RSS

வெறி

25 மார்ச்

“டாகடர், நான் ரகு பேசுகிறேன்…நீங்க இப்பவே என் வீட்டுக்கு வரமுடியுமா? அவசரம், ப்ளீஸ்!’

‘என்ன ரகு ஏதாவது எமர்ஜென்சியா? உனக்கு உடம்புக்கு ஒண்ணும் இல்லையே?!’

‘எனக்கு ஒண்ணும் இல்லை டாக்டர்! ஆனா நான் சொன்னா நம்ப மாட்டேன்னீங்களே, அந்த செக்ஸ் வெறி பிடிச்சவ, இப்போ எவன் கூடவோ சல்லாபம் பண்ணிட்டு இருக்கா. இப்படி ஒரு கொடுமை என் எதிரிக்குக்கூட ஏற்படக்கீடாது டாக்டர். நான் போன மாசமே உங்ககிட்ட சொன்னேன்… ரேகா ஒரு நிம்போமேனியாக்கா, செக்ஸ் வெறி பிடிச்சவளா மாறிட்டு வர்றாள்னு. நீங்கதான் நம்பாம, எனக்கு ஏதோ மனப்பிராந்தி அது இதுன்னீங்க. இப்ப நீங்களே நேர்ல வந்து, உங்க கண்ணால அந்த அசிங்கத்தப் பாருங்க, உண்மை புரியும்!’’

‘டென்ஷன் ஆகாதே! என்ன நடந்தது, பொறுமையா சொல்லு ரகு!’

‘நான் வழக்கமா ஏழு மணிக்குதான் ஆபீஸ்லேர்ந்து வருவேன், டாக்டர். ரேகாவும் ஏறக்குறைய அதே நேரத்துலதான் அவ ஆபீஸ்லேர்ந்து வருவா. எங்க ரெண்டு பேர் கிட்டயும் வீட்டுச்சாவி தனித்தனியா இருக்கு. இன்னிக்கு தலைவலின்னு மத்தியானம் லீவு போட்டுட்டு வீட்டுக்கி வந்தேன். வாசல்ல ரேகாவோட ஸ்கூட்டி நின்னுட்டு இருக்கு. இவ இந்த நேரத்துல இங்க வந்து என்ன பண்றானு, பின் பக்கமா போய் ஜன்னலை லேசாகத் திறந்து பார்த்தேன். எங்க பெட்ரூம்ல, ரேகா யாரையோ கட்டிப்பிடிச்சுட்டுக் கிடக்கா டாக்டர்!’

மனோதத்துவ நிபுனர் டாக்டர் சேதுவுக்கு குட்டிக்கொண்டு வந்தது. ‘என்ன மனிதன் இவன்! தன் மனைவி சோரம் போவதை இப்படியா அடுத்தவரைக் கூப்பிட்டுக் காண்பிப்பான்!’

ஆனால், இப்படி ஒரு அதிர்ச்சியான விஷயத்தை தனியே எதிர்கொள்ள நேரும் எவனும், அடுத்து என்ன செய்வான் என்று சொல்ல முடியாது. விபரீதமாக ஏதாவது செய்து தொலைப்பதற்குள், தான் அங்கே போய்த்தான் ஆக வேண்டும்!

‘இதோ உடனே கிளம்பி வர்றேன்!’

ரகுவுக்கு ஆபீஸில் வேலைப்பளு அதிகம். எக்கச்சக்கமான டென்ஷன். அதனால் மன அழுத்தம் ஏற்பட்டு, அதன் விளைவாக தாம்பத்தியத்தில் ஈடுபடமுடியாமல் போய்விட்டது. கூடவே குழப்பம் மற்றும் சந்தேக எண்ணங்கள் தலைதூக்கி விட்டன.

அது அவனுக்கே தெரிந்துதான் வாரம் ஒரு முறை சைக்கோதெரபிக்காக சேதுவிடம் வருகிறான். அவர் அவனுடைய டாக்டர் மட்டுமல்ல, நெடுநாளைய குடும்ப நண்பரும் கூட!

‘ஒரு வேளை, தனது கணவனிடமிருந்து இல்லறசுகம் கிடைக்காமல்தான், ரேகா வேறு வழியைத் தேடிக்கொண்டாளோ?’ என்று ஒரு யோசனை சேதுவின் மனதுக்குள் ஓடியது.

டாக்டரின் காரைப் பார்த்ததுமே, தெருமுனையில் இருந்த காபிக்கடையில் இருந்து ரகு ஓடி வந்து வழி மறித்தான்.

‘காரை இங்கேயே நிறுத்திட்டு, நடந்து போயிடலாம், டாக்டர்!’

ஒரு தர்மசங்கடமான மௌனத்தில், இருவரும் ரகுவின் வீட்டை நோக்கி நடந்தார்கள். வசல் கேட்டின் கொக்கியை ஓசைப்படாமல் நீக்கி, பூனையைப் போல் மெதுவாக நடந்து, பின்பக்கம் சென்று, படுக்கையறை ஜன்னலை அடைந்தார்கள். லேசாகத் திறந்திருந்த ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார் சேது.

ரகு சொன்னது சரிதான்!

‘அது உன் மனைவி ரேகாதான்னு எப்படிச் சொல்றே?’

‘என்ன டாக்டர் என் மனைவியை எனக்குத் தெரியாதா? அவ கட்டியிருக்கிற புடவை, இந்தமுறை தீபாவளிக்கு நான் வாங்கிக்கொடுத்தது!’

காதல் காட்சியின் கிளைமாக்ஸ் அரங்கேறும் முன் சேது, ரகுவை இழுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தார்.

‘பார்த்தீங்களா டாக்டர், அவ நிம்போமேனியாதானே? செக்ஸ் வெறி பிடிச்ச மிருகம்

தானே? நான் இப்போ என்ன செய்யட்டும் டாக்டர்? தடால்னு கதவைத் திறந்து உள்ளே போய், அந்த ரெண்டு பேரையும் வெட்டிக் கொன்னுட்டு, நானும் தற்கொலை செஞ்சுக்கட்டுமா?…’ மேலே பேசமுடியாமல் வெடித்து அழுதான் ரகு.

அவன் தோளில் தட்டிச் சமாதானப்படுத்தி தெருமுனை காபிக்கடைக்கு அழைத்து வந்தார் சேது.

‘பொறுமையா இரு ரகு. எமோஷனலாகாதே! அது சரி, ரேகாகூட இருக்கிறது யாருனு தெரியுமா?!’

‘தெரியலையே டாக்டர்! அவளோட ஒண்ணா வேலை பார்க்கிறவன் எவனாவதுதான் இருக்கணும். நான் அந்த ஆளை குறை சொல்ல மாட்டேன். இவதான் சரியில்லே. கொஞ்சம் பார்க்க ஸ்மார்ட்டான ஆம்பளையா இருந்தா ஓவரா இழையறா, வெளியே பார்ட்டிகள்ல அழகான இளைஞர்களைப் பார்த்தா ரொம்பவே வழியறா. நான் நிச்சயமா சொல்றேன், அவ நிம்போமேனியாதான்!’

சேது விரக்தியாகச் சிரித்தார்

‘சும்மா திருபித் திருப்பி அதையே சொல்லாதே ரகு! ‘நிம்போமேனியா’ங்கிற வார்த்தையையே மனோதத்துவ அகராதியிலிருந்து எடுத்துட்டாங்க, தெரியுமா உனக்கு? மஞ்சள் பத்திரிகை படிக்கிறவங்களும், ப்ளூ ஃபில்ம் பார்க்கிறவங்களும்தான் அந்த வார்த்தையை அடிக்கடி உபயோகிக்கிறாங்க, மத்தபடி மனவியல் நிபுணர்கள் அப்படி ஒரு மனநோய் இருக்கிறதாகவே நினைக்கறதில்ல!’’

‘என்ன டாக்டர் சொல்றீங்க?!’

‘ஆமாம் ரகு. அதிகமான செக்ஸ் ஆசை உள்ள பொம்பளைங்கள ‘நிம்ப்’னு சொல்ல்லாம்னா, முதல்ல எது அளவான செக்ஸ் ஆசை, எது அதிகமான செக்ஸ் ஆசைனு வரையறுக்கணமில்லையா? உண்மையில் செக்ஸ் உணர்வை அப்படி வரையறுக்கவே முடியாதுன்னு மனவியல் சாஸ்திரம் சொல்லுது!’

‘அப்போ, நாம இங்கே பார்த்த காட்சிக்கு என்ன அர்த்தம்?’

‘ரகு, நிஜத்தை எதிர்நோக்கக் கத்துக்கணும். உன்னால் அவளுக்கு தாம்பத்திய சுகம் கொடுக்க முடியலை. அவளும் பாவம், எத்தனை நாளைக்குத்தான் காத்திருப்பா! ஏதோ, தன் வழியில் சுகத்தைத் தேடிக்கிட்டா. அவ்வளவுதான்! ரேகா ஒரு சூழ்நிலைக் கைதி புரிஞ்சுக்க!’

‘ இருந்தாலும், இது அவ எனக்குச் செய்யுற துரோகம் இல்லையா டாக்டர்?!’

‘ரேகா செஞ்சது சரின்னு நான் சொல்ல வரல!’ சந்தர்ப்பவசத்துல சாதாரணமா நடக்கிற தப்புதான்னு சொல்றேன். ராத்திரி, நேரிடையா ரேகாகிட்ட இதப் பத்திப் பேசு. ‘உன்னை மன்னிச்சுட்டேன். நடந்தது நடந்ததா இருக்கட்டும். இனிமே இது மாதிரி பண்ணாதே!’ சொல்லு. அல்லது நீயா முன்வந்து அவளுக்கு விவாகரத்து கொடு. அவளை அவ வழியில போக விடு. உனக்கு இன்னும் அறு மாசத்துல ட்ரீட்மெண்ட் முடிஞ்சதும், நீ திரும்பவும் தாம்பத்தியத்துல ஈடுபடலாம்கிற நிலைமை வந்ததும், நீ வேற ஒரு பெண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்க. உனக்கு இப்ப முப்பத்து நாலு வயசுதானே ஆகுது.

டாக்டர் சேது போன பின்பு, ரகு கால் போன போக்கில் நடந்து போய், அருகில் இருந்த ஒரு பார்க் பெஞ்சில் உட்கார்ந்து, நெடுநேரம் யோசித்தான். மனம் கொஞ்சம் தெளிவானது.

முதல் கட்டமாக, ரேகாவை மனதார மன்னித்தான். மனம் லேசானது. வீட்டுக்கு கிளம்பினான். வீட்டில் மதுமிதாவும் அவள் கணவனும் அவனது வருகைக்காக் காத்துக்கொண்டு இருந்தனர்.

மதுமிதா ரேகாவின் தங்கை.

‘என்ன ரகு, மதுவையும் கிரியையும் விருந்துக்கு கூப்பிட்டதை மறந்துட்டீங்களா? கிரி நாளைக்கு துபாய் கிளம்பறார். காலைல அஞ்சு மணிக்கு ஃப்ளைட்! ரெண்டு பேரும் ரொம்ப நேரமா உங்களுக்காக காத்துகிட்டிருக்காங்க. உங்க ஆபீஸுக்கு போன் பண்ணிப்பார்த்தேன். அப்பவே கிளம்பிட்டதாகச் சொன்னாங்க. எங்கே போயிருந்தீங்க ரகு?’

வெறுப்பு வழியும் ஒரு சிரிப்பை ரேகாவின் கேள்விக்கு பதிலாக்கிவிட்டு, வந்தவர்களை சம்பிரதாயமாக வரவேற்றான் ரகு. ரேகா ஏற்பாடு செய்திருந்த தடபுடல் விருந்திலோ, அவள் அந்தப் புதுமனைத் தம்பதிகளை அடித்த கிண்டலிலோ அவன் மட்டும் சிறிதும் ஒட்டவில்லை. அவர்கள் போன பின்பு, ரேகாவிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்பதிலேயே அவன் மனம் குறியாக இருந்தது.

மதுமிதா ரேகாவிடம் விடைபெறும் போது, ரகு வாசற்கதவுக்கு அருகில் நின்று கொண்டிருந்தான்.

மது கண்கள் கசிய, ரேகாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நெகிழ்ச்சியாகப் பேசினாள்…. ‘ரொம்ப தேங்க்ஸ் அக்கா! நீ செஞ்ச உதவியை நான் என்னிக்கும் மறக்க மாட்டேன்!’

ஒரு சாதாரண விருந்துக்கு எதற்காக இப்படிக் கண்ணீரும் கம்பலையுமாக அவள் நன்றி சொல்ல வேண்டும்? ரகுவுக்குப் புரியவில்லை.

அவர்கள் போனதும், ரேகாவிடம் தன் சந்தேகத்தைக் கேட்டான்.

‘அதை விடுங்க ரகு, பெரிசா ஒண்ணுமில்ல!’

‘முடியாது. என்னன்னு சொல்லு!’

‘ஐயே, அதெல்லாம் பொம்பளைங்க சமாசாரம். உங்களுக்கு எதுக்கு?’

‘இல்லை. எனக்கு அது என்னன்னு இப்பவே தெரிஞ்சாகணும். நீ எதையோ என்கிட்டேர்ந்து மறைக்கப் பார்க்கிறே!’

‘ஐயே, விடமாட்டீங்களே! கிரிக்கும் மதுவுக்கும் கல்யாணமாகி பதினஞ்சு நாள்தானே ஆகுது! கிரி நாளை காலைல துபாய் போறாரு. அப்புறம் ஒரு வருஷம் கழிச்சுதான் பார்க்க முடியும். இப்படி கல்யாணமான புதுசுலேயே அவங்க பிரியறது கொடுமை இல்லியா? அதைவிடக் கொடுமை என்னன்னா, மதுவோட மாமியார் வீட்டுல நிறைய உறவுக்காருங்க டேரா அடிச்சிருக்கிறதால, புருஷனும் பொண்டாட்டியும் தனியா இருக்கச் சந்தர்ப்பமே கிடைக்கலியாம். மது என்கிட்ட போன்ல சொல்லி அழுதா.

நான் அவங்களை நம்ம வீட்டுல வந்து இருக்கச் சொன்னேன். நாங்க ரெண்டு பேரும் சாயந்திரம் ஆறு மணிக்கு மேலதான் ஆபீஸ்லேர்ந்து வருவோம். அதுவரைக்கும் நீங்க அங்கே போய் இருந்துக்குங்க. இப்ப உடனே கிளம்பி நேரே என் ஆபீஸுக்கு வந்தா, வீட்டுச் சாவி தர்றேன்’னு சொன்னேன். ‘வேணாம்டி! உன் ஹஸ்பெண்ட் ஏதாவது தப்பா நினைச்சுக்கப் போறார்!’னு தயங்கினா. சேச்சே! என் ரகு மாதிரி ஒரு ‘ஜெம்’மை இந்த உலகத்துலேயே பார்க்க முடியாது. இதைக்கேள்விப்பட்டார்னா, நல்ல காரியம் பண்ணினேனு என்னை பாராட்டத்தான் செய்வார்’னு சொல்லி, வற்புறுத்தி அவகிட்ட சாவியைக் கொடுத்தேன். அவங்க காலையிலேயே வீட்டுக்கு வந்துட்டாங்க. ஏழு மணிக்கு நான் வர்ற வரைக்கும் இங்கே அவங்க ராஜ்ஜியம்தான். ஏன் ரகு, உங்களுக்கு இதுல ஒண்ணும் கோபமில்லையே?!

ரகுவிற்கு படபடவென்று வந்தது. இது இருக்கட்டும் ரேகா, நீ ஆபீஸ்லேர்ந்து ஸ்கூட்டிலதானே வந்தே?’

‘இல்ல ரகு! கிரியும், மதுவும் என்னை ஆபீஸ்ல வந்து பார்த்தபோது, அவங்க்கிட்ட ஸ்கூட்டியைக் கொடுத்து அனுப்பிட்டேன். நான் ஆட்டோவிலதான் வந்தேன்.’

‘மது இங்கே வந்து உன் புடவைல எதையாவது எடுத்து கட்டிக்கிட்டாளா?’

‘இருக்கலாம். மதுவும், கிரியும் காலைல ஏதோ கல்யாணத்துக்குப் போயிருந்தாங்க போல. மது என் ஆபீஸுக்கு வரும்போது பட்டுப்புடவைல இருந்தா. அதனால வீட்டுக்கு வந்ததும் என் புடவை ஏதாவது எடுத்து கட்டிகிட்டு இருப்பா. ஏன் இப்படித் துருவித்துருவி கேட்கிறீங்க? உங்களைக் கேட்காம அவளுக்கு இங்கே இடம் கொடுத்தது உங்களுக்குப் பிடிக்கலையா? தாபத்துல தவிக்கிற தம்பதிக்கு ஹெல்ப் பண்ணினா, அவங்க மனசார வாழ்த்தறதுலேயே உங்க குறை சீக்கிரம் குணமாகிடும்ல? அதனால, அவங்களுக்கு ஹெல்ப் பண்ணினதுல என் சுயநலமும் கலந்திருக்கு ரகு!’

‘ரேகா, ரேகா… என்னை மன்னிச்சிரு ரேகா!’ என்றபடி தன் மார்பில் சாய்ந்து விம்மி அழுத கணவனைத் தேற்றத் தெரியாமல் நின்றிருந்தாள் ரேகா!.

—- வரலொட்டி ரெங்கசாமி

நன்றி : ஆ.வி.

(மறக்காம ஓட்டு போட்டு ஆதரவு கொடுங்க!)

 
8 பின்னூட்டங்கள்

Posted by மேல் மார்ச் 25, 2011 in சிறுகதை

 

குறிச்சொற்கள்: ,

8 responses to “வெறி

 1. rajesh

  மார்ச் 28, 2011 at 7:03 முப

  a wonerfull artical

   
 2. Mariah

  மார்ச் 28, 2011 at 5:52 பிப

  Excellent, keep on writting

   
 3. உயிர்த்தோழி.

  மார்ச் 28, 2011 at 6:06 பிப

  ராஜேஷ் மற்றும் மரியா அவர்களே வருகைக்கு நன்றி!

   
 4. வரலொட்டி ரெங்கசாமி

  மே 24, 2011 at 6:06 பிப

  உயிர்த்தோழி,
  பலவருடங்களுக்கு முன்னால் நான் எழுதி ஆனந்தவிகடனில் வெளிவந்த கதையை இங்கு இட்டதற்கு நன்றி.
  கதையை இன்னும் கொஞ்சம் தைரியமாக எழுத ஆசை இருந்தது. என்றாலும் சில கட்டுப்பாடுகளுக்குள் என்னைச் சிறைப்படுத்திக் கொண்டு எழுதினேன்.
  அத்தகையக் கட்டுப்பாடுகள் இல்லாமல் எழுதிய கதை ஒன்று இருக்கிறது.
  தைரியமாகக் கதைகளை வெளியிடும் விகடனே “இது கொஞ்சம் அதிகம்” என்று ஒதுக்கி வைத்த கதை இருக்கிறது. அதைத் தந்தால் போடுவீர்களா?
  வரலொட்டி ரெங்கசாமி

   
 5. உயிர்த்தோழி.

  மே 24, 2011 at 8:18 பிப

  வருகைக்கு நன்றி வரலொட்டி ரெங்கசாமி அவர்களே!

  நிச்சயமாக அனுப்பிவையுங்கள். வெளியிடுவதற்கு எந்த தயக்கமும் இல்லை. உங்கள் மின்னஞ்சல் முகவரியைத்தாருங்கள். என் முகவரியை அனுப்புகிறேன்.

   
 6. Neha

  செப்ரெம்பர் 17, 2012 at 4:20 பிப

  good story…. i like it…………..

   
 7. david

  ஒக்ரோபர் 23, 2013 at 7:56 முப

  such a gud one i liked it

   
 8. magesh

  மே 7, 2014 at 1:38 பிப

  இந்த site எனக்கு ரொம்ப பிடித்துள்ளது, நல்ல ஆழமன கருத்தான, பயனுள்ள தகவல்கள். நீங்கள் இந்த பாதையில் தொடர்ந்து செல்ல என்னுடைய வாழ்த்துக்கள் தோழி ……………..

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: