RSS

கானல் வரி…………. ‘தமிழ்நதி’யின் புத்தகம் பற்றிய அலசல்

02 அக்


வாசிப்பு அனுபவம் என்பது அலாதியானது. புத்தகத்தை கையில் எடுத்துவிட்டால் அதை முடிக்காமல் கீழே வைத்ததில்லை என்ற கடந்த காலத்தை நினைத்தால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.  தற்போதைய இன்டர்நெட், மொபைல் ஃபோன், கணக்கற்ற தொலைக்காட்சி சேனல்கள் என எதுவுமே இல்லாத அந்த நாட்களின் ஒரே பொழுதுபோக்கு வாசிப்பு மட்டுமே. நூலகத்திற்குச் சென்றால்கூட நேரத்தோடு வீட்டிற்கு வந்ததே இல்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு எழுத்தளர்களைப் படித்த அந்த சுகானுபவங்கள் மீண்டும் வரவே வராது என்றுதான் நினைக்கிறேன். இணைய உலகின் பரந்துபட்ட அறிமுகம் கிடைத்தபின் மீண்டும் வாசிப்பனுபவம் தொடங்கிவிட்டாலும், புத்தக வாசிப்பு என்பது முடியாத ஒன்றாகிவிட்டது.

இலங்கை எழுத்தாளர்கள் எவருடைய நூலையும் இதுவரை படிக்க சந்தர்பம் கிடைத்ததில்லை. ஒரு புதுமாதிரியான எழுத்து நடை. வழக்கத்திலில்லாத (தமிழ்நாட்டில்) சொற்பிரயோகங்கள் என ஆரம்பத்தில் இப்புத்தகத்தை படிக்க முனைந்தபோது மெதுவாகவே வாசிக்க முடிந்தது. போகப்போக மாதங்கியின் மனசை படிக்கத்துவங்கியதும் மற்றெல்லாம் மறந்து போய்விடுவது ஆச்சர்யம்தான்.

‘தமிழ்நதி’யைக் கூட ஆனந்தவிகடனிலோ/குமுதத்திலோ பேட்டி கொடுத்திருந்த போது படித்ததுதான். அவரது வலைதளத்தைக்கூட சமீப காலமாகத்தான் படிக்கத் துவங்கினேன். தற்செயலாய் படிக்க நேர்ந்த இப்புத்தகத்தைப் பற்றி ஏனோ அப்போதே எழுதவேண்டும் என்று தோன்றியது. பல காரணங்களால் முடியவில்லை. ‘காதல்வலிகளை’ கானல் வரிகளாக்கியிருக்கிறார். காதல் என்பது சந்தோஷமட்டுமில்லை, வேதனையும் கூட என்பது நிறையபேருக்குப் புரிவதில்லை. பிரிக்கமுடியாத காதல் உறவுகள் கூட பிணக்கில்லாமல் இருந்ததில்லை. ஊடலும் கூடலுமான இந்த வாழ்க்கையின் சுக, துக்கங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளமுடிவதில்லை.

நான்கைந்து வருடங்களுக்கு முன்பு கடிதப்போக்குவரத்து மிக அவசியமானதாக இருந்த காலகட்டத்தில் மனக்குமுறல்களையும், ஆற்றாமையையும் வெளிப்படுத்த வடிகாலாக இருந்த ஒரே விஷயம் கடிதம் எழுதுவதுதான். ஆனால் இப்போதோ எல்லாவற்றையும் கொட்டித்தீர்க்க கைப்பேசி வந்துவிட்டது. இருப்பினும் காதலில்தான் பேசுவதற்கு காலம் போதாத சாபக்கேடு இருக்கிறதே!. கணவன் மனைவிக்குள்ளே கூட பேச விஷயமே இருக்காது. எத்தனை பேசினாலும், பகிர்ந்து கொண்டாலும் மனசுக்குள்ளே புதைத்துக்கொண்டவைதான் அதிகமாக இருக்கும். விருப்பு-வெறுப்புகளுக்கு மத்தியில் விட்டுக்கொடுத்துதான் வாழ்க்கையை ஓட்ட வேண்டியிருக்கிறது.

அரசியல் கட்சியானாலும் சரி, அது அடுப்படியானாலும் சரி தலைவருக்குப் பிடித்ததைச் செய்யும் அடிமைதான் நல்ல விசுவாசி. மாற்றுக் கருத்துக்கும், மனசிலுள்ளவற்றைச் சொல்வதற்கும் மரியாதை இல்லாத இடங்களில் என்னத்தை கூறிவிடமுடியும்?

கானல்வரியின் நாயகி மாதவியின் மனக்குமுறல்கள் உயிரோட்டமாக, மிக இயல்பாக, பாசாங்கற்ற ஒரு பெண்ணின் எண்ணங்களாகவே இருக்கின்றன. மாதவி திருமணம் ஆனவள். கணவனோ அன்பானவன், பெருந்தன்மையுடையவன் எல்லாம் சரி. அவனிடத்தில் எது இல்லை என்று அவள் மௌலியைத் தேடினாள்? பின் ஏன் விலக்கினாள்?…………… என்னடா ‘இது நம் கதையைப்போலவே இருக்கிறதே’ என்று நினைத்ததுமே சுவாரசியம் கூடிவிட்டது. படித்து முடித்ததும் இதயம் கனத்துப்போனது உண்மை. விமர்சனமாக இல்லாமல் இதை ஒரு பகிர்வாக எழுதலாமே என்ற எண்ணத்தில் விளைந்ததே இப்பதிவு.

(அடுத்த பதிவில் தொடர்கிறேன்).

அன்புடன்,

உயிர்த்தோழி.

 

குறிச்சொற்கள்: , ,

4 responses to “கானல் வரி…………. ‘தமிழ்நதி’யின் புத்தகம் பற்றிய அலசல்

 1. uma varatharajan

  ஒக்ரோபர் 27, 2010 at 8:55 பிப

  அண்மையில் வெளி வந்த தமிழ்நதியின் ‘கானல் வரி’ ஒரு துணிச்சலான, தீர்க்கமான பார்வை கொண்ட,மொழியழகு மிக்க நாவல் என்பதில் ஐயமில்லை. அந்த நாவல் சம்பந்தமான விமர்சகர்களின் மௌனம் எனக்கு ஆச்சரியமூட்டுகின்றது.
  இதைப் பற்றிய விமர்சனக் கட்டுரை ஒன்றை எழுத நான் ஆவல் கொண்டிருந்தேன்.ஆனால் என்னுடைய ‘மூன்றாம் சிலுவை ‘ நாவலுக்கு தமிழ்நதி எழுதிய விமர்சனத்துடன் இதை இணைத்துப் பார்க்கும் ஓர் அசௌகர்ய நிலைக்கு அவரை இட்டுச் செல்ல விரும்பாததால் சற்றுப் பொறுத்திருக்கின்றேன் .

   
 2. உயிர்த்தோழி.

  ஒக்ரோபர் 28, 2010 at 6:24 முப

  உண்மைதான் உமா வரதராஜன் அவர்களே! ஒரு புதுமாதிரியான நடையுடன் துணிச்சலாக எழுதப்பட்டிருந்தது அந்த நாவல். அதனால்தான் அதைப்பற்றி எழுத விரும்பினேன். தவிரவும் எனக்கு விமர்சனம் எழுதி பழக்கமில்லை. ஏன் நான் எழுத்தாளரே கிடையாது. என் மனதில் பட்டதை எழுதினேன். இன்னும் அதை முடிக்கவே இல்லை. யாரும் ஆர்வம் காட்டுவதாகவும் தெரியவில்லை. பொதுவாகவே மறுமொழி மட்டுறுத்தலை நான் செய்த பிறகு யாரும் வந்து எழுதுவதே இல்லை. என்னுடைய கடிதங்களுக்கான காரசாரமான விமர்சனங்கள் கூட அறவே நின்றுவிட்டது. ஏதோ ஒரு பாலியல் தளத்தை திருட்டுத்தனமாக பார்த்துவிட்டுப்போவதைப்போல வந்து போகிறார்கள் அவ்வளவுதான். வரவேற்போ, விமர்சனங்களோ இல்லாத சூழ்நிலையில் மெனக்கெட்டு டைப் செய்து வெளியிடவேண்டுமா என்ற தீவிர யோசனையிலிருக்கிறேன்.
  தங்களின் கருத்துக்கு நன்றி!

   
 3. tamilnathy

  ஒக்ரோபர் 28, 2010 at 7:29 முப

  நன்றி உமா, விஜி சேகர்

  வந்த சில விமர்சனங்களை எனது வலைத்தளத்தில் தொகுத்துப்போட எண்ணியிருக்கிறேன். அவற்றுள் இரண்டு காரசாரமானது.

   
 4. உயிர்த்தோழி.

  ஒக்ரோபர் 28, 2010 at 10:42 முப

  வருகைக்கு நன்றி தமிழ்நதி அவர்களே! உங்கள் பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: