RSS

மாலதி மைத்ரி


மாலதி மைத்ரி

பெண் என்ற தனிச்சலுகையால் அல்லாது தனித்தன்மையால் தன் வரலாற்றைத் தானே உருவாக்கும் இன்றைய பெண் எழுத்தின் முக்கியமான தொடக்கப் புள்ளி. சில்லறை மரபு மீறல்களையும், கையாலாகாத துக்கங்களையும் மட்டுமே எழுதி வந்த நம் பெண் எழுத்தில் ஆதாரமான தேடல் கொண்ட முதல் எழுத்தாளர் இந்த மாலதி மைத்ரி. அவரின் கருத்து….

பெண் உடல் மீது இந்த சமூகம் நிறைய வரையறைகளை வைத்திருக்கிறது. பெண் புழங்கும் வெளியையும், பார்வைகளையும், கனவுகளையும் கட்டுப்படுத்துகிறது. மதமும், சமுதாயமும் விதிக்கும் கட்டுப்பாடுகளை, வரையறைகளை மீற வேண்டும் என்பதற்க்காகத்தான் பெண் தன் உடலை கொண்டாட வேண்டும் என்கிறேன். பெண் உடல் பரிபூரணமான முழுமையான, சுதந்தரமான ஆதி உடல். அதிலிருந்துதான் எல்லா பிறப்புக்களும் நிகழ்ந்திருக்கின்றன,. என் உடல் மீது யாருடைய அதிகாரமும் விழக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். யாருடைய நிர்பந்தத்துக்கும் என்னால் பணிய முடியாது.
—- மாலதி மைத்ரி.

உயிர்மெய் வலைத்தளத்தில் மாலதி மைத்ரி பற்றி…………….

கவிதாயினி மாலதி மைத்ரி:

கவிதையில் எத்தகைய சொற்கள் இடம் பெறலாம் என்ற கேள்வி, ஆதிகாலம் தொட்டு நம்முன் நிற்கிறது. அகத்துறைப் பாடல்களில் தலைவன்-தலைவி பெயர் சுட்டக் கூடாது என்ற மரபு, இன்றுவரை நீடிக்கிறது, ஆனால், கொச்சைச் சொற்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற நெறிமுறை கைவிடப்பெற்று விட்டது. வேற்று மொழிச் சொற்களைத் தவிர்க்கும் வழக்கம், தொலைந்தே போயிற்று. மங்கல வழக்கு, இடக்கரடக்கல் ஆகிய வற்றைப் பலர் பின்பற்றுவ தில்லை. புதுக்கவிதை தோன்றிய போது அது யாப்பிலிருந்து மட்டும் வெளியேறவில்லை. முந்தைய சிந்தனை, மரபு, வழக்கம், நெறி முறை பலவற்றி லிருந்தும் வெளியேறியது.

இந்த மாற்றத்தைத் தவறு என்று கூற இயலாது. இது, மாபெரும் சமூக மாற்றத்தின் ஓர் அறிகுறி. இந்தச் சமூக மாற்றத்தின் அடையாளமாக, நம் கண் முன் உலவும் சான்றாகத் திகழ்கிறார், மாலதி மைத்ரி (1968). ‘சங்கராபரணி’, ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற இவரது கவிதைத் தொகுப்புகள் இரண்டிலும் முதல் பக்கத்தில் தான் பிறந்த ஆண்டை பெரிய அளவு எண்களில் வெளியிட்டுள் ளார். வயதைச் சொல்வதற்குத் தயங்கும் பெண்களின் மனோ பாவத்தை இவர் முதல் நோக்கி லேயே உடைக்கிறார்.

தமிழ்ப் படைப்புலகைப் பொறுத்தவரை பாலுறுப்பு களின் பெயர்களைப் பயன் படுத்தியோர், மிகக் குறைவு. அப்படியே பயன்படுத்தினாலும் பெண்ணின் மார்பகங்களை. மட்டுமே பலரும் எழுதியுள்ளனர். இடையை வர்ணித்தாலும் அதற்குக் கீழே செல்ல எவரும் துணிந்ததில்ல. இப்போது துணிந்துள்ள சிலருள், ‘யோனி’ என்ற சொல்லை பல முறைகள் பயன்படுத்தியுள்ளவர், மாலதி மைத்ரி.

இது, அதிர்ச்சி மதிப் பீட்டுக்காக என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சொல், அதிர்ச்சி அளிக்கிறது என்பதே சமுதாயத்தின் பலவீனத்தைப் பறைசாற்றவில்லையா? இன்னும் எவ்வளவு காலத்துக்கு இவ்வாறு அதிர்ச்சி அடைவது?

கடந்த சில ஆண்டுகளாக எயிட்ஸ் விழிப்புணர்வு அமைப்புகள், ஒரு மாபெரும் சாதனையைப் படைத்துள்ளன. ஆணுறை, ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு, பால்வினை நோய்… போன்ற சொற்களைத் தொடர்ச்சியான பிரச்சாரத்தின் மூலம் புழக்கத்துக்கு அவை கொண்டுவந்துள்ளன. பள்ளி களில் பாலியல் கல்வி வழங்க முயற்சி தொடங்கப் பெற்றுள்ளது. இந்த நிலையில் ஒரு சொல்லைக் கண்டு மிரட்சி அடைவது, வளரும் சமுதாயத் திற்கு அழகில்லை.

எந்த ஒரு சொல்லும் உரிய இடத்தில் பொருத்தமாகக் கையாளப்பெற்றுள்ளதா என நாம் பரிசோதித்துக்கொள்ள லாம். பொருத்தமற்ற இடத்தில் திணிக்கப்பெற்றிருந்தால் கேள்வி எழுப்பலாம். அதில் நியாயம் உண்டு. அந்தச் சொல்லைப் பயன்படுத்துவதே தவறு என்பதில் நியாயமில்லை.

ஏதோ ஒரு பருவ மாற்றத்தில்
எனது அங்கங்கள் ஒவ்வொன்றும்
மிருகமாகவும் பறவையாகவும் மாறி என்னைவிட்டு விலகிச் செல்லத் தொடங்கின….

யோனி ஒரு பட்டாம் பூச்சியாக
மலைகளில் அலைவதைக் கண்டதாக
காட்டில் விறகு பொறுக்கச் சென்ற
பெண்கள் வந்து கூறக்கேட்டேன்

‘விஸ்வரூபம்’ என்ற இந்தக் கவிதையில் பூமியே ஒரு பெண்ணாக மலர்ந்திருக்கிறது. அதன் பல்வேறு அக-புற மாற்றங்கள் குறியீடுகளாகப் பதிவாகியுள்ளன.

ஔவையின் மகள் நான்
பல காலங்களையும் வெளிகளையும்
பலவித உடல்களினூடாகக் கடந்து சென்று கொண்டிருக்கும் ஔவையின்
மகள் நான்.

ஔவையின் யோனி விரிந்து
இரண்டாயிரமாண்டு கால வெளியையும் மொழி வெளியையும் உள்வாங்கி
என்னைப் பிதுக்கித்தள்ள
என் நகத்தாலேயே தொப்பூழ்க் கொடியைக் கிள்ளித் துண்டித்துவிட்டு
குருதியீரம் காயாமல் நடந்துபோகிறேன்.

இங்கும் ‘யோனி’ என்ற சொல், குறியீ டாகவே பயன்படுத்தப்பெற்றுள்ளது. இதற்குப் பதில் ‘கருப்பை’ என்ற சொல்லைக் கையாண்டிருக் கலாம் என்றாலும் சொல்லுகின்ற உணர்வின்- செய்தியின் வேகத்தைக் கூட்ட, இப்படி நேரடி யாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

ஊரின் அனைத்து வீடுகளும்
நடப்பட்ட பெண்களென நிற்கின்றன
சாளரங்கள் கண்களாகவும் வாசல் யோனியாகவும்
யாரோ ஒரு ஆணிற்காக
ஆயுள் முழுவதும் காத்துக் கிடக்கின்றன
வயதுக்கேற்றபடித் தம் உறவுகளுக்காக….
காலத்தை ஆளும் பெண்கள் வீடாவதில்லை.

ஆண் எப்படி இருந்தாலும் பெண் எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவனைப் பாதுகாத்து வருகிறாள். இதை எதிர்ப்பதே இக்கவிதையின் அடிப்படையாக உள்ளது. எனினும் இதில் ஏராளமான முரண்களும் கேள்விகளும் குழப்பங் களும் நிறைந்துள்ளன. ‘வாசல் யோனியாக’ என்ற இரு சொற்களால் கவிதை, மிகச் சிக்கலாகி விட்டது. அவற்றிலிருந்து அலை அலையாக எழும் கேள்விகளுக்குக் கவிதைக்குள் விடை இல்லை.

பாலியல் சொற்களில் மரபை மீறியது போலவே இடக்கரடக்கலையும் இவர் பொருட் படுத்தவில்லை. ‘மலம் கழித்தல்’ எனச் சொல்லாமல். ‘வெளிக்குப் போதல்’, . ‘இரண்டுக்குப் போதல்’. எனச் சொல்வது முன்னோர் வழக்கு. ஆனால், மாலதி, இதை மீறியுள்ளார்.

‘அத்தையுடன் ஆற்றுக்குக் காலையில்
மலம் கழிக்கப் போகையில்’ என்றும்

‘அரவமற்ற புற்றருகில்
தங்கையுடன் மலம் கழிக்க’ என்றும் வெளிப் படையாக எழுதியுள்ளார். ‘காலைக் கடன்’ என்ற நல்ல சொல் இதற்கு இருக்கிறதே!

சொற்பயன் பாட்டில்-வெளிப்பாட்டில் சில குறைகள் இருப்பினும் மாலதி மைத்ரியின் கவித்துவம், பிரமாதமாக ஒளி வீசுகிறது. பிரமிக்க வைக்கிறது.

நீருக்கடியில் கிடக்கும் ஒவியம் போல்
அசைந்து கொண்டிருந்தது தூரத்தில் வீடு என்றும்

என் ஆன்மாவைப் போன்ற
கறுத்த கசந்த தேநீரைக் குடித்துக்
கொண்டிருக்கிறேன் என்றும்

மண்ணில் பதிந்த உடைந்த கண்ணாடியாகக்
கிடந்தது கோடை ஆறு என்றும்

தோல் பேரீச்சையாய் ஒடுங்கி என்றும்
வார்த்தைகள் உரசி
பற்றும் மொழிக்காடு என்றும்

நாய் தலைக்குள் சிக்கி
பானை தவிக்கிறது என்றும்

நதி, கலைந்த கருவெனப் பிசுபிசுத்துக் கிடக்க என்றும்

ஒளிப் பருந்து
உறக்கத்தைக் கோழிக்குஞ்சென
ல்விக்கொள்கிறது என்றும்

வரிசை தப்பிய எறும்பு ஒன்று….
தலைதூக்கிப் பார்த்து
என்னைப் போலவே சிரிக்கிறது
வாயிலிருந்து சிறு தானியத்தைத் தவறவிட்டு என்றும்

எதிரே கடல் அடர்நீலத்தில்
குழந்தையின் கையில் கிடைத்த
தண்ணீர்க் குவளையென
தளும்பிக் கொண்டிருக்கிறது என்றும்

ஒரு மீன் குஞ்சு
துள்ளி எழுந்து நழுவுகிறது
அந்தரத்தில் என்றும்

அற்புதமான கவிதைகளை மின்னல் தெறிப் புடன் படைத்துள்ளார்.

மாலதி மைத்ரியின் கவிதைகளில் இயற்கை, பேராட்சி செய்கிறது. தன்னை இயற்கையின் கூறுகளாக, தானே இயற்கையாக, பிரபஞ்சத்தின் செல்ல மகளாகத் தன்னை நினைக்கிறார். இவரின் உருவகங்களில் விரியும் பிரம்மாண்டம், சுவை மிகுந்த கவியாற்றலுடன் மிளிர்கின்றது.

புதுவையில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றும் இவர், சங்கராபரணி ஆற்றங்கரையில் பிறந்தவர். ‘கிரணம்’ பதிப்பகத்தின் பதிப்பாளர். பெண் விடுதலைக்குத் தொடர்ந்து குரலெழுப்பி வருகிறார்.

கவித்துவமான ஒரு வரி
மற்ற எல்லாவற்றையும் மறக்கடித்துவிடுகிறது
தெய்வம்போலத் திடீரென மழை கொட்டுகிறது

என்கிறார், மாலதி மைத்ரி.

இந்த மழைநீரை அவசியம் சேமிக்க வேண்டும்.
கவிதாயிணி மாலதி மைத்ரி

———————————————

இன்னும் இவரது கவிதைகள் சில எங்கெங்கோ படித்து சேகரித்த எனது ஆவணக்க கோப்பிலிருந்து

காதல் கடிதம்

ஆண்டவன் துணை
அன்புள்ள பானுவுக்கு மாமா எழுதிக் கொள்வது
பணம் அனுப்பியது கிடைத்ததா
ஊதாரித்தனமாக செலவு செய்யாதே
கணக்கு எழுதிவை
தின்னு அழிக்காதே
வெள்ளை பூண்டு வெங்காயம்
மசாலா கறிசேத்துக்காதே
எல்லாம் உன் நன்மைக்குத்தான்
சினிமா கடைத் தெருன்னு சுத்தாதே
கீழ்வீட்டு அக்கா துணையுடன் வெளியே போவனும்
படியை விட்டு இறங்கும்போது
முந்தானையை இழுத்து போத்திக்கனும்
உடம்பைக் கொற நீ கேட்ட வளையலை
அடுத்த மாதம் கொடுத்து அனுப்புகிறேன்
என் மகள் மகாலஷ்மி அமெரிக்கா போவதற்கு
ஏற்பாடும் பணமும் தயார் செஞ்சிக்கிட்டு
கூடவே கொஞ்சம்கூலி விசா பொறுக்கினு வரேன்
அவள் ஊருக்குப் போயிட்டால்
இங்கேயே செட்டில் ஆகிடலாம்
எனக்கும் 55 ஆவப்போகிறது
இது வரைக்கும் உன் அக்காவுக்கு
துரோகம் செஞ்சது கெடையாது
ஒரு கொறையும் உனக்கு வைக்க மாட்டேன்
வீட்டுவேலைக்கு விசாகேட்டு
என் வாசல் மெதிச்ச ராத்திரி
நான் தூங்கவேயில்லை
யோசிச்சிதான் முடிவு பண்ணினேன்
ஐயோ பச்ச குழந்தை
அங்கபோய் எத்தனை கைமாறுதோ
நம்ம கையோடயே இருந்துட்டு
போகட்டுமேன்னு பிச்சைபோட்டுருக்கேன்
வரமா நெனச்சு காப்பாத்திக்கோ
எல்லாம் உன் நன்மைக்குத்தான் சொல்றேன்
ஒரு ஆறுமாசம் பொறுத்துக்கோ
பல்லாயிரம் மைலுக்கு அப்பால இருக்கன்னு
ஏதாவது துரோகம் பண்ண நெனச்ச
தேவடியா நாயே
ஆள்வச்சி தீத்துக் கட்டிடுவேன் ஜாக்கிரதை
பதில் எழுதவும்
அன்புடன்
மாமா
————————————————-
யானைக்கதை 

முன்பு ஒருநாள் தன் அம்மா சொன்ன
கதைக்குள் இருந்த யானை ஒன்றை
என் அம்மா எனக்குப் பரிசாகக் கொடுத்தாள்
வெகுகாலம் கழித்து வெயில் தாளாமல்
யானையுடன் கடலுக்குச் சென்றேன்
மலைமலையாய் அலையெழுப்பி
நீருக்குள் புதைத்துப் புரட்டி
கிண்டிக் கிளறி வெளியே என்னைத்
தூக்கி எறிந்தது கடல்
கரைந்து மீந்த பாதித் தும்பிக்கையுடன்
கடலும் வானமும் ஒன்றாகக் கலந்து பிளிறியது
சோகத்துடன் திரும்பினேன்
ஊரே கூடி என்னை வேடிக்கைப் பொருளெனப்
பார்க்க
குழம்பிப் பின் திரும்பினேன்
தெருவெல்லாம் அலையலையாய் என் பின்னே
தொடர்ந்து வர
கடலில் கரைந்த ஒற்றை யானைக்கு
ஓராயிரம் தும்பிக்கைகளென
என் மகள் ஊருக்கெல்லாம்
ஒரு கதை சொல்லிச் செல்கிறாள்.
————————————-
அதனதன் உலகம்

நினைவுகளை கொத்திக் கொத்தி
தோண்டி எடுக்கப்பட்ட புழுவாய்
மரங்கொத்தியின் அலகில்
சிக்கித் தவித்து
சிறு காற்று கிளை அசைக்க
பிடிநழுவி பட்டாம் பூச்சியாய்
திசைவிலகும் நீ

தழும்பாய் வளர்கிறது மரம்
இரை ஏமாற்றிய பசியுடன் பறவை
வானத்தை தன் சிறகுகளில்
சுருட்டி அமர்ந்திருக்கிறது
நீ எங்கு போய்விடுவாய் என்று

பறவையின் பார்வைக்கு அப்பால்
பாறைக்குள் விரிகிறது
தேரையின் இன்னும் ஒர் உலகம்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்.

 

5 responses to “மாலதி மைத்ரி

 1. murugeshan

  மே 9, 2009 at 11:12 முப

  very strong words. every women must keep the words in mind.

   
 2. Soniya

  ஜூன் 26, 2009 at 1:45 பிப

  sooooooooooooooper

   
 3. veerakumar

  மார்ச் 2, 2011 at 3:30 பிப

  super, ella pengalum etha kandipa manasula vachukanum.

   
 4. annadurai

  பிப்ரவரி 15, 2013 at 4:42 பிப

  மனித உறுப்புகளில் பாலுறுப்புகள் செய்த பாவம் என்னவோ ?சிறு வயதிலிருந்தே அது அசிங்கம் தப்பு என்று நாம் வள்ர்க்கப்பட்டதுவும் காரணமோ ?தமிழ் மொழியில் எல்லாச் சொற்களுக்குமே இரண்டுக்கு மேற்பட்ட வார்த்தைகள் உண்டு.அதுபோல் குறிப்பாக ஆணுறுப்பு என்றால்,ஆண்குறி,பாலுறுப்பு.லிங்கம், இனப்பெருக்க உறுப்பு.மர்ம உறுப்பு என்று எத்தனை சொற்கள் இருந்தாலும் தாராளாமாக எந்த சொல்லும் பிரயோகிக்கப்பட்டதாக் தெரியவில்லை.அதற்கான இலக்கியப் பெயெர் தான் என்ன இவ்வாறாக நான் யோசித்துகொண்டிருந்த வேளையில் உங்கள் கவிதை பதில் சொல்ல முயன்றிருப்பது பாராட்டிற்குரியது..நன்றி

   
 5. manoj

  திசெம்பர் 30, 2013 at 10:51 பிப

  no words to express

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: