் வெளியேறமுடியாத இறுக்கமான நிலைதான் இன்னமும் நீடிக்கிறது.  இந்த நிலையில் அவள் தனக்கு விருப்பமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க உச்சகட்ட விடுதலைக்கான முடிவாக குற்றத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டியதாகி விடுகிறது.

ஊடகங்கள்  இதுபோன்ற  செய்தி களை மிகைப்படுத்திக் காட்டுவதால்கூட ஒரு மிகையான தோற்றம் உருவாகியிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை வெளிப்படுத்துகிறார் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்.

‘‘நாம் நுகர்வுக் கலாச்சாரத்துக்குள் நுழைந்துவிட்ட காலம் இது. இதனால் மனிதநேயம், விழுமியங்கள் குறைந்து உறவுகளும் நுகர்வாக மாறிவிட்டன. கூட்டுக்குடும்பங்கள் உடைந்து தனிக்குடும்பங்களாகிவிட்டன. தாமதமாக திருமணங்கள் நடைபெறுகின்றன. தம்பதிகளுக்குள் ஆத்மார்த்தமான உரையாடல்கள் குறைந்துவிட்டன. பணம் அனைத்து மதிப்பீடுகளுக்கும் மேலான உயரத்தில் உள்ளது. குழந்தைகளைக் கவனிக்கவோ, நல்ல பழக்கங்களைக் கற்றுத்தரவோ பெற்றோர்களுக்கு நேரம் இல்லை.

16 வயதிலேயே பெண்கள் காதலித்து வீட்டைவிட்டு ஓடிப்போகும் வழக்குகளை நான் பார்க்கிறேன். கேட்டால் அந்தப் பெண் ஐந்து ஆண்டுகளாக காதலிப்பதாகக் கூறுகிறாள்’’ என்று சமூக மாற்றம் குறித்த அதிர்ச்சியை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் சுதா ராமலிங்கம்.

‘‘எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும் இடத்தில் ஏமாற்றங்களும் அதிகமாகவே இருக்கும். வாழ்க்கையை எதார்த்தமாக அதன்போக்கில் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லை. இந்த  ஏமாற்றங்களை சரிசெய்ய அவர்கள் பாதை தவறும்போது  இதுபோன்ற குற்றங்களும் நடந்துவிடுகின்றன என்றுதான் கூறவேண்டும்” என்று முடிக்கிறார் சுதா ராமலிங்கம்.

‘‘இதற்கு இரண்டு காரணங்களைப் பார்க்கிறேன். கணவர் மற்றும் துணைவரின் கொடுமைகள் தாங்கமுடியாமல் பெண்கள் இந்த முடிவுக்கு வருகின்றனர்.  இரண்டாவதாக திருமணத்திற்கு அப்பாற்பட்டு ஆண்களோடு  உறவு  ஏற்படுவதன் மூலம் இந்தக் கொலைகள் நடக்கின்றன’’  என்று  விளக்கமளிக்கிறார் வழக்கறிஞர் சாந்தகுமாரி.

‘‘சில நேரங்களில் அதிகமான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் பெண் மனச்சிதைவு நோய்க்கு உள்ளாகிறாள். அதுவும் கொலை செய்வதற்குக் காரணமாகிறது. இதுகாலம் வரை ஆண்கள், பெண்களை கொலை செய்து கொண்டிருந்தனர். இப்போது பெண்கள் கொலை செய்யத் தொடங்கியுள்ளனர் என்றும் இதை நியாயப்படுத்த முடியாது. பெண்ணை தாய்மையின்   சின்னமாக  பொறுமை யின் இலக்கணமாகப் பார்க்கிறார்கள்.

எனவேதான் ஆணின் தலையில் கல்லைப் போட்டோ, மின்சாரம் பாய்ச்சியோ, பெற்ற குழந்தையையே கொன்று பிரிட்ஜில் வைக்கும்போதோ இந்தச் சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்குவதாக அச்செய்தி மாறிவிடுகிறது’’ என்கிற இவர் இதுபோன்ற குற்றங்கள் நேராமல் தடுக்க சில வழிகளை முன்வைக்கிறார்:

1. அந்நியர்களுடன் தொலைபேசியிலோ இணைய அரட்டையிலோ தேவையின்றி பேசுவதைத் தவிர்க்கவும்.
2. திருமணத்திற்கு அப்பாற்பட்ட ரகசிய உறவுகளைத் தவிர்க்கவேண்டும்.
3. நம்மோடு பழகுகிற நபர் தவறானவர் என்று நமது உள்ளுணர்வு சொல்கிற அந்தத் தருணத்திலேயே அந்த நட்பை விட்டுவிட வேண்டும்.
4. கூடா நட்பும் இலக்கணம் மீறிய உறவுகளும் நமது குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் ஏற்றதல்ல என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.
5. கணவர் கொடுமைகள் செய்தாலோ வேற்று நபரின் தொல்லைகள் இருந்தாலோ உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்திலோ பெரியவர்களிடமோ புகார் செய்யவேண்டும்
6. மனக்குழப்பங்கள் இருந்தால் நல்ல மனநல ஆலோசகரை நாடவேண்டும்.

இந்த இதழுக்காக எழுத்தாளர் பிரபஞ்சனை நேர்காணல் செய்தபோது அவர் சமகாலப் பெண்களைப் பற்றிக் கூறிய கருத்து ஒன்றை இங்கு பதிவு செய்யமுடியும்.

‘‘எல்லா காலத்திலும் எல்லா மட்டத்திலும் கஷ்டப்படுற ஜீவனாகப் பெண்கள் இருப்பதைப் பார்த்து நான் பாதிக்கப்பட்டுவந்தவன். ஆனால் இப்போதைய பெண்கள் ஆணுடன் சமதாக்குதலுக்கு தயாராகிவிட்டதைப் பார்க்கிறேன். ஒரு கணவன் அடித்தால் திரும்ப அடிக்கும் நெஞ்சுரத்தைப் பெற்றுள்ளனர். இதை நான் முன்னேற்றமாகவே பார்க்கிறேன். 2000 வருட துன்பத்துக்குப் பிறகு அவளுக்கு இந்த யுக்தி கிடைத்துள்ளது. அவள் துன்பவிடுதலையின் புள்ளியில் நிற்கிறாள்.

சொந்தமாக தனியாக காலூன்றி வாழ்வதற்கான சூழலும் உருவாகிவிட்டது. இதற்கு வணிக சினிமாவும், வெகுஜனக் கலைகளும் முக்கிய காரணம். தனிமனுஷி மோசமாக நினைக்கத்தக்கவள் இல்லை என்பதை எப்படியோ மக்களுக்குப் புரியவைத்திருக்கின்றன. தனி மனுஷியாக வாழ்வது அவமானத் துக் குரியதல்ல என்ற புரிதல் சமூகத்தில் மெதுவாக பரவி வருகிறது.’’

உண்மைதான். ஒட்டுமொத்தமான தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் அடிமைகளாகவே ஒடுக்கி வைக்கப்பட்ட காலம் மெல்ல  மாறிவருகிறது. இந்த மாறுதலின்போது நடக்கும் பிறழ்வுகளாகவும் கணவன்மார்களைப் பெண்கள் கொலைசெய்வதைப் பார்க்கலாம்.

தாய்வழிச் சமூகமாக இருந்த மனித சமூகம் பின்னர் மெல்ல தந்தைவழிச் சமூகமாக மாறி பெண்களை அடிமைப்படுத்தியது என்கிறது மானுடவியல். மீண்டும் வரலாறு  திரும்பத் தொடங்கி யிருக்கிறது என்ற முடிவுக்கு இந்தச் சம்பவங்களை வைத்து நாம் வந்தால் முட்டாள் தனமாகவே இருக்கும். ஏனெனில் இன்னும் சமூகத்தில் பெண்களின் விலங்குகள் முழுமையாக  உடைய வில்லை என்பதுதான் உண்மை.

இந்தக் கட்டுரையை முடிக்கும் நேரத்தில் பல விலங்கினங்கள், பூச்சி இனங்களில் பெண்ணே சக்தி வாய்ந்ததாகவும் உறவுக்குப் பிறகு ஆண் பூச்சியைத் தின்றுவிடும் வெட்டுக்கிளியைப் பற்றியும் கூறி மிரட்சியேற்படுத்துகிறார் ஒரு சகா.

நன்றி; த.ச. இந்தியன்

 

 
பின்னூட்டமொன்றை இடுக

Posted by மேல் திசெம்பர் 4, 2011 in கட்டுரை

 

குறிச்சொற்கள்: , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: